அயோத்தி தீர்ப்பு மிகப் பெரிய மோசடி: தொல் திருமாவளவன் கண்டனம்

வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது, அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949ல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992ல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும். இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது.

மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப் பெரும் மோசடியாகும். ஏற்கனவே நம்பிக்கை இழந்து விரக்தியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது ஜனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது." இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Koothanallur Muslims

Related

tiruma 4453948784456225551

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item