அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம் - ஈரான் அதிபர்
ஆத்திரமாக வருகிறது என்றே அவர் பேசினார். அவர் குறிப்பிட்டது அமெரிக்காவைத்தான் என்பது அனைவருக்கும் நன்கு புரிந்தது.
“அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதால் அந்த நாட்டின் மீது அடுத்து என்ன நடவடிக்கை என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் பல்வேறு நடவடிக்கைகள் எங்கள் முன்னால் தேர்வுக்கு இருக்கின்றன” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் அதிபர் நிஜாத், தலைநகர் டெக்ரானில் வீட்டுவசதி திட்டத்தை நேற்று தொடங்கி வைக்கும்போது வெகு காட்டமாகப் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:-
அவர்களுக்கு (அமெரிக்கர்களுக்கு) என்ன துணிச்சல் இருந்தால் நம்மை (ஈரானை) இப்படி மிரட்டியிருப்பார்கள். நம்மை என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க அவர்களுக்கு பல முடிவுகள் மேசை மீது குவிந்து கிடக்கிறதாமே? உங்களுக்கு (அமெரிக்காவுக்கு) கடைசி காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வெட்டியானுக்கு சொல்லி வையுங்கள். உலகம் முழுவதையும் வம்புச் சண்டைக்கு இழுத்து அப்பாவிகளை பலிவாங்கும் நீங்களே பலியாவதற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியப் பகுதியை விட்டு வெளியேறுங்கள். இல்லாவிட்டால் இங்குள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து உதைத்து வெளியேற்ற வேண்டியதிருக்கும்.
2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் நியூயார்க், வாசிங்டன் நகரங்களின் மீது அல் கொய்தா பயங்கரவாதிகள்தான் தாக்கினார்கள் என்று உலகையே நம்ப வைத்தீர்களே? அதிலே எங்களுக்கு இன்னமும் சந்தேகம் நீடிக்கிறது.
அது தொடர்பான ஆயிரம் கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்தக் கேள்விகளைக் கேட்பதிலிருந்து நாங்கள் ஓயமாட்டோம், திருப்திகரமான பதில்கள் கிடைக்கும்வரை ஓயமாட்டோம். 3,000 பேரை அந்தச் சம்பவங்களில் பலி கொடுத்துவிட்டதாக கூறுகிறீர்களே? உண்மையான கொலையாளிகளைக் கண்டுபிடித்து தூக்கில் போடுங்கள். அதற்கு நாங்கள் எல்லாவித உதவிகளையும் செய்யத்தயார். ஆனால் அதற்கு தகுந்த ஆதாரங்களை முதலில் தாருங்கள். ஜார்ஜ் புஷ்ஷாக இருந்தாலும் ஒபாமாவாக இருந்தாலும் இந்த கோரிக்கையை ஏற்கவே மாட்டார்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
அதிபர்கள் சொல்வதை அந்த நாட்டு மக்களே நம்பவில்லை, மற்றவர்கள் நம்புவது அப்புறம் இருக்கட்டும். இவ்வாறு அகமதி நிஜாத் பேசினார்.