அயோத்தி தீர்ப்பை எதிர்த்து முறையீடு-தமுமுக தலைவர் BBC தமிழோசைக்கு அளித்த நேர்காணல்
http://koothanallurmuslims.blogspot.com/2010/10/bbc.html
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இரண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் பிரித்தளித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையின் தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து லக்னோவில் கூடி விவாதித்த முஸ்லீம் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட இடம் குறித்த வழக்கு ஓர் சொத்துரிமை வழக்காகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர மத மற்றும் இதர நம்பிக்கைகள் அடிப்படையில் அதை அணுகி தீர்ப்பளிப்பது பாரதூர பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ள பிரபல வழக்கறிஞர்களை வைத்து முக்கிய நகரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதென்று முடிவுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் மனுதாரரான உத்தரப் பிரதேச வக்ப் வாரியம் மேல் முறையீடு செய்யும் போது, இந்தியாவின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அதில் தங்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
KOOTHANALLUR MUSLIMS