நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டியது முஸ்லிம் தலைவர்கள்தான்

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்புக் குறித்து காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் உடனடியாக தங்களது நிலைப்பாட்டை விளக்கவேண்டும் என டெல்லி இமாம் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரிசுத்தவான்களான இத்தலைவர்கள் அரசியல் கட்சிகளை நோக்கி வாயைபிளந்துக் கொண்டு நிற்பதை முடிவுக்கு கொண்டுவரவில்லை என்பதையே இந்த கோரிக்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத் தீர்ப்பே அல்ல என்பதும், அது வட இந்தியாவின் கிராமங்களில் ஆலமரத்திற்கு கீழே வெற்றிலையை மென்று துப்பிக்கொண்டே நாட்டாண்மைகள் கூறும் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்பதும் எல்லோருக்கும் தெள்ளத்தெளிவாக தெரிந்த ஒன்றாகும்.

குறிப்பாக நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் முதல் நீதிபதி சச்சார் வரை இத்தீர்ப்பை நிராகரித்துள்ளனர். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் நிர்கதியற்ற சூழலை கவனத்தில் கொண்ட காங்கிரஸ் கட்சி அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக பிரகடனம் செய்துள்ளது.

நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவுவதற்கான தீர்ப்பு என பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு வந்தபிறகு முஸ்லிம் சமூகத்தில் நிலவும் மயான அமைதியை தவறாக புரிந்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.

கைகால்கள் கட்டப்பட்ட, வாயை இறுக்கமாக மூடிய சூழலில்தான் இந்தியாவில் முஸ்லிம்கள் உள்ளனர் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியாத ஒன்றல்ல.

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயாமும், காலந்தாழ்ந்தாவது சி.பி.எம்மும் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்துத் தெரிவித்த வேளையில், கபடத்தனமாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது காங்கிரஸ்.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை நியாயப்படுத்துவதாக அமையாது என்ற உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிக்கை கேட்பாரற்று தவிக்கும் முஸ்லிம் சமுதாயத்தை அமைதிப்படுத்தும் முயற்சியாகும்.

பீஹார் சட்டமன்றத் தேர்தலும், பல மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களும் நெருங்கி வருகின்றன. இச்சூழலில், முஸ்லிம்களுக்கும் வாக்குரிமை உண்டு என யாரோ காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு உணர்த்தியிருக்கலாம். அதனால்தான் இவ்வறிக்கை.
பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு வெட்டவெளிச்சமான ஒன்றாகும்.

மதசார்பற்றக் கொள்கை, சிறுபான்மையினர் விருப்பங்கள் எல்லாம் காங்கிரஸைப் பொறுத்தவரை கபட நாடகங்களாகும். பெரும்பாலான ஹிந்துத்துவா வாக்குகளை கைப்பற்றுவதே காங்கிரஸ் கட்சி எக்காலமும் கையாளும் நிலைப்பாடாகும். இந்த பெரும்பான்மை ஆதரவு மாயைதான் 1949 இல் பாப்ரி மஸ்ஜிதிற்குள் சிலைகளை திருட்டுத்தனமாக வைத்தபொழுது, அப்பொழுது உ.பி மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு சிலைகளை அப்புறப்படுத்த மறுத்ததற்கு காரணம்.

மஸ்ஜிதை சிலை வழிப்பாட்டிற்காக திறந்து விட்டதும், வக்ஃப் சொத்தில் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியதும், இறுதியாக அத்வானி தலைமையிலான ஹிந்துத்துவா பரதேசி பண்டாரங்கள் பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளுவதை கைக்கட்டி வாய்ப்பொத்தி நின்று வேடிக்கைப் பார்த்ததும் இந்த கொள்கையின்பால் கொண்ட ஈர்ப்பாகும்.

அந்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகத்தான் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பை வரவேற்றதும். சுய பலத்தை பயன்படுத்தி சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவதன் மூலமே இழந்த உரிமைகளை நாம் மீட்கமுடியும். இதுதான் முஸ்லிம் சமுதாயத்திற்கு முன்னாலிருக்கும் ஒரே வழி. அல்லாமல், காங்கிரஸையோ அல்லது இதர அரசியல் கட்சிகளின் வாயை நோக்கி நிற்பதில் எவ்வித பயனுமில்லை.

ஆகவே, உண்மையில் நிலைப்பாட்டை விளக்கவேண்டியது முஸ்லிம் தலைவர்கள்தான்.

பாலைவனதூது விமர்சகன்

Related

MUSLIMS 1845609112450497890

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item