அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை


samuthaayam

தமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13 யை நோக்கி அசுர வேகத்தில் பயனிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிளக்கல்ல இதனை பார்க்கும் பொழுது  அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடுகளையும் பல்வேறு பிரச்சனைக்ளுக்கு மத்தியில் ஒருவழியாக அறிவித்துவிட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவர்களாக  அரசியல் பிரச்சார களத்தை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிதுவத்தை வெளிக்கொணரும் விதமாக தமிழகத்தில் 14 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட தயாராகிவருகின்றனர். இதில் பேசப்படும் பெரிய கட்சிகளாக முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (SDPI) ஆகியவை மக்களிடத்தில் தங்களை நிலை நிறுத்தி இருக்கின்றன. இதில் முஸ்லீம் லீக் ஆளும் கட்சியான திமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், மமக எதிர்கட்சியான அதிமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், தேசிய அரசியல் கட்சியான SDPI இவ்விரு அணிகளையும் சாராமல் தன்னிச்சையாக ஆறு தொகுதிகளிலும் களம் காணும் என்று அக்கட்சிகளின் தலைமை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதே சூழலில் இன்னும் சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளையும் அறிவித்திருக்கின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  அரசியலில்  நாம் போட்டியிடுவதில்லை ஆனால் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதரம் ஆகியவற்றில் முஸ்லிகல் முன்னேற ஆவன செய்யும் கட்சிகளுக்கு ஆதரவு என்றும் மமக எங்கு போட்டியிடுமோ அங்கு அவர்களை தோற்கடிப்பதற்காக வேலைகளை செய்வோம் என்று அறிவித்திருக்கிறது. இதே பொன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அதிமுக-விற்கு தங்கள் ஆதரவு எனவும் முஸ்லிம் வேட்பாளர்கள் எங்கு போட்டியிடுவார்களோ அங்கு அவர்களூக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என அறிவித்திருக்கிறது. இதே போன்று அகில இந்திய இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தம் நிலைப்பாடு SDPI போட்டியிடும் அனைத்து இடங்களிலும் SDPI செயல்வீரர்களூடன் இணைந்து தங்கள் செயல்வீரர்களும் களப்பணி ஆற்றுவார்கள் என்று SDPI க்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலைப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இல்லாமல் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருங்கினைந்து ஒற்றுமையோடு ஒரே கட்சியாக போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் பரவலாக பேச்சு நடைபெறுகிறது. இனிமேல் அவ்வாறு பேசிக்கொண்டு இருப்பதில் பயனில்லை காரணம் இம்மூன்று கட்சிகளும் முடிவுகள் எடுத்துவிட்டது. இனி இதில் மாற்றங்கள் விளைய வாய்ப்புகள் இல்லை. நம் ஒற்றுமையை பற்றி இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தல் வருவதற்கு முன் பேசி சுமூக தீர்வுகாண விளைவதுதான்  புத்திசாலித்தனமாக இருக்கும். நமக்கு இருக்கும் சிறிய கால அளவை வீணடிப்பதை விட்டு விட்டு இந்த மூன்று கட்சிகளில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆராய்வோம்.

முஸ்லீம் லீக் – பல வருடங்கலாக அரசியலில் கூட்டனிவைத்து போட்டியிட்டு வருகின்றது வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் ஏதேனும் நலத்திட்டங்களோ அல்லது சமூக மாற்றத்திர்கான முயற்சிகளோ இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றதா என்றால் அநேக மக்களின் கருத்து இல்லை என்பதாகும். நிதர்சனமும் இதுதான். சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் செல்லும் நம் தலைவர்கள் நம்மை பற்றி பேசுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். இதனால் மக்களுக்கு இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு காலம் அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நாம் இவர்களை தேர்ந்தெடுத்தோம் ஆனால் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இவர்களால் நமக்கு கிடப்பதற்கு வாய்புகளே இல்லை என்னும் அளவிற்கு போய்விட்டது. இதற்கு காரணம் சமூகத்தை பற்றி சிந்திக்காமல் சீட்டில் மட்டும் குறிவைத்து அதற்காக கூலைகும்பிடு போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.

எந்த அளவிற்கு என்றால் சமீப காலத்திற்கு முன்னால் தோன்றிய சிறிய அரசியல் கட்சிகள் கூட தனகென்று தனி சின்னத்தை போராடி பெற்று அதில் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ தன் பலத்தை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களோ காலம் முழுவதும் ஒரே சின்னத்தில் நின்று இரண்டு சீட்டிற்கும் மூன்று சீட்டிற்கும் காலில் விழாத குறையாக சமூகத்தின் தைரியத்தையும், பலத்தையும் சிதைத்துவிட்டனர். அதில் வெற்றி பெற்று சட்டசபை சென்றால் அங்கு குரல் கொடுக்க சொன்னால் கொரடாவில் இல்லாததை பேசக்கூடாது என்று விளக்கம் வேறு இவ்வாறு இருக்கும் இவர்களால் இந்த முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் இது ஒரு பழம் பெறும் கட்சி இது காயிதே மில்லத் சாஹிப் போன்ற சமூகத்திற்காக உழைத்த தன்னலமற்ற தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.  தமிழக அரசியலின் கடந்த கால வரலாறுகளை புரட்டினால் ஆட்சியில் யார் அமர வேண்டும் எனும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலம் பொருந்திய கட்சியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த கட்சியின் இன்றைய நிலையை சற்று சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

அதன் பிறகு உருவாகியுள்ள இரண்டு கட்சிகள். இதில் யாரை தேர்ந்தெடுப்பது மனித நேய மக்கள் கட்சியா அல்லது SDPI யா இதுவே இன்று நம் முன் இருக்கும் மிகப்பெறும் கேள்வி. இதில் சற்று தொலைநோக்கு பார்வையுடனும், நடுநிலையோடும் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். காரணம் இரண்டும் சமூகத்திறகாக கடினமாக உழைக்கும் கட்சிகள் இவர்கள் சட்டசபைக்கு சென்றால் நிச்சயம் நம் சமூகத்தின் நன்மைக்காக உறுதிகுழையாமல் உழைப்பார்கள். ஆனால் இதில் யாரை முதலாவதாக தேர்ந்தெடுப்பது. அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது  என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.

மமக : கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் களத்தை சந்தித்து அதில் தோல்வி அடைந்திருந்தாலும் அந்த தோல்வி அரசியல் அறிவை பெற மமக விற்கு துணைபுரிந்திருக்கிறது. அந்த அனுபவத்தோடு  இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வுடன் இணைந்து போட்டியிடயிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை தரும் கட்சியுடன் கூட்டனி அல்லது எங்கள் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிக்கு எங்களுடைய சமூகத்தின் முழு ஆதரவு என்று ஏதேனும் கோரிக்கை (Demand) வைத்ததாக நமக்கு தெரியவில்லை. இது சீட்டு தந்தால் போதும் என்று அதிமுக-வின் பின்னால் போய்விட்டார்களே என்று எண்ண தோன்றுகிறது. இருப்பினும் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது என்று அறிவித்திருக்கிறது.அதாவது திமுக வை தோறகடிக்க அரசியல் களம் காண இருக்கிறது மமக. எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் சீட்டை மட்டும் எதிர்பார்த்து ஏழு மாதங்களுக்கு முன்பே அதிமுக-வுடன் கூட்டனி பேச்சுவார்த்தை தொடங்கியது நம் சமூகத்தில் இவர்களுக்கு இருந்த நற்பெயரை சீர்குழைக்கும் விதமாக அமைந்துவிட்டது.

அதனோடு சேர்த்து விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது அதை கட்டுபடுத்த வேண்டும் என்ற ஓரிரு கோரிக்கைகளை முன்வைத்தது சமூகம் அதிகாரத்தை அடைவதற்கு போதாது, பொறுந்தாது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகள் சற்று மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றே குறிப்பிடமுடியும். இது போன்ற அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது இவர்களுடைய தலைவர்கள் நம் சமூகத்தில் உள்ள மக்களிடம் கலந்துரையாடாமல் தன் சுய கருத்தை சமூக கருத்தாக அறிவித்தார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆனால் இப்பொழுது இவர்கள் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் வாசகங்கள் நம்மை தடுமாற வைக்கிறது. காரணம் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரங்களில் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் அங்கம் பெற, கிடைத்த இட ஒதுக்கீட்டை முழுமைப் படுத்த, இது போன்ற சமுதாய கோரிக்கைகளை சட்டம் இயற்றும் அவைகளுக்குள் சொந்த அடையாளத்தோடு எடுத்துவைக்க நமக்கு அதிகாரம் தேவை அதற்காக நாம் பலவழிகளை கையால்வோம் அதில் ஒன்றுதான் இந்த கூட்டனி. சீட்டு பெறுவதற்கு முன்னால் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருந்த இவர்கள். சீட்டை பெற்ற பிறகு அதீத கவனமும், அதிகார வர்கத்தில் நாம் அமர்வதற்காக இவர்கள் நடத்திய நாடகாம இருக்குமோ என்றும் கூறத்தோன்றுகிறது. இதை தான் அரசியல் வித்தை என்பார்களோ என்று கூறுமளவிற்கு சிந்தனையில் ஆழ்த்துகிறது.  அந்த அதிகாரம் பெற  என்ற இவர்களது தேர்தல் பிரச்சாரங்ககலை பார்க்கும் போது புலி பதுங்கியது பாய்வதற்கு தான் என்று எண்ணம் எழாமலில்லை.ஆனால் சீட்டை பெறுவதற்கு முன்னமே மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாதது தவறு என்பது மட்டும் உண்மை. அதை நிவர்த்தி செய்யும் விதமாக தான்  இப்பொழுதாவது சமுதாய தலைவர்களை சந்தித்து கொண்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்.

SDPI : இது ஒரு தேசிய அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது. இக்கட்சி தேசிய அளவில் தேர்தல் களம் கண்டு ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் தமிழக அரசியலை பொறுத்தவரை புதிய அரசியல் கட்சிதான். இவர்கள் திருச்சி வார்டு எலக்சனில் சமீபத்தில் போட்டியிட்டார்கள் அது ஒன்றும் மிகப்பெறும் அரசியல் அனுபவத்தை கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் வைக்கும் கோரிக்கைகளும், இவர்கள் விடும் அறிக்கைகளும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை மிஞ்சும் அளவிற்கு இருப்பது விந்தையானதே. தேர்தல் களத்தை சந்திப்பதற்கு முன்னால் இவர்கள் தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளுக்கு வைத்த கோரிக்கை நாங்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் சதவிகித அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு இந்த சட்டசபை தேர்தலில் வழங்கப்பட  வேண்டும் அதாவது தமிழகத்தின் 234 தொகுதிகளில் 23-24 தொகுதிகளை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கபட  வேண்டும்  அவ்வாறு அளிக்கும் கட்சிக்கு  ஆதரவாகவும், அக்கட்சியின் வெற்றிக்காகவும் SDPI போராடும் என்ற அறிவிப்பு செய்தார்கள்.

இது சமூக மக்களிடத்திலும் சரி அரசியல் வ்ட்டாரங்களிலும் சரி புது விதமான யாரும் யோசித்திராத விதத்தில் அதே நேரத்தில் தனது கட்சியை பற்றி சிறுதும் கவலைப்படாமல் அறிவித்த அறிக்கையாகவே தெரிந்தது. காரணம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் இந்த அளவு தைரியமாக அரசியல் கட்சிகளுக்கு Demand வைத்தது யாரும் இல்லை என்பதால். அதை தொடர்ந்து வக்பு சொத்துகளை முறைபடுத்துவது, சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிகளை விடுதலை செய்ய ஆவன செய்வது, பாபர் மசூதி இடிப்பு, மீனவர்கள் பிரச்சனை, கல்வி, வேலவாய்ப்பு, பொருளாதரத முன்னேற்றத்தை கொண்டுவருதல் என அடுக்கடுக்காக இவர்கள் வைத்த கோரிக்கைகள், இவர்கள் அரசியலில் ஆபத்தானவர்கள் என்று அரசியல்வாதிகளை மிரள வைத்தது. அத்தோடு தங்கள் ஒவ்வொரு கூட்டங்களிலும் ஒடுக்கபட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைப்பது இவர்களது கூடுதல் பலம்.

அதன் தொடர்சியாக இவர்களிடத்திலும் சீட்டு பேறம் நடைபெற்றதாக தகவல். ஆனால் அதை உதறி தள்ளிவிட்டு தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது இவர்களது தன்னிம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் காட்டுகிறது.. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் இது தனி மனித மூளையால் சிந்த்திக்க முடியாது இந்த கட்சிக்கு பின்னனியாக ப்லமிக்க போராட்ட குணம் கொண்ட தன்னையும் தன் கட்சியையும் பற்றி கவலை கொள்ளாத, சமூகத்தின் வலிமையை தன் வலிமையாக கொண்டு சிந்திக்கும் நல்ல தலைமை இருக்குமோ என்று பாமரனையும் யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த போரட்ட குணம் இறுதிவரையில் இருந்தால் நல்லது.
கட்சிகளின் நிலைமைகள் இவ்வாறிருக்க போட்டியிடும் தொகுதிகளின்  அடிப்படையில் இம்மூன்று கட்சிகளும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை எற்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும், இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் அரசியல் களத்தில் சந்திக்கின்றன. இவர்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். இந்த இடம் அல்லாமல் SDPI போட்டியிடும் போட்டியிடும் கடையநல்லூர்(நெல்லை மாவட்டம்),  பூம்புகார்(நாகை மாவட்டம்), தொண்டமுத்தூர்(கோவை மாவட்டம்), நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்) ஆகிய நான்கு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் அனைவரும்  SDPI-யை ஆதரிக்க வேண்டும். அதே போன்று மமக போட்டியிடும்  சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி), ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் நாம் அனைவரும் மமக-வை ஆதரிக்க வேண்டும். முஸ்லீம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லீம் லீக்கை ஆதரிக்க வேண்டும். இதில் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கூட கருத்து வேறுபாடு இருக்காது என்று கூட கூற முடியும்.

இதில் குழப்பம் மிகுந்த இராமநாதபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை, அவர்களது கோரிக்கைகள், சமுதாயத்திற்கு பாடுபடும் மனநிலை, அரசியல் கட்சிகளிடம் இவர்கள் செய்த Demand ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இதனை அந்த தொகுதிகளை சேர்ந்த மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதில் குழப்பம் நிறைந்த தொகுதிகளில் அக்கட்சிகளின் கடின உழைப்பு தீர்மானிக்கும் அது போக மீதமுள்ள தொகுதிகளை நாம் குறிப்பிட்டபடி  தேர்தல் களம் கண்டால் இன்ஷா அல்லஹ் நம்மிடமிருந்து 4+2+2 = 8 சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆதலால் ஒற்றுமையில்லை என்ற மனநிலையை அகற்றிவிட்டு முன்னால் இருந்ததைவிட இயக்கங்களின் வருகையினாலும், கட்சிகளின் தோற்றங்களாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பலன்கள் தானே தவிர இழப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.இந்த அடிப்படையில் நாம் பயனித்தால் நிச்சயம் அடுத்த தேர்தலில் நாம் நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து ஓரணியில் அரசியல் களம் காண்பது சாத்தியமாகும். சிந்திப்போம்…….

புதுவலசை பைசல்
Thanks : Thoothu Online

Related

SDPI 9175025796602884323

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item