‘முஸ்லிம்களுக்கான பிரச்னை மாநில அளவிலானது அல்ல, தேசிய அளவிலானது!’


vlcsnap-2011-03-18-23h03m29s32

“முஸ்லிம்களுக்கான பிரச்னை மாநில அளவிலானது அல்ல, தேசிய அளவிலானது!” என்று   SDPI மாநிலப் பொதுச்செயலாளரும், கடையநல்லூர் தொகுதி SDPI வேட்பாளருமான நெல்லை முபாரக் அவர்கள் தூது ஆன்லைனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தூது ஆன்லைனிற்கு அவர் அளித்த நேர்காணல் பின்வருமாறு

கேள்வி: “பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ்”  என்ற “உடன்பாடான அரசியல்”  என்பதை முழக்கமாகக் கொண்டு உங்கள் ஆட்சி துவக்கப்பட்டுள்ளதே… பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ் என்றால் என்ன?

பதில்:முதலில் தூது ஆன்லைன் வாசகர்களுக்கு எனது இதயங்கனிந்த நற்சலாமையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு சின்ன திருத்தம்.  ”பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ்”  என்பது SDPIன் முழக்கம் அல்ல.  அது SDPIன் கொள்கை.

இந்தியத் திருநாடு சுதந்திரம் வாங்கி 63 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இங்குள்ள பூர்வகுடிமக்களான ஒடுக்கப்பட்ட முஸ்லிம், தலித், கிறிஸ்தவ, பழங்குடியின மக்கள் அந்தக் கட்சி வரவேண்டும், இந்தக் கட்சி வரவேண்டும் என்று தீர்மானிக்கும் நிலையிலிருந்து அல்லது வாங்கும் நிலையிலிருந்து கொடுக்கும் நிலைக்கு மாறுவதே பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ்.

சுருங்கச் சொன்னால்,மேற்சொன்ன ஒடுக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைக்கு நேரெதிரான நிலையே பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ். இந்த அடிமைச் சமூகங்களை அதிகாரச் சமூகங்களாக ஆக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கமே இந்தியாவை வழிநடத்துவதற்கு இயலும் என்று SDPI கருதுகிறது. அதே நேரம் SDPIன் முழக்கம் “பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை”. அதாவது இந்த நாட்டைப் பீடித்திருக்கும் பசி, பயம் ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த முழக்கத்தை முன்வைத்துள்ளோம். இந்த முழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகள் மக்களை மேற்கண்ட நிலையிலிருந்து விடுவிக்கும் வரை தொடரும்.

கேள்வி: உங்கள் கட்சியின் பொதுவான செயல்திட்டம் என்ன?

பதில்:தற்போதைய மக்களின் நிலையையும், நாட்டின் நிலையையும் உயர்த்துவதற்காக பல்வேறு செயல்திட்டங்களை மக்கள் முன்னால் SDPI பல கட்டங்களாக அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, எல்லா தரப்பு மக்களும் இந்தியாவின் வளங்களை அனுபவிப்பதிலும், அதிகாரத்தை அடைவதிலும் சமநிலையை அடைய வேண்டும் என்ற நோக்கோடு எங்களின் தற்போதைய செயல்திட்டம் அமைந்துள்ளது.

கேள்வி: “பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை” என்ற முழக்கத்தை தாங்கள் முன்வைப்பதன் காரணம் என்ன?

பதில்:இந்த முழக்கத்தை SDPI முன்வைப்பதற்கு அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு ஆணையங்களும், அறிக்கைகளும், சூழ்நிலைகளுமே காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பசியை எடுத்துக்கொண்டால் இந்த நாட்டில் சுமார் 74.6 சதவீத மக்களின் ஒரு நாள் வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது. அதேபோல் உலகத்தில் உள்நாட்டுக் கலவரங்களும், போர்களும் நடந்துகொண்டிருக்கும் நாடுகளில் இல்லாத அளவுக்கு வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை, உணவின்றி தவிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இந்தியாவில் உள்ளது. ஏன், எலிகளையும், மாங்கொட்டைகளையும் உண்ணும் அளவுக்கு கொடூரமான சூழ்நிலை இந்த நாட்டில் நிலவுகிறது. ஏழைகள் நாளுக்கு நாள் மேலும் ஏழைகளாகவே மாறுவதையும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முதலாளிவர்க்கம் தொடர்ந்து பணக்காரர்களாக மாறி வருவதையும், இந்த நாட்டின் இயற்கை வளங்கள் குறிப்பிட்ட சில சமூகங்களின் குடும்பச் சொத்தாக மாறி வருவதையும் SDPI கண்டு இதனை மாற்ற உறுதி பூண்டது.

இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். பசியுடன் மட்டும் மக்கள் அவதிப்படவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகி தங்கள் உயிர், உடைமைகளை இழந்து வருகின்றனர். அதேபோல் தலித்துகள் அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையினால் தினம் தினம் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களின் உயிர், உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.

இப்படி ஆதிக்கவர்க்கத்தின் அடக்குமுறைகளைக் கண்டும், அரச பயங்கரவாதத்தைக் கண்டும் அச்சமடைந்துள்ள சூழலில், இதிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டிய மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத நிலையை SDPI காண்கிறது. இந்த நாட்டை வல்லரசாக உருவாக்க வேண்டும் என்றால் நாட்டின் பூர்வகுடிமக்களின் உள்ளத்திலிருந்து பயத்தையும், வயிற்றிலிருந்து பசியையும் போக்கவேண்டிய தேவை உள்ளதைக் கண்டுதான் SDPI மேற்கண்ட முழக்கத்தை முன்வைத்திருக்கின்றது. எனவே மேற்கண்ட அவல நிலையைப் போக்க இந்திய மக்கள் அனைவரும் SDPIன் கரத்தை வலுப்படுத்தவேண்டும்.

கேள்வி: முஸ்லிம்களுக்காக முஸ்லிம் லீக் என்ற கட்சி இருக்கிறது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் த.மு.மு.க.வால் உருவாக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம் சமுதாயத்திற்கான பிரதிநிதியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் உங்கள் கட்சியின் அவசியம் என்ன?

பதில்:SDPI என்பது முஸ்லிம்களின் கட்சியல்ல. தலித்துகளின் கட்சியுமல்ல. கிறிஸ்தவர்களின் கட்சியுமல்ல. மாறாக, அது அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சி. அதேவேளை, அரசியலில் முஸ்லிம்கள் திட்டமிட்டு புறந்தள்ளப்படுவதைக் கண்டு அவர்களுக்காக யாரும், எந்தக் கட்சியும் குரல் கொடுக்காத நிலையில், அவர்களது நிலையை மாற்ற முயற்சி செய்யாத நிலையில் SDPI மட்டுமே முஸ்லிம்களின் நலனைக் கருத்தில்கொண்டு தனது குரலை உயர்த்தி வருகிறது.

மேலும் முஸ்லிம்களுக்கான பிரச்னை என்பது மாநில அளவிலானது அல்ல. அது தேசிய அளவிலானது. ஆகவே முஸ்லிம்களின் பிரச்னைக்குத் தீர்வு, அதேபோல் தலித்துகளின் பிரச்னைக்குத் தீர்வு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அதிகார அவைகளில் ஒலிக்கும் போராட்ட அரசியலை அடிப்படையாகக் கொண்டே அமையும். இதனைச் சாதிக்க SDPI-யால் மட்டுமே முடியும்.

கேள்வி: முஸ்லிம்கள் பல்வேறு அரசியல் கட்சிகளிலும், இயக்கங்களிலும் பிரிந்து கிடக்கின்றனர். இந்நிலையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒரே தலைமையின் கீழ் திரள்வதற்கான வாய்ப்புகள் தமிழகம் மற்றும் இந்தியாவில் தென்படுகிறதா?

பதில்:இதுவரை முஸ்லிம்களிடையே செயல்பட்ட கட்சிகளும், இயக்கங்களும் முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு உண்மையான தீர்வை செயல்படுத்தாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. SDPIயைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரச்னைகளுக்குத் தீர்வைச் சரியான முறையில் கண்டறிந்து செயல்படுத்தி வருவதால் SDPIன் தலைமையின் கீழ் சுமார் 16 மாநிலங்களில் மக்கள் அணி அணியாக, அலை அலையாகத் திரண்டு வருகின்றனர்.

கேள்வி: தலித்துகளுக்கும், பிற ஒடுக்கப்பட்ட இனத்தவர்களுக்குமென தனியாக கட்சிகள் செயல்படுகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் தலைமை வகிக்கும் கட்சிகளில் அவர்கள் இணைந்து செயல்பட வாய்ப்புகள் உள்ளனவா?

பதில்:இதில் இரண்டு கேள்விகள் உள்ளன. சில தலித் இயக்கங்களைத் தவிர பெரும்பான்மையான தலித் அமைப்புகளும், கட்சிகளும் தலித்துகளின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் இதுவரை கொண்டு வரவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் தலித்துகளின் நலனில் அக்கறையுள்ள முஸ்லிம்களும், முஸ்லிம்களின் நலனில் அக்கறையுள்ள தலித்துகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, SDPI மூலம் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் முஸ்லிம்களும், தலித்துகளும் ஒன்றிணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதே அதற்கு சாட்சி.

கேள்வி: கட்சி துவங்கி ஒன்றரை வருடங்களிலேயே தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் 6 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக துணிச்சலாக அறிவித்துள்ளீர்கள். இத்தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

பதில்:நிச்சயமாக நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக, தமிழகம், புதுவை மக்களைப் பொறுத்தவரை ஒரு கொள்கையுள்ள, அதேநேரம் அந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் ஆற்றலுள்ள கட்சிகளை வரவேற்பதில் அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புகிறோம். SDPI 65 தொகுதிகளில் வெற்றி-தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தியாகவும், 25 தொகுதிகளில் யார் வரவேண்டும் என்று நிர்ணயிக்கும் சக்தியாகவும் இருக்கின்ற நிலையில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இதுபோன்ற நம்பிக்கைக்கு தமிழக மக்கள் வரவேற்பளித்த வரலாறும் நம் முன் உண்டு.

கேள்வி: ம.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகளைப்போல் ஏதாவது ஒரு முக்கிய கட்சியுடன் இணந்து போட்டியிட்டிருக்கலாமே?

பதில்:நிச்சயமாக ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சிகளுடன் இணைந்து அதிகாரப் போட்டியில் பங்கெடுப்பதை SDPI விரும்புகிறது. ஆனால் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ம.ம.க. அ.தி.மு.க. அணியிலும், முஸ்லிம் லீக் தி.மு.க. அணியிலும் இணைந்துள்ள சூழலில் SDPI தனது பலத்தை நிரூபிக்க தனித்து 6 தொகுதிகளில் போட்டியிடும் சூழலில் இது சாத்தியமற்றது.

மேலும் மேற்கண்ட இரு கட்சிகளுடனும் இணைந்து போட்டியிடுவதைத் தீர்மானிப்பது மேற்கண்ட கூட்டணியின் தலைமைதான் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

கேள்வி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கம்தான் உங்கள் கட்சியை இயக்குவதாகக் கூறுவது பற்றி…?

பதில்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைப் பொறுத்தவரை SDPI உருவாவதற்கும், வளர்வதற்குமான அனைத்து உதவிகளையும் செய்தது. அதேவேளை SDPI தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டது. இதற்கென்று தனியான நிர்வாகக் குழுக்கள் உள்ள நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நம்மை இயக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. இரண்டிற்கும் நிர்வாக ரீதியிலான எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் தற்போதைய SDPI-ன் நிலைப்பாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் ஆகிய அமைப்புகள் ஆதரிக்கின்றன.

கேள்வி: சமீபத்தில் உங்கள் கட்சியின் சென்னை மண்டல மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளீர்கள். பொதுவாகவே, தேர்தல் நேரங்களில் மாநாடு நடத்தி தங்கள் பலத்தை நிரூபிப்பது பல அரசியல் கட்சிகளின் யுக்தியாகும். தூய்மையான அரசியல் களத்தை உருவாக்க விரும்பும் நீங்களும் இம்மாதிரியான மாநாட்டை நடத்தியதன் காரணம் என்ன?

பதில்:SDPI நடத்திய மண்டல மாநாடு என்பது தனி நபரின் செல்வாக்கை நிரூபிப்பதற்காக நடத்தப்பட்ட மாநாடு அல்ல. சுருங்கச் சொல்வதென்றால், இது 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல மாநாடு என்றாலும் மாநில மாநாடு அளவுக்கு மக்கள் SDPIன் பின்னால் அணி திரண்டனர்.
அதேநேரம் தூய்மையான கொள்கை அரசியலைப் பரவலாக்கும் நோக்கத்தோடு இந்த மாநாடு நடைபெற்றது.

குறிப்பாக, தற்போதைய அரசியல் கட்சிகள் மாநாடுகளுக்கு பணமும், உணவும் கொடுத்து அழைத்து வரும் நிலையில் SDPI நடத்திய மாநாட்டுக்கு வந்த மக்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து கலந்து கொண்டார்கள். இது பத்தோடு பதினொன்றாவது கட்சி நடத்தும் மாநாடல்ல, இது SDPIன் முத்தான மாநாடு என்பதை நிரூபித்துள்ளது.

கேள்வி: மாநாட்டு விளம்பரங்களிலெல்லாம் “அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்!” என்ற முழக்கம் பளிச்சிட்டது. இதற்கு ஏதேனும் பின்னணி உண்டா?

பதில்:நிச்சயமாக பின்னணி உண்டு. தற்போதைய அரசியல் என்பது சாக்கடையாகி, கிரிமினல்களின் கூடாரமாக மாறியுள்ள சூழலில், அரசியலைப் பரிசுத்தப்படவேண்டிய நாட்டிலுள்ள நல்லவர்கள் அரசியலைக் கண்டு ஒதுங்குவது என்பது மேற்கண்ட நிலையை இன்னும் ஆபத்தானதாக்கும் என்று கருதி நல்லவர்கள் அரசியலை நமதாக்க எண்ணி அரசியலில் நுழைய வேண்டும், அதேநேரம் தேசத்தின் வளங்கள் அனைவருக்கும் கிடைக்காமல் சில குடும்பங்களின் சொத்தாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்ற காரணங்களைக் கருத்தில்கொண்டுதான் SDPIன் மண்டல மாநாட்டின் முழக்கமாக “அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்!”  என்ற கொள்கை முழக்கத்தை நாட்டு மக்களுக்கு SDPI அறிமுகப்படுத்தியது.

ஆகவே தூதுஆன்லைன் இணையதளம் வாயிலாக SDPI இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் அனைவரையும் அரசியலை நமதாக்க வேண்டியும், தேசத்தைப் பொதுவாக்க வேண்டியும், இந்நாட்டு மக்களின் பசியையும், பயத்தையும் போக்க வேண்டியும் SDPIன் கரங்களை வலுப்படுத்த வாருங்கள் வாருங்கள் என அழைக்கிறேன்.

“மாறும்” என்ற சொல்லைத் தவிர அனைத்தும் மாறும், எம்மால் முடியும் என்று உங்களை அழைத்தவனாக இந்தப் பேட்டியை முடித்துக்கொள்கிறேன்.

Source : Thoothu Online

Related

TMMK 6280373776612173639

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item