தமிழக முஸ்லிம் அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் மரணம்

தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரியம் பிச்சை. தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவை எதிர்த்து போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

60 வயதான மரியம் பிச்சை அ.தி.மு.க. தொடங்கப்பட்ட காலம் முதல் உறுப்பினராக இருந்து வந்தார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர், கட்சி நடத்திய எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டார். முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வான அவருக்கு, ஜெயலலிதா அமைச்சர் பதவி வழங்கினார்.

கடந்த திங்கட்கிழமை (16-ந்தேதி) அவர் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக அவர் சென்னையில் முதல் – அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக்கூட்டங்களில் கலந்து கொண்டார். நேற்று முன்தினம் அவர் தன் சொந்த ஊரான திருச்சி சங்கிலியாண்டபுரத்துக்கு சென்றார். அங்கு அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அதன் பிறகு உடனடியாக சென்னை திரும்பிய அமைச்சர் மரியம்பிச்சை, நேற்று காலை கோட்டையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டம் முடிந்ததும் தனது துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழாவுக்கு வருமாறு, அவரது ஆதரவாளர்கள் அழைத்தனர். அதை ஏற்று அமைச்சர் மரியம்பிச்சை நேற்று மதியம் 12 மணிக்கு திருச்சி புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் விளை யாட்டுத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் சென்றார்.

நேற்றிரவு திருச்சியில் அவர் கட்சிப் பிரமுகர்களை சந்தித்துப் பேசினார். பிறகு சங்கிலியாண்டபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்தார். இன்று (திங்கட்கிழமை) காலை திருச்சி ஒத்தகடை மாநகராட்சி சாலையில் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் அமைச்சர்கள் மரியம்பிச்சை, சிவபதி இருவரும் கலந்து கொண்டு முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பிறகு அவர்கள் இருவரும் சென்னையில் இன்று நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அவசரம், அவசரமாக புறப்பட்டனர்.

அமைச்சர் மரியம்பிச்சை இன்னோவா காரில் புறப்பட்டு வந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு காரில் அமைச்சர் சிவபதி வந்தார். அமைச்சர்களின் கார் காலை 7 மணி அளவில் திருச்சி சமயபுரத்தை கடந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் பாடாலூர் ரோட்டில் திருவேலங்குறிச்சி என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்தது. எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழாவுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்து விட வேண்டும் என்ற அவசரத்தில் காரை டிரைவர் ஆனந்தன் வேகமாக ஓட்டியதாக தெரிகிறது. அப்போது அந்த 4 வழிச் சாலையில் முன்னால், ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

அந்த லாரியை அமைச்சர் மரியம்பிச்சை கார் முந்தி செல்ல முயன்றது. அப்போது டிரைவர் ஆனந்தனின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. கண்மூடி கண் திறப்பதற்குள் கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் அமைச்சரின் கார் மோதியது. இதில் காரின் இடது பகுதி சுக்கல்-சுக்கலாக நொறுங்கியது. காரின் முன்பக்கம் இடது பக்க இருக்கையில் தான், அமைச்சர் மரியம்பிச்சை இருந்தார். கண்டெய்னர் லாரி குத்தியதில் அவர் படுகாயம் அடைந்து ரத்து வெள்ளத்தில் மிதந்தார். சில நிமிடங்களில் அங்கேயே அவர் உயிர் பிரிந்தது. அமைச்சர் கார் விபத்தில் சிக்கியதை கண்டதும், மற்ற கார்களில் வந்த
அ.தி.மு.க. நிர்வாகிகளும், பாதுகாப்பு போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் ஓடோடி வந்து அமைச்சர் மரியம்பிச்சையை கார் இடிபாடுகளில் இருந்து மீட்டனர். அவர் மரணம் அடைந்து விட்டதை அறிந்து கதறி அழுதனர். இதற்கிடையே மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அமைச்சர் சிவபதியின் கார், விபத்து நடந்த பகுதிக்கு வந்தது. மரியம்பிச்சை கார் விபத்துக்குள்ளாகி கிடப்பதை கண்டதும் அவர் ஓடோடி வந்தார். மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்து விட்டார் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. 30 நிமிடங்களுக்கு முன்பு சகஜமாக பேசி விட்டு வந்த அமைச்சர் மரியம்பிச்சையின் உடலை கண்டு அமைச்சர் சிவபதி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அ.தி.மு.க. மூத்த தலைவர்களை தொடர்பு கொண்டு அவர் தகவல் தெரிவித்தார். மரியம்பிச்சை உடல் 7.30 மணி அளவில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடலைப்பார்த்து திருச்சி அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கதறி அழுதனர். அவரது உடல் பிரேத பரிசோதனை திருச்சி மருத்துவமனையில் உடனடியாக செய்யப்பட்டது. பிறகு அவர் உடல் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன், மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, குமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பரஞ்சோதி, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சுப்பு, முன்னாள் மாவட்ட செயலாளர் முருகையன் உள்பட ஏராளமானவர்கள் மரியம்பிச்சை உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அமைச்சராக பதவி ஏற்ற ஒரு வாரத்துக்குள் மரியம்பிச்சைக்கு ஏற்பட்ட சோக முடிவு திருச்சி அ.தி.மு.க.வினரை நிலை குலையச் செய்து விட்டது.

Muthupet.Org

Related

TAMIL MUSLIM 8656685982744262848

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item