மாட்டை முன்வைத்து மீண்டும் மதக் கலவரம்?

RSS – காவல் துறை கூட்டுச் சதி

மதுரை RSS அலுவலகத்தில் மாட்டுத் தலை வீசிய மர்ம நபர்கள்'' என்ற செய்தியை மார்ச் 2 அன்று வாசிக்கையில், மதுரையில் பொதுவாக நிலவும் ஓர் அமைதியான சூழலைத் தகர்க்க யாரேனும் முடிவு செய்து விட்டார்களோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. ஏனெனில், மதுரை நகரத்தில் உள்ள மசூதியில் இதே போன்றதொரு சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்துள்ளது.மதுரை நகரத்தின் மய்யத்தில் உள்ளது காஜிமார் தெரு. மிகப் பெரிய பள்ளிவாசலும், அதனைச் சுற்றிலும் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் இருப்பிடங்களும் நிறைந்த பகுதி இது. 2010 டிசம்பர் 29 அன்று காலையில் தொழுகைக்காக வந்த சகோதரர்கள், பள்ளிவாசலில் பன்றியின் வெட்டப்பட்ட ஒரு பகுதி கிடந்ததை கண்டனர். உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பன்றியின் உடலைப் பார்த்த முஸ்லிம்கள், மிகுந்த மன வேதனை அடைந்தனர். அங்கு வந்த காவல் துறையினர் அதனை ஒரு மூட்டையில் சுற்றி, எடுத்துச் சென்றனர். முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் காவல் துறை யினரை சந்தித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், காவல் துறையினர் இவ்வழக்கை "அற்புதமாக' விசாரித்து நியாயம் வழங்கினர். "அங்கு கிடந்தது கோழிக்கழிவுகள்தான்; எனவே, இதைப் பிரச்சனையாக்க வேண்டாம்' என காவல் துறையினர் கூறிவிட்டனர்.

madurai_mosqueஇதே போல சில மாதங்களுக்கு முன்பு, தாராபுரம் பள்ளி வாசலின் வாயில் முன்பு பன்றியின் உறுப்புகள் அடங்கிய மூட்டை ஒன்று கிடந்தது. தாராபுரம் பிரச்சனையையும் காவல் துறையினர் கோழியென்றே முடிவு கட்டினர். காஜிமார் தெரு பள்ளிவாசலின் வாயிலில் மீண்டும் சனவரி 1, 2011 அன்று இந்த சமூகம் கொந்தளிக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதிகாலை தொழுகைக்காக வந்தவர்கள் பள்ளிவாசல் சுவற்றில் மனித மலம் பூசப்பட்டிருந்ததையும், பள்ளிவாசல் வளாகத்துக்குள்ளே மலம் வீசப்பட்டிருப்பதையும் பார்த்தவுடன் – அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே பள்ளிவாசலில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றும் திடீர் நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்கிற துப்புரவுத் தொழிலாளர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

அனைத்து "ஜமாத்து'களையும் ஒன்று திரட்டி, இதற்கு நியாயம் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்கிற உணர்வு மேலெழுந்தபொழுது, "இது இந்த தெருவின் பிரச்சனை, இதில் அடுத்த ஜமாத்காரர்கள் தலையிட வேண்டாம்' என விஷயத்தை மூடி மறைத்தார், மதுரை மத்திய தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கவுஸ் பாட்சா. அப்பகுதி மக்கள் பள்ளிவாசலுக்கு சடங்குகள் செய்து சுத்தப்படுத்தினர். இப்பின்னணியில்தான் மாட்டுத்தலை வீசப்பட்ட நிகழ்வு ஏற்படுத்திய பதற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்ச் 1 அன்று காலை 6.45 மணிக்கு RSS (ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் என்ற இந்து மதவெறி அமைப்பு) மாவட்டச் செயலாளர் அசோகன், அருகில் உள்ள எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். மதுரை காவல் ஆணையர் பாரி, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் குமரவேல், திலகர் திடல் துணை ஆணையர் ராஜசேகர் மற்றும் ஏராளமான போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒரு சிறிய பிளாஸ்டிக் பை RSS அலுவலகத்தின் வாசலில் இருந்தது. பதற்றம் ஏதுமின்றி சிரித்த முகத்துடன் காவல் துறையினருடன் RSS தலைவர்கள் உரையாடினர். அதன் பிறகு காவல் துறையினர், அந்த பிளாஸ்டிக் பையை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். அப்பொழுது அங்கு திரண்டிருந்த 30 தொண்டர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், காவல் துறை அதிகாரி அந்த பையை RSS  அசோகனிடம் இருந்து பறித்து, ஒரு துணை ஆய்வாளரிடம் வீசினார். அதன் பிறகு ஆணையர் பாரியை அங்கிருந்தவர்கள் மறித்தனர். சில வாக்குறுதிகளுக்குப் பிறகு அவர் அங்கிருந்து சென்றார்.

காவல் துறை மிக துரிதமாக அன்றே புகாரின் அடிப்பøடயில் இ.பி.கோ. 153(அ), 505(1)(இ) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இருப்பினும், RSS காரர்களின் குறிக்கோள் நிறைவேறவில்லை. அந்த மாட்டுத்தலையுடன் மதுரை நகரத்தின் முக்கிய வீதிகளில் வலம் வருவதுதான் அவர்களின் திட்டம். அதன் மூலம் இங்குள்ள பெரும்பான்மை இந்துக்களின் அனுதாபத்தைப் பெற நினைத்தனர். ஆனால், அது நடக்கவில்லை. அந்த பிளாஸ்டிக் பை மிகச் சிறியது. அதில் இருந்தது மாட்டுத்தலைதானா என்ற கேள்வியும் இருக்கிறது. அந்த மாட்டுத்தலையின் புகைப்படத்தை இது வரை எவரும் பார்க்கவில்லை. ஆனால், அடுத்த நாள் பத்திரிகைகளில் இது முக்கிய செய்தியாக வெளிவந்தது. ஆங்கில நாளிதழ்கள் இதனை சிறிய செய்தியாக வெளியிட்டபோதும், அகில இந்திய பதிப்புகள் அனைத்திலும் இடம் பெறச் செய்தன.

சில நாட்களில் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை "வைகை ஸ்பெஷல் டீம்' என்ற தனி போலிஸ் படையிடம் ஒப்படைத்தார் ஆணையர். வைகைப் படை தனது விசாரணையை தொடங்கியது. மசூதி பள்ளிவாசலில் பன்றியின் உறுப்புகள் காணப்பட்டபோது, அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத காவல் துறை, RSS அலுவலகத்தின் முன்பு மாட்டுத் தலையுடன் சிறிய பிளாஸ்டிக் பையை கண்டதும் அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுக்கிறது. அதற்காக, ஒன்றுமறியாத முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக, மனித நெறிமுறைகளின்றி எப்படி எல்லாம் துன்புறுத்துகிறது என்பதை இனி பார்ப்போம்.

மார்ச் 8 அன்று நண்பகல் 1 மணிக்கு பரகத்துல் அன்சாரி என்பவரின் ஆட்டோவில் ஒருவர் ஏறி, "கிரைம் பிராஞ்ச்' செல்ல வேண்டும்' என்றார். அங்கு சென்றதும் அருகில் இருந்த காவல் துறை வளாகத்துக்குள் அந்த நபர் அன்சாரியை அழைத்துச் சென்றார். அங்கு காத்திருந்த "வைகை படை'யினர், அன்சாரியை வேனில் ஏற்றி அவருடைய கண்களை கட்டினர். அடுத்து அவரது பகுதியை சேர்ந்த பாஷா எங்கு இருப்பார் என்று விசாரித்தனர். அன்சாரி, "ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்கிறீர்கள்' என கேள்வி கேட்க, அவருக்கு சரமாரியாக அடி விழுந்தது. பின்பு மற்றொரு ஆய்வாளர், "நீயும் பாஷாவும் அடிக்கடி தண்ணி அடிப்பீங்கல்ல; நீ அவனை டாஸ்மாக் பாருக்கு வரச்சொல்' என அன்சாரியை ராம் விக்டோரியா தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இழுத்து வந்தனர். அங்கு, பாஷாவை செல்போனில் அழைக்குமாறு அன்சாரியை நிர்பந்தித்தனர். 5 நிமிடங்களுக்குள் பாஷா அந்த டாஸ்மாக் பாருக்குள் நுழைய, இருவரையும் ஏற்றிக் கொண்டு வாகனம் அண்ணாமலை திரையரங்குக்கு சென்றது.

ஒரு மணி நேரம் கழித்து அல்லாஜி, அப்பாஸ் ஆகிய இருவரையும் பற்றி விசாரித்தனர். "அப்பாஸ் ஊரில் இல்லை, நாகூர் சென்றுள்ளான்' என பாஷா பதில் அளிக்க, அவரை திரையரங்கில் விட்டு விட்டு, அன்சாரியை வாகனத்தில் ஏற்றினர். அல்லாஜியை பற்றி விவரங்களை கேட்டுத் தாக்கினர். வலி தாங்காமல் அன்சாரி, அல்லாஜியை அழைத்தார். பைபாஸ் ரோட்டில் உள்ள ஜெயசக்தி ஓட்டலுக்கு வரும்படி கூறினார். ஜெயசக்தி ஓட்டலுக்கு வந்த அல்லாஜியை மடக்கிப் பிடித்து வண்டியில் ஏற்றினர்.

வண்டியில் ஏற்றியதும் அல்லாஜியை சரமாரியாக அடித்தார்கள். அங்கிருந்து வாகனம் காந்தி மியூசியம், தெப்பக்குளம் என நகரத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றது. "நீங்கள்தான் RSS அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசியவர்கள். நீங்களே குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள்'' என ஆய்வாளர் ஒருவர் சொல்லும்போதுதான் – எதற்காக தாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம் என்பதே அம்மூவருக்கும் தெரிந்தது. தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை என மூவரும் மறுத்தும் காவலர்கள் விடவில்லை. மூன்று பேரின் கண்களும் கட்டப்பட்டு, மீண்டும் அடி உதை தொடர்ந்தது. 

இரவு 9 மணி அளவில் வாகனம் செல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றது. சிறிது நேரத்தில் அங்கு வந்த துணை ஆணையர் செந்தில்குமாரி, 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். "நீங்க செய்யல, ஆனா உங்களுக்கு யார் செஞ்சாங்கன்னு தெரியும். நீங்க இப்ப சொல்லலேனா, உங்க பொண்டாட்டி, அம்மா மேல விபச்சார வழக்குப் போடுவோம்', போயி இவங்க பொண்டாட்டிகள தூக்கிட்டு வாங்க' என கத்தினார். மீண்டும் அடி உதை! கைகளை துண்டால் கட்டி இருவர் இறுக்க, கால்களின் மீது பூட்ஸ் கால்களுடன் இருவர் மிதிக்க, வாயில் துண்டைத் திணித்தனர். "அடிக்காதீங்க சார், ப்ளேட் வச்சி ஆப்பரேசன் பண்ணின கால் சார்' என அன்சாரி கதறுகிறார். "அப்படியா எந்த எடத்துல ப்ளேட் இருக்கு' எனக் கேட்டு அந்த இடத்திலேயே மிதித்தனர்.

rabeek_raja_familyஅடுத்து, ரபீக் ராஜா மற்றும் அப்பாஸ் அழைத்து வரப்பட்டனர். இருவருக்கும் தனியான "ட்ரீட்மெண்ட்.' மார்ச் 9 காலை 5.30 மணிக்கு அப்பாஸ், ராஜா மைதீன் (எ) பொத்தப்பாவை அழைக்கிறார். இவர் மகபூப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர். ஆய்வாளர் பார்த்திபன், இவருக்கு நன்கு அறிமுகமானவர். “உங்க ஏரியாவுல மாட்டு தலைய பத்தி ஏதாவது பேசினாங்களா? நீ தான் போட்டயாம்ல, உனக்கு தெரியாம இருக்காது. யார் போட்டாங்கனு மட்டும் சொல்லு'' என கேட்டார். அடுத்து அவரும் வேனில் ஏற்றப்பட்டார். அந்த வாகனத்தில் சாயின்ஷாவும், அப்பாசும் உதடுகள் கிழிந்து, கண்கள் வீங்கிய நிலையில் காணப்பட்டனர். அங்கிருந்து வைகை ஆற்றங்கரைக்கு வாகனம் சென்றது.

அங்கு ராஜா மைதீனை உடைகளை களைந்து நிர்வாணமாக்கினர். "ஆத்துல எந்த இடத்துல மாட்டை அடக்கம் பண்ணுனீங்க' என கேட்டனர். இவர்கள் தெரியாது என மறுத்தும் "எந்த எடத்துல மாட்ட பொதச்சீங்களோ அத தோண்டுங்க' என்று சொல்லி கடப்பாறையைக் கொடுக்கவும், "சார் கேஸ் போட்டுக்கங்க சார் அடி தாங்க முடியல' என மன்றாடினர். அடுத்த அரை மணி நேரத்தில், அனைவரும் செல்லூர் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளாக அடைத்து வைக்கப்பட்டனர். மகபூப்பாளையத்தை சேர்ந்த 20 பேரின் பட்டியலை காண்பித்தது வைகைப்படை. இப்பட்டியலில் மகபூப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர்களின் மொத்த விவரங்கள் இருந்தன. அடுத்து அந்தப் பட்டியலில் இருந்த சாகுலை குறிவைத்தனர். அவர் ஆரப்பாளையத்தில் ஒரு தையல் கடையில் வேலை செய்யும் தொழிலாளி. வைகைப் படை அவரையும் பிடித்து வாகனத்தில் ஏற்றியது.

அடுத்த நாள் காலை சாயின்ஷா, சாகுல் ஆகியோரை அழைத்துச் சென்று, விற்பதற்காகக் கொடுத்திருந்த சாகுலின் இரு சக்கர வாகனத்தை மெக்கானிக்கிடமிருந்து கைப்பற்றினர் காவலர்கள். இப்பொழுது மாட்டுத் தலையை ஏற்றி வந்த வண்டி தயார். சந்தைக் கடையில் சில கத்திகளை வாங்கி காவலர்கள் வண்டியில் வைத்தனர். இவை தான் மாட்டுத்தலையை அறுக்க பயன்படுத்திய கத்திகள். கத்தி வேலை தெரிந்த ஒரு நபர் வேண்டும் என்பதற்குதான் சாயின்ஷா முக்கியமாக பிடிக்கப்பட்டார். கத்தியும் வண்டியும் தயார். கைது செய்த எட்டு பேரும் குற்றத்தை ஒப்புக் கொள்வதில் தான் பிரச்சனை. "என்னங்கடா எல்லாரும் ஒரே மாதிரி தெரியல தெரியலைனு சொல்லுறீங்களேடா' என சரமாரியாக இவர்களின் குடும்பப் பெண்களை இழிவுபடுத்தி வசை பொழிந்தனர்.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்ட தகவல், பள்ளிவாசல் இமாம், கவுசுக்கு தெரியவந்தது. அவர் உடனே உதவி ஆணையரையும் உளவுப் பிரிவினரையும் தொடர்பு கொள்கிறார். முதலில் மறுத்த காவல் துறையினர் விசாரணை நடைபெறுவதை ஒப்புக்கொண்டனர். மறு நாள் 11 அன்று காலை, ஆய்வாளர் பார்த்திபனை இமாம் கவுஸ், எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் சந்தித்தார். "பாய் அதுல 5 பேர் ஒத்துக்கிட்டாங்க, 3 பேர் மேல தப்பு இல்லை, அவங்க வெளிய வந்திடுவாங்க' என்றார். அன்று மதியம் தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சூழல் பரபரப்பாகிறது. ஆணையர் பாரி, காவல் துறை உதவி ஆணையர் செந்தில்குமாரி, நுண்ணறிவு உதவி ஆணையர் குமரவேல் ஆகியோர் "விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் நீதிபதி முன்பு நிறுத்தினர்.

மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆஷா கவுசல்யா ஷாந்தினி, கைது செய்யப்பட்டவர்களின் முகத்தைகூட பார்க்காமல் – ஏற்கனவே எழுதி தயார் நிலையில் இருந்த ஆவணங்களில் கையொப்பமிட்டார். உறவினர்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு சிகிச்சைக்கு உத்தரவிட்ட நீதிபதி சில வார்த்தைகளை அதில் இணைத்தார். மார்ச் 17 வரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இப்பிரச்சனையை மதுரையில் உள்ள 90 ஜமாத்துகளின் அமைப்பான "மதுரை அய்க்கிய ஜமாத்' கையிலெடுத்தது. காவல் துறை அதிகாரிகளை சந்திப்பது, மவுன ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவல் துறையின் சார்பாக பெறப்பட்டுள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில், பிப்ரவரி 28 அன்று நள்ளிரவில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் – தண்ணீர் தொட்டிக்கு அருகில் உள்ள வைகை ஆற்றில் சுற்றித் திரிந்த கன்றுக்குட்டியை பிடித்து, அதன் தலையை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து, உடலை ஓடும் ஆற்று நீரில் வீசிவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் வாசலில் எறிந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கன்றின் சில பாகங்களை இவர்கள் எரித்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சிறையில் உள்ள அய்வரும் தாங்கள் இந்த குற்றத்தை செய்யவே இல்லை என்றும், இந்த வாக்குமூலங்கள் சித்திரவதை செய்து பெறப்பட்டவை என்றும் கூறுகின்றனர். இவர்கள் தாக்கல் செய்துள்ள கைது ஆணையில் அனைவரையும் ஒன்றாக ரயில்வே காலனியில் வைத்து கைது செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் காஜிமார் தெரு சம்பவத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே செய்துவிட்டு, RSS அலுவலகத்தில் அவர்களே ஒரு மாட்டுதலையை விலைக்கு வாங்கிப் போட்டு, மதுரையில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்க முயலுகிறார்களோ என்ற அய்யம் வலுவாக எழுந்துள்ளது.

அண்மைக்காலமாக, மகபூப்பாளையத்தில் தொடங்கப்பட்ட SDPI (Social Democratic Party of India) அமைப்பும் அவர்களின் செயல்பாடுகளும் பலரின் கண்களை உறுத்தியுள்ளன. பாண்டி பஜாரில் உள்ள ஒரு கடை தொடர்பான பிரச்சனையில், மகபூப்பாளையத்தை சேர்ந்த சில இளைஞர்கள் தலையிட்டு காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இவ்வாறு முறையிட்ட 20 பேரின் பட்டியலை காவல் துறை வைத்திருக்கும் தகவலே பெரும் அய்யத்தை ஏற்படுத்துகிறது. இப்பட்டியலில் இருந்துதான் ஆட்களை தேர்ந்தெடுத்து, குற்றவாளிகளாக இணைத்திருக்கிறது காவல் துறை. இவ்வழக்கில் சிறையில் உள்ளவர்களில் மூன்று பேர் SDPI அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தருணத்தில் வரலாற்றில் இருந்து சில நிகழ்வுகளை நாம் நினைவுகூர வேண்டும். 18.5.1996 அன்று மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்தது. இது தொடர்பாக பல அப்பாவிகள் கைது செய்யப் பட்டு, பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் போலி ஆதாரங்களைத் தாக்கல் செய்து வழக்கை ஜோடித்தது காவல் துறை. 2002 இல் இவ்வழக்கை விசாரித்த காவல் துறை அதிகாரிகள் மீது உள்துறை செயலர், துறை ரீதியான நடவடிக்கை எடுத்தார்.

மதுரைக்கு அருகில் உள்ள தென்காசியில் 25.1.2008 அன்று RSS அலுவலகத்தில் குண்டு வெடித்தது. வழக்கம் போல ஊடகங்கள் எல்லாம் இஸ்லாமிய அமைப்புகளை தொடர்பு படுத்தி கூப்பாடு போட்டன. ஆனால், விசாரணையில் அந்த குண்டை RSS காரர்கள்தான் வைத்தனர் என்பது தெரியவந்தது. ஆர்.எஸ்.எஸ். செயலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். "பெரும்பான்மை இந்துக்களின் அனுதாபத்தைப் பெறவே இதனை செய்தோம்' என அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்துத்துவவாதிகளுக்கு இது ஒன்றும் புதிது அல்ல.

மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், நாந்தேடு, பூனா போன்ற இடங்களில் இவர்கள் வைத்த வெடி குண்டுகள் பற்றிய விசாரணைகள் நடந்த வண்ணம் உள்ளன. இவர்கள் நடத்தும் ஆயுத பயிற்சி முகாம்கள், இவர்களுக்கு உதவும் முன்னாள் ராணுவத்தினர், குண்டு தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் என இந் நிறுவனங்களின் செயல்பாடுகளை கடும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். மதக்கலவர சூழலை ஏற்படுத்தி, அதன் மூலம் இந்து எழுச்சியை உருவாக்கி, அதனை வாக்குகளாக மாற்றி பா.ஜ.க. கட்சி ஆட்சியை பிடிக்க வைக்கும் சூத்திரத்தில் RSS  ஒரு ருசி கண்ட பூனை.

police_370RSS-ன் பொறுப்பாளர்கள் மத்தியிலும் இப்படியான கலவரங்களை ஏற்படுத்தும் தொடக்கப் புள்ளிகள் பற்றிய விவாதங்கள்தான் அதிக பட்சமாக நடக்கின்றன. இப்படி ஒன்றை அவர்கள் நிகழ்த்தினால் தான் மாநில பொறுப்புகளுக்கு செல்ல முடியும். காசி, மதுரா தொடங்கி திருப்பரங்குன்றத்தின் கார்த்திகை தீபம் பிரச்சனை வரை அமைதியை குலைத்து வரும் RSS-ன் முகமூடியை நாம் மீண்டும் மீண்டும் கிழித்தெறிய வேண்டும். காந்தியை கொலை செய்துவிட்டு இன்று பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களில், கொலையாளிகளான கோட்ஸே மற்றும் சாவர்க்கரை பாட நூல்களுக்குள் நுழைத்து விட்டனர். இந்துத்துவவாதிகள் மீதான வழக்குகளை மிகத் திறமையாக நடத்திய காவல் துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயை மும்பை தாக்குதலில் கொலை செய்து விட்டனர். இந்த கொலைக்கும் RSS-க்கும் நேரடி தொடர்பு இருப்பதாக பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவிலும், தமிழகத்திலும் காவல் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் நம்முன் உள்ளன. காவல் துறை முற்றிலும் ஜனநாயக நெறிகளின் அடிப்படைகளை உணராத ஒரு துறையாக உள்ளது. மத விவகாரம் என்றால் காவல் துறை இந்துவாகவும்; அதுவே இந்துக்கள் இடையிலான பிரச்சனை என்றால் கண்மூடித்தனமான தலித் எதிர்ப்பு நிலைப்பாட்டையும் எடுக்கிறது. இவர்களுக்கு துணையாக அரசு "பொடா', "தடா' என சட்டங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. விசாரணைகளின்போது காவல் துறையினர் சாதியரீதியாக செயல்படுவது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்நிலை இன்னும் மாறவில்லை.

இந்தியா முழுவதும் இதுவரை நடந்துள்ள மதக்கலவரங்கள் குறித்து பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அதில் 2003 இல் மத்தியப் பிரதேசத்திலும், மகாராட்டிரத்தின் பிவண்டியிலும் ஏறக்குறைய 30க்கும் மேற்பட்ட தருணங்களில் மதக் கலவரத்தின் மூல காரணமாக மாடுதான் இருந்துள்ளது. இந்துத்துவவாதிகளுக்கு மாடு என்பது, தங்களின் அரசியல் வியாபாரத்திற்கான மூலதனம்! இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் மாட்டை வைத்து பெரும்பான்மை சமூகத்தை மிக எளிதாக உசுப்பிவிடலாம் என்பது அவர்களின் லாப சூத்திரம். இந்த பழைய அனுபவத்திலிருந்தும் இவ்வழக்கிற்கான விசாரணை நடைபெற வேண்டும். முஸ்லிம்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக இந்த வழக்கு சி.பி.சி.அய்.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பொய் வழக்குகள் முறியடிக்கப்படும் வரை போராட்டங்கள் தொடர வேண்டும். 

RSS விலைக்கு வாங்கிய மாட்டுத் தலை!

எஸ்.எஸ். காலனி காவல் துறை ஆய்வாளர் கைவசப்படுத்திய மாட்டுத் தலை, மிருக நோய் நுண்ணறிவுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வுக்குப் பிறகு பின்வருமாறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது :

beef_340Kind of specimen – Skull with Mandible kept in Ice pack. Skull with Mandible attached. Except for the small piece of skil at ventral surface of mandible the specimen was devoid of skin. Skull was opened. Brain not present. Skull was separated at Atlanto Occipital joint. No Lacerations found at joint.

இது குறித்து சில கால்நடை மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில் : “மண்டை ஓட்டுடன் கீழ்த் தாடை இணைந்துள்ளது. ஏறக்குறைய ஒரு சிறிய துணுக்கை தவிர, மொத்த மாதிரியில் தோல் எங்குமே இல்லை. மண்டை ஓடு திறக்கப்பட்டுள்ளது. அதில் மூளை இல்லை. மண்டை ஓடு Atlanto Occipital joint இல் பிரிக்கப்பட்டுள்ளது. தோல் உரிக்கப்பட்டபோது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை''

இந்த வரிகளின் விளக்கம் நமக்கு பல உண்மைகளை உணர்த்துகிறது. ஒரு மாட்டை, ஆட்டை, கோழியை, மீனை வெட்டுவது என்பது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தொழில்கள். இவை அனைத்தையும் முறையான பயிற்சி இல்லாதவர்களால் செய்ய இயலாது. இந்த அறிக்கை, மாட்டின் மண்டை ஓட்டுடன் அதன் கீழ்த் தாடை இணைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாகக் கூறுகிறது. அடுத்து, இந்த மண்டை ஓடு Atlanto Occipital joint இல் பிரிக்கப்பட்டுள்ளது. மாடு வெட்டும் தொழிலை செய்பவர் அல்லது ஒரு கால்நடை மருத்துவரால் மட்டுமே இந்த இடத்தில் அந்த மண்டையைப் பிளக்க முடியும். மேலும், மாட்டின் கீழ்த்தாடை சேதப்படாமல் இருக்கிறது என்பது, இதை தொழில் தெரிந்த ஒருவரே செய்துள்ளார் என்பதற்கு சான்று. அடுத்து, தோல் உரிக்கப்பட்டபோது எந்த காயமும் ஏற்படாதவாறு பிரிக்கப்பட்டுள்ளது. ஆக, இவ்வறிக்கையின்படி, இந்த மாட்டுத்தலை கசாப்பு கடைக்காரரிடம் கொடுத்து வெட்டி வாங்கப்பட்டது என்பது நிரூபணமாகிறது.

இதில் இருந்த இம்மாட்டின் தோல், விற்பனைக்காக தொழில் நேர்த்தியுடன் பிரிக்கப்பட்டுள்ளது என்பதும் உறுதியாகிறது. ஆக, மகாசிவராத்திரி அன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மாட்டிறைச்சிக் கடையில் வரிசையில் நின்று ஆர்டர் கொடுத்து, இதை வாங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கசாப்பு தொழில் தெரிந்தவர்கள் அல்லர். ஓட்டுநர், ஆட்டோ ஒட்டுநர், தையல் தொழிலாளி என இவர்களில் ஒருவர் மட்டுமே மீன் கடை வைத்திருப்பவர். இவரும் இவ்வழக்கில் திட்டமிட்டே இணைக்கப்பட்டிருக்கிறார்.  

"வைகைப் படை" : மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்திற்கு...

"வைகைப்படை" என்பது சிறப்பு அதிகாரங்கள் கொண்ட படை. குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்கென்றே (துன்புறுத்துவதற்கு) சில இடங்களை இப்படை தேர்வு செய்து வைத்துள்ளது. மதுரை எல்லிஸ் நகர் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகள், விடுதி அறைகள், மதுரையில் உள்ள செல்லூர் – சத்திரப்பட்டி காவல் நிலையங்களில் உள்ள "செல்'கள் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக வைத்து விசாரிப்பதிலும், வன்கொடுமைகள் புரிவதிலும் இப்படையினர் தேர்ந்தவர்கள். அவர்களுக்கு என்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனம் ஒன்று உள்ளது. இவ்வாகனத்தில்தான் அவர்கள் ஆட்களை கடத்துகின்றனர்.

வாகனத்தின் தரைப் பகுதியில் வட்டமாக திறக்கும் வசதி உள்ளது. நான்கு வழிச் சாலைகளில் வண்டியை அதிவேகத்தில் செலுத்தி, அப்பொழுது அவர்களின் கைவசம் உள்ளவரின் தலையை உரசுவது போல் கொண்டு செல்வது முதல் ஏராளமான துன்புறுத்தல் முறைகள் கையாளப்படுகின்றன. கால்களை 180 டிகிரி கோணத்தில் விரித்து அதன் மீது ஏறி நிற்பது, தோள்களில் துண்டை கட்டி விரிப்பது, தோள்களை விரித்த நிலையில் பாதங்களின் மீது பூட்ஸ் கால்களுடன் நிற்பது என இவர்களின் துன்புறுத்தல் முறை கொடூரமானது. மரண பயத்தை ஏற்படுத்தி, அதன் வழியே தங்கள் உயர் அதிகாரிகள் விரும்பும் வாக்குமூலங்களை பெற்றுத் தருவது இவர்களின் தலையாயப் பணி.

முஸ்லிம்களை துன்புறுத்தும்போது, "வைகைப் படை'யின் ஆய்வாளர்கள் மதரீதியாக, “ஏண்டா உங்க பள்ளிவாசல்ல போட்டா போராடுவீங்க, எங்கதுல வந்து போட்டா சும்மா இருப்போமா?'' – ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை, மதசார்பற்ற அரசின் கீழ் செயல்படும் ஒரு காவல் துறை ஆய்வாளர் "தனது அலுவலகம்' என்கிறார்.

“உங்களுக்கு எத்தன பொண்டாட்டிடா, ஏண்டா ஒன்னோட நிறுத்திட்டீங்க, இன்னும் ரெண்டு வச்சிக்க வேண்டியதுதானே''

“டேய், அடிச்சா அம்மா அப்பானு கத்துங்கடா, அது என்னடா அல்லா அல்லானு கத்துறீங்க'' – இஸ்லாம் குறித்து கட்டப்பட்டுள்ள வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே இது காட்சியளிக்கிறது.

நன்றி : கீற்று 

Related

SDPI 829499563898573364

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item