அயோத்தி நிலத்தை 3 ஆக பிரிக்கும் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இந்தத் தீர்ப்பை வழங்கியது அலகபாத் உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்புக்கு இன்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் வினோதமாகவும், விந்தையாகவும் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

லக்னெள நீதிமன்றத்தின் நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்தபோது ஒருமி்த்த தீர்ப்பை வழங்கவில்லை.

ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்ப்பை வழங்கினர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து கோவில் கட்டிக் கொள்ள ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடமும், இன்னொரு பகுதியை அங்கு ஏற்கனவே கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை 3 நீதிபதிகளும் ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர்.

அதன் மூலம் பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரித்து மூன்று தரப்பினரிடமும் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நிலம் இருக்க வேண்டும் என்றும், அந்த இடத்திலிருந்து ராமர் சிலை அகற்றக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், (இந்த நிலத்துக்கு உரிமை கோரும் இந்து அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறக்கட்டளை அமைத்து இந்த நிலத்தைப் பெற்று கோவில் கட்டிக் கொள்ளலாம்)

மீதமுள்ள இடத்தை அங்கு ஏற்கனவே சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், இந்த மசூதி கட்டப்பட்ட இடத்தில் கோவில் இருந்துள்ளது என்பதை இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு நிரூபித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதை இஸ்லாம் மதமே தவறு என்கிறது என்றார்.

நீதிபதி சிப்கத் உல்லா கான் தனது தீர்ப்பில், கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அந்த இடத்தில் கோவில் இருந்து, அது நெடுங்காலமாக சிதிலமடைந்து கிடந்தது. கோவில் முழுவதும் சிதிலமடைந்த பி்ன்னரே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. இடிந்து கிடந்த கோவிலின் சில கட்டுமானப் பொருட்களும் மசூதி கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இவ்வாறு தனித்தனியே நீதிபதிகள் கருத்துத் தெரிவி்த்தாலும் மூவரும் மொத்தத்தில் அளித்த தீர்ப்பின்படி, இந்த இடத்தில் 3ல் 2 பங்கை இந்துக்களிடமும் (ராமர் கோவில் கட்டவும், நிர்மோகி அகராவிடமும்), 1 பங்கு இடத்தை பாபர் மசூதி கமிட்டியிடமும் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இந்த இடத்துக்கு உரிமை கோரி ராம ஜென்மபூமி நியாஸ், நிமோகி அகரா ஆகியவை 1950களில் வழக்குத் தொடர்ந்தன. 1961ம் ஆண்டில் சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் வழக்குத் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பையொட்டி நாடே பெரும் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகரா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளும், பாபர் மசூதி போராட்டக் கமிட்டி உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அப்தாப் ஆலம், லோதா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், இன்று அளித்த தீர்ப்பில் அலகாபாத் உயர் மன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

நீதிபதிகள் கூறுகையில், யாருமே கேட்காத நிவாரணத்தைக் கொடுத்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம். நிலத்தைப் பிரித்துத் தருமாறு யாருமே கேட்கவில்லை.. அப்படி இருக்கையில் நிலத்தைப் பிரிக்குமாறு தீர்ப்பளித்திருப்பது வினோதமாக உள்ளது, விந்தையாக உள்ளது.

மிகவும் புதுமையான தீர்ப்பு இது. இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் தொடர வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Thanks : Thatstamil

Related

supreme court 6025487427584220834

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item