தம்மாமில் IFF சார்பில் நடைபெற்ற 'நீதி தேடும் பாபரி' கருத்தரங்கம்

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் கருதி அவர்களது பிரச்சனைகளுக்காக பாடுபட்டு வரும் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம், தம்மாம் தமிழ் பிரிவின் சார்பில் 'நீதி தேடும் பாபரி' என்ற தலைப்பில் கடந்த ஜனவரி-7 அன்று தம்மாம் நஹ்தா கிளப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்லாது நீதியை நாட்டத் துடிக்கும் அனைத்து மத மக்களும் பாபரி மஸ்ஜித் விஷயத்தில் போராடி வரும் போது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் பலர் இதுகுறித்த போதிய விளக்கங்கள் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

இங்கு வாழும் முஸ்லிம் அல்லாதவர்களோ பாபரி மஸ்ஜித் பிரச்சனை என்பது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சனை என்றே கருதி வருகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து. பாபரி மஸ்ஜித் பிரச்சனை என்பது முஸ்லிம்களின் பிரச்சனை மட்டுமல்ல, அனைத்து இந்திய மக்களின் பிரச்சனை என்பதை தெளிவுபடுத்தவே இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி சரியாக மாலை 7 மணிக்கு சகோதரர் நாகூர் மீரான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. மௌலவி சபீர் பைஜி அவர்கள் திருமறை குர்ஆன் வசனங்களை ஓதி துவங்கி வைத்தார்.

தொடர்ந்து சகோ.நாகூர் மீரான் அவர்கள் தனது வரவேற்புரையில் இந்த கருத்தரங்கம் நடத்த வேண்டிய அவசியத்தை அழகாக குறிப்பிட்டார்.

இந்தியா பிரடெர்னிடி ஃபோரம், வெளிநாடுகளில் வாழும் இந்தியாவின் அனைத்து மாநில மக்களுக்காகவும் வேண்டி ஜாதி மதம் மொழி இனம் கடந்து ஆற்றிவரும் தன்னலமற்ற பணிகளை சகோதரர் உமர் நாகூர்மீரான் சான்றுகளோடு விளக்கினார்.

இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் இப்பணியில் ஒவ்வொரு இந்தியனும் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் அவசியம் என்பதையும் வலியுறுத்தி கூறினார்.

அதனைத் தொடர்ந்து தலைமையுரை வழங்கிய ரியாஸ் அவர்கள் இந்தியாவின் சட்டம் முஸ்லிம்களை எவ்வாறு அலைக்கழிக்கிறது என்றும் அநீதி பாராட்டுகிறது என்றும் தெளிவான ஆதாரங்களுடன் விளக்கினார். பள்ளி இடித்தவர்களுக்கு இலவச இரயில் பயணம். அதை வேடிக்கை பார்த்த கல்யாண் சிங்கிற்கு ஒருநாள் சிறை வாசம். அதை பறி கொடுத்த முஸ்லிம்களுக்கு அரசு காவல்துறை இராணுவம் கொடுத்த பரிசு துப்பாக்கி குண்டு. இது தான் இந்திய ஜனநாயகமா? என்ற கேள்வி 1993-ன் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களை கண்முன் கொண்ட வந்தது. மேலும், எங்கே குண்டு வெடித்தாலும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று கூறி உடனே சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வது தொடர்ந்து வருவதையும், ஆனால் இன்றைக்கு இத்தகைய குண்டு வெடிப்புகளுக்கு காரணம் இந்துத்துவ பாசிஸ்டுகள் என்பதை விசாரணைகள் தெளிவாக்குவதையும் குறிப்பிட்டார்.

சுவாமி அசிமானந்தா நீதிபதியின் முன் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் கடந்த பல ஆண்டுகளாக நடந்த குண்டுவெடிப்புகள் அனைத்திற்கும் சங்பரிவார கூட்டம்தான் காரணம் என்பதை உணர்த்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

மாலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்டு ஆண்டுகளாக, மாதங்களாக சிறைகளில் வாழும் முஸ்லிம்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது இந்திய அரசாங்கமும், சட்டத்துறையும் என்ற கேள்வியோடு நாங்கள் சபதிமிட்டு கூறுகிறோம் இறைவனின் உதவியால் எங்கள் மரணத்திற்கு முன்னதாகவே மீண்டும் பாபரி பள்ளி அதே இடத்தில் கட்டி எழுப்பப்படுவதை கண் கொண்டு பார்ப்போம் என்று சூழுரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, காயல் மக்தூம் நைனா அவர்கள் 'பாபரி பள்ளியை மீட்டுவோம் பாசிசத்தின் சூழ்சியை வீழ்த்துவோம். கொள்கை பேசி பேசி பிரிந்து போகமாட்டோம்...' என்ற எழுச்சி கீதம் பாடி வந்திருந்த மக்களுக்கு பாபரி பள்ளியை மீண்டும் கட்டியே தீருவோம் என்ற நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியின் சிறப்புரை வழங்கிய சகோதரர் சாதிக் மீறான் அவர்கள் பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு என்ன? பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் ஏன் இவ்வளவு முனைப்புடன் இருக்கிறார்கள்? இந்துத்துவ தீவிரவாதிகள் பாபர் மஸ்ஜித் விவகாரத்தை கையில் எடுத்து அதனை ஏன் ராமர் கோவில் என்று இட்டுக்கட்டுகிறார்கள்? பாபர் மஸ்ஜித் நிலத்தை முழுவதுமாக ஒப்படைத்தாலும் இந்துத்துவ தீவிரவாதிகள் இத்தோடு விட்டுவிடுவார்களா? அடுத்து அவர்களின் குறி என்ன? என்று தொடராக எழும் பல கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களை மேற்கோள்காட்டி தன் சிறப்புறையை அலங்கரித்தார்.

மேலும் தன் உறையில் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அநீதியானது என்பதை இந்தியாவிலுள்ள முக்கியமான நீதிபதிகளும், பத்திரிகையாளர்களும், பொதுநலவாதிகளும் எவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்கள் என்பதை தெளிவாக உணர்த்தினார்கள்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.மார்கண்டேய கட்சு அவர்கள் குறிப்பிட்டதுபோல் 800 ஆண்டுகால முஸ்லிம்கள் ஆட்சியில் நீதி கடைப்பிடிக்கப்படவில்லை என்றால் இன்று இந்தியாவில் ஒரு கோவில் கூட மிஞ்சியிருக்காது என்ற கருத்தை மேற்கோள் காட்டினார். மீண்டும் அந்த நீதி கடைப்பிடிக்கப்படும் அதற்கான பயணத்திற்கு முஸ்லிம் சமூகம் தயாராகிவிட்டது. இந்தியாவின் இறையாண்மை ஜனநாயகம் மீண்டும் கட்டியெழுப்பப்படும். அது வரை இனி இந்த சமூகம் தூங்கப்போவதில்லை என்றார்.

அதனைத் தொடர்ந்து நீதி தேடும் பாபரி மஸ்ஜித் என்ற டாக்குமென்டரி திரையிடப்பட்டது. பாபரி மஸ்ஜிதின் ஆரம்பம் முதல் தொடங்கி சதி, இடிப்பு, சட்டம் வழங்கிய அநீதி எனச் சென்று இறுதியில் புதிதாக கட்ட வேண்டிய பாபரி பள்ளியின் மாடல் வரை அதில் காட்டப்பட்டது. இறுதியாக ஆஷிக் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்சியை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் 250 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவர்களுக்கும் பாபர் மஸ்ஜித் வரலாற்றை விளக்கும் சிடி மற்றும் கைப்பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
 
Popular Front of India - Koothanallur

Related

SDPI 1160579127009881538

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item