அப்துல் கலீம் பேசுகிறார்
http://koothanallurmuslims.blogspot.com/2011/01/blog-post_6809.html
சிறையில் இரண்டு தடுப்புகளைத் தாண்டி தனிமையிலிருந்த முதியவரிடம் பேசத் துவங்கிய பொழுதும், அவருக்கு உணவும், குடிநீரும் கொண்டுவந்துக் கொடுத்த பொழுதும் எவ்வித குற்றமும் செய்யாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ள தான் விரைவில் இச்சிறையிலிருந்து விடுதலையாகி வெளியுலகை காணப் போகிறேன் என்பதை அப்து கலீம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்ட்டார்.
செய்யாத குற்றங்களுக்காக சித்திரவதைகளையும், சிறைவாசத்தையும் அனுபவித்து தளர்ந்துபோன அப்துல்கலீம் சமீபத்தில் விடுதலையான பொழுது தனது அனுபவத்தை நினைவுக் கூறுகிறார்: "சஞ்சல்குடா சிறையில் நான் 'அங்கிள்' என்றழைத்த அஸிமானந்தாவின் மனமாற்றம், நான் மற்றும் அப்பாவிகளான இதர முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகளாக நிரூபிக்க உதவும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை."
ஷேக் அப்துல் கலீம் என்ற 19 வயது இளைஞர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்படுகிறார். 10 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை சேகரித்ததாகவும், குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய சிம் கார்டை பரிமாறினார் எனவும் போலீஸ் அப்துல் கலீம் மீது குற்றஞ் சுமத்தியது.
தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அப்துல் கலீமுக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன. நிரபராதி என நீதிமன்றம் கூறிய பொழுதும் உள்ளத்தில் ஏற்பட்ட ஆறாத காயக்களுடன் அப்துல் கலீம் சிறையிலிருந்து விடுதலையானார்.
கடுமையான நிராசை, உதவுவதற்கு எவருமில்லாத சூழல் என்ற அப்துல் கலீமின் நிலைமை அஸிமானந்தாவின் உள்ளத்தை உருக வைத்தது.
செர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது சகோதரன் காஜாவுக்கு மொபைல் ஃபோனை கொண்டு கொடுத்தார் எனக் குற்றஞ்சாட்டி மீண்டும் 2010 ஆம் ஆண்டு அப்துல் கலீம் சிறையிலடைக்கப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டி காஜாவை போலீஸ் கைதுச் செய்திருந்தது. ஆனால், சிறையில் போலீசாரே மொபைலைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு தன் மீது பொய்வழக்குப் போட்டதாக கூறுகிறார் அப்துல் கலீம்.
என்னவாயினும், சஞ்சல்குடா சிறையில் என்னை அடைத்தது ஒருவகையில் எனக்கு அருள்தான் என அப்துல்கலீம் கூறுகிறார்.
ஆறுமாத காலமாக நீண்ட இச்சிறை வாழ்க்கையின் போதுதான் அஸிமானந்தாவை அப்துல் கலீம் சந்தித்தார். சிறையில் வைத்து எப்பொழுதாவது முகமன் கூறுவதன் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.
அஸிமானந்தாவுக்கு உணவும், குடிநீரும் கொண்டு கொடுத்துவிட்டு சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்றுக் கொண்டு தனது கதையை கூறியுள்ளார் அப்துல் கலீம். அஸிமானந்தாவை அப்துல் கலீம் 'அங்கிள்' என அழைத்துள்ளார்.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில்தான் அப்துல் கலீமும் கைதுச் செய்யப்பட்டார் என அஸிமானந்தா அறிந்தபொழுது, அப்துல் கலீமின் வீட்டுச்சூழல் மற்றும் அவரது வாழ்க்கையைக் குறித்து விசாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் அஸிமானந்தா.
முஸாராம்பாகிலிருந்து கடந்த 2007-ஆம் ஆண்டு தானும் இதர முஸ்லிம் இளைஞர்களும் கைதுச் செய்யப்பட்ட நிகழ்விலிருந்து கூறத் துவங்கினார் அப்துல் கலீம். அங்கிருந்து ஒரு பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றது, அங்கு வைத்து நான்கு தினங்களாக கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கியது, இரண்டுமுறை நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தியது பின்னர் தான் உயிருள்ள சடலமாக மாறிய சூழல் வரை அனைத்தையும் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார் அப்துல் கலீம்.
இதனைக் கேட்டு தலையை அசைத்துள்ளார் அஸிமானந்தா. பின்னர் கைதுச் செய்யப்பட்ட இதர இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப சூழல்களை குறித்து கேட்டறிந்துள்ளார். தனது சொத்துக்கள் அனைத்தையும் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப் போவதாக ஒருமுறை அஸிமானந்தா கூறியுள்ளார்.
குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தனது தலைமையின் கீழ் செயல்பட்டவர்கள்தான் என அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை ஒரு சிறை அதிகாரி மூலமாக அறிந்துள்ளார் அப்துல்கலீம்.
"என்னைப் போன்ற நிரபராதிகளான இளைஞர்கள் பொய் வழக்குகளிலிருந்து விடுபட வழிவகுத்த இந்த ஒப்புதல் வாக்குமூலம் குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் இதற்கு காரணமல்ல, அல்லாஹ்தான் காரணம். என்னை நீதிமன்றம் குற்றமற்றவர் எனக்கூறி விடுவிக்கலாம். ஆனால், தீவிரவாதி என்ற முத்திரை எப்பொழுதும் எனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்"- தழுதழுத்த குரலில் கூறுகிறார் அப்துல்கலீம்.
செய்தி:தேஜஸ்