அன்னையர் தினம்
http://koothanallurmuslims.blogspot.com/2010/05/blog-post_3981.html
அன்னை, இறைவன் இவ்வுலகில் மனிதனுக்கு அளித்த அற்புதமான உறவாகும். அம்மா, மம்மி, மதர், உம்மா, மா என்று பல்வேறு மொழிகளில் தாய்க்கான சொற்கள் காணப்பட்டாலும் அவற்றிற்கிடையே ஒரு இனம் புரியாத தொடர்பிருப்பதை உணரமுடியும்.
அம்மா என்றழைக்காத உயிரில்லையே! தாயின் சிறந்ததோர் கோயிலுமில்லை! என தாய்மையின் பெருமையை உணர்த்துவதற்கு இவ்வுலகில் பல்வேறு வகையான சொல்லாடல்கள் எடுத்தாளப்படுகின்றன.
பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை என்றால் அது மிகையல்ல. இவ்வுலகில் பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறு பரிணாமங்களை வாழ்க்கையில் சந்திக்கிறாள். அவற்றில் உன்னத அந்தஸ்தை தருவது 'தாய்' என்ற ஸ்தானமாகும்.
தாய்மையை போற்றக்கூடிய வகையில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை 'அன்னையர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை ஏனைய சர்வதேச தினங்களைப் போல் உலக முழுவதும் ஒரேநாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று உலகின் பெரும்பாலான நாடுகள் அன்னையர் தினத்தைக் கொண்டாடினாலும், சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்னரோ கொண்டாடுகின்றன. அன்னையர் தினக் கொண்டாட்டத்தின் பின்னணியாக சில புராணக் கதைகள் கூறப்பட்டாலும், நவீனக் காலத்தில் அன்னையர் தினம் உருவான வரலாறு இவ்வாறே அமைந்தது.
அமெரிக்காவில் ஜார்விஸ் என்ற பெண்மணி ஒரு போரின்போது பலியான அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்வுக்காகவும், சமாதானத்திற்காகவும் பாடுபட்டு தனது இறுதிக் காலக்கட்டம் வரை சமூக சேவகியாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய மகளான அன்னா ஜார்விஸ் முதன் முதலாக தனது அன்னையின் நினைவாக 1908 ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரிலிலுள்ள சர்ச்சில் மே மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினாராம். அன்று முதல் உலகில் முதன் முதலில் அன்னையர் தினத்தை கொண்டாடிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார் அன்னா ஜார்விஸ்.
சமூக நலனில் அக்கறை கொண்ட அன்னா ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். இவரது கோரிக்கையை ஏற்று பென்சில்வேனியா மாநில அரசு 1913 ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங்கீகரித்தது.
இத்தோடு அன்னா திருப்தியடையவில்லை. அவர் பல தன்னார்வ குழுக்களுக்கும், வியாபார அமைப்புகளுக்கும் அன்னையர் தினம் கொண்டாடுவதைப் பற்றி கடிதம் எழுதினார். அமெரிக்க அதிபருக்கும் வேண்டுகோள் விடுத்தார். இவரின் வேண்டுகோளையும், நியாயத் தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ம் ஆண்டு வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
பின்னர் கனடா உள்ளிட்ட 46 நாடுகள் அன்னையர் தினத்தை ஏற்றுக்கொண்டன. இறுதியாக தனது 84 ஆம் வயதில் அன்னா தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தின் பொழுது தனியார் மருத்துவமனையில் வைத்தும் அன்னையர் தினம் தாயைப் போற்றும் விதமாக உலகமுழுவதும் கொண்டாடப்பட வேண்டும் என்ற ஆசையை தன்னை சந்தித்த பத்திரிகையாளர்களிடம் வெளிப்படுத்தினார்.
அன்னையர் தினம் உருவாக காரணமான அன்னா ஜார்விஸ் திருமணம் முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகமயமாக்கப்பட்ட அன்னையர்தினம்
பல்வேறு சர்வதேச தினங்களைப் போன்றே அன்னையர் தினமும் வணிகமயாக்கப்பட்டது. அதுவும் அன்னையர் தினம் துவக்கப்பட்டு 9 ஆண்டுகள் கழித்து. யார் அன்னையர் தினத்தை துவக்கி வைத்தாரோ அவரே அதன் எதிர்ப்பாளாராகவும் மாறினார். ஆம், அன்னா ஜார்விஸ் அன்னையர் தினத்தை வணிகமயமாக்கியதற்கு எதிராக போராட ஆரம்பித்தார்.
1948 ஆம் ஆண்டில் அன்னையர் தினம் வணிகமயாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியதால் அமைதியை சீர்குலைத்தார் எனக்கூறி கைதுச் செய்யப்பட்டார் அவர்.
அன்னா ஜார்விஸ் கடைசியாக கூறியது என்னவெனில், "இதுபோல் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் நான் இந்த நாளை துவங்கியிருக்க மாட்டேன். ஏனெனில் அது கட்டுப்பாடின்றி சென்றுவிட்டது." என்று.
வர்த்தக ரீதியாக வெற்றிப் பெற்ற அமெரிக்க நிகழ்ச்சிகளில் ஒன்றாக அன்னையர் தினம் மாறிவிட்டது. தேசிய விடுதிக் கூட்டமைப்பின் கணிப்பின்படி அன்னையர் தினமானது இப்பொழுது அமெரிக்காவின் உணவு விடுதிகளில் இரவு விருந்துக்கு ஆண்டின் பிரபல நாளாக மாறிவிட்டது.
IBIS World என்ற வணிக ஆராய்ச்சி வெளியீட்டு நிறுவனத்தின் கணிப்பின்படி அமெரிக்கர்கள் மலர்களுக்கு 2.6 பில்லியன் டாலர்களும், விரும்பிய பரிசுப் பொருட்களுக்கு 1.53 பில்லியன் டாலர்களும், வாழ்த்து அட்டைகளுக்கு 68 மில்லியன் டாலர்களும் செலவு செய்கின்றனர்.
2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அன்னையர் தினத்தில் அன்னையர்களுக்கான மோதிரங்களின் விற்பனை அமெரிக்காவின் நகைத் தொழில் துறையின் ஆண்டு வருமானத்தில் 7.8 சதவீதத்தை பெற்றுக் கொடுத்தது.
கார்ப்பரேட் தாய்மார்கள்
அன்னையர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் தாய்மையின் புனிதத்தைக் கெடுக்கும் தாய்மார்களின் அவலத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். வாடகைத் தாய் என்ற பெயரில் அன்னிய ஆண்களின் குழந்தைகளை சுமந்து தனது புனிதமான கருவறையை கார்ப்பரேட் அறைகளாக மாற்றி வருகின்றனர் சில பெண்மணிகள்.
இவர்கள் தாய்மையையும் பெண்மையையும் காசுக்காக சீரழிக்கும் வெட்கங்கெட்ட பெண்மணிகளாவர்.
கருவறையை கழிப்பிடமாக மாற்றுபவர்கள்
முறைகேடான உறவுகள் மூலம் தந்தை யார் என்று தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கிய பெருமை கருவறைகளை கழிப்பிடமாக மாற்றிய பெண்மணிகளை சாரும்.
தவறான உறவில் பிறந்தக் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசும் கல்நெஞ்சம் படைத்தவர்களை நாம் எவ்வாறு அன்னையர் இனத்தில் சேர்க்க இயலும்.
கருவறையை பிணவறையாக மாற்றுபவர்கள்
குழந்தை என்பது இறைவனின் அருட்கொடையாகும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஆனால் தான் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை அல்லது தான் கருவறையில் சுமக்கும் குழந்தைகளை அது பெண்ணாக இருக்கும் காரணத்தினால கருவிலேயே அழிக்க நினைக்கும் பாவிகளை நினைத்தால் மனம் பதறிப் போகிறது. இவர்கள்தான் கருவறையை பிணவறையாக மாற்றுபவர்கள். இவர்கள் குழந்தையின் அழுகுரலுக்கு பதிலாக மரண ஓலத்தை கேட்க விரும்புகிறார்கள்.
பாசிசமும் தாய்மையும்
தாயை தெய்வமாக மதிக்கிறோம் என்று கூறிவிட்டு தாய்மையை காலில் போட்டு மிதிக்கும் கயமைத் தன்மைக் கொண்ட பாசிஸ்டுகளின் இரட்டை வேடத்தை இந்த அன்னையர் தினத்தில் அடையாளம் காட்டுவது அவசியமாகும்.
பாரத மாதா, கோ மாதா என எதற்கெடுத்தாலும் மாதா கோஷம் எழுப்பும் இந்தக் கயவர்கள் இந்தியாவில் நடந்த பல கலவரங்களிலும் சிறுபான்மையின தாய்மார்களின் தாய்மையை சூறையாடியவர்கள். அதன் உச்சக்கட்டம் தான் குஜராத்தில் நாம் கண்ட கோர நிகழ்வு. கெளஸர் பானு என்ற தாயின் வயிற்றைக் கிழித்து கருவறையிலிருந்த சிசுவைத் தூக்கி தீயில் போட்டு பொசுக்கிய இந்த அரக்கர்கள் ஒரு தாய்க்குத்தான் பிறந்தார்களா? என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.
நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டுப் போன தாய்மை நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்திய பாதிப்பால் பெற்ற குழந்தையைக்கூட கவனிக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி இன்று நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. இது நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்திய பாதிப்பாகும். கண்டதையெல்லாம் வாங்கிக் குவிக்க வேண்டும். அதற்குப் பணம் தேவை. அதற்காக நேரம் காலம் தெரியாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது.
குழந்தையைப் பெற்று சில வாரங்கள் கழிந்தவுடனேயே வேலைக்குச் செல்லும் யுவதிகள் அதிகரித்து வருகின்றனர். குழந்தைக் காப்பகத்தில் அல்லது வேலைக்காரியிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வதால் குழந்தைக்கு தாய்ப்பாசம் எவ்வாறு கிடைக்கும். அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் குடும்பவாழ்வு சீரழிந்ததன் காரணமாகவும், நுகர்வு கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டதன் விளைவாகவும் குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டு பல காலமாகிவிட்டது.
இதனால் குற்ற சிந்தனைக் கொண்ட ஒரு சமூகம் அங்கு உருவாகியுள்ளது. அடிக்கடி துப்பாக்கிச் சத்தம் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் ஒலிப்பதை நாம் அறியத்தான் செய்கிறோம்.
அதிகரித்து வரும் முதியோர் இல்லங்கள்
பத்துமாதம் சுமந்து பெற்று சீராட்டி தாலாட்டி வளர்த்த அன்னையை வயோதிக வயதில் பரிதவிக்கவிடும் பாதகர்களும் மனித போர்வையில் நடமாடுகிறார்கள். முதியோர் இல்லங்களில் அகதிகளாக்கப்படும் அன்னையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இதனால்தான் ஒரு கவிஞர் இவ்வாறு கூறுகிறார்:
'அன்னையர்க்கு தினம் ஒன்று வேண்டாம்- அன்றாடம்
அன்பு செய்யும் மனம் தான் வேண்டும்’ என.
மனித நேயம் மக்கிப்போன காலக்கட்டமாக மாறி வருகிறது இன்றைய நவீன உலகம்.
அன்னையர் தினம் என்ற பெயரால் வருடத்தில் ஒரு நாளை சிறப்பித்து கொண்டாடுவதினாலோ அல்லது வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்வதினாலோ நமது வாழ்க்கைக்கு அர்த்தத்தை உருவாக்கிய அந்த 'தாய்' என்ற உறவுக்கு நாம் பிரதி உபகாரம் செய்திட இயலாது.
'தாய்' உறவு முறை என்பது வெறும் சடங்கோ சம்பிரதாயமோ அன்று. உணர்வுப் பூர்வமாக நாம் அணுகவேண்டிய உன்னதமான உறவு முறையாகும். ஒரு குழந்தையின் கரு உருவான காலக்கட்டத்திலிருந்து அதன் தாய் படும் கஷ்டங்களும், சிரமங்களும் கொஞ்சநஞ்சமல்ல. குழந்தையை பெற்ற பின்னரும் அவள் படும் சிரமமும், அர்ப்பணிப்பும் ஏராளம். குழந்தையின் கழிவுகளை இன்முகத்தோடு சுத்தம் செய்யும் பாங்கும், அக்குழந்தைக்காக உணவையும், உறக்கத்தையும் தியாகம் செய்யும் தன்னலமற்றத் தன்மையும் தாயைத் தவிர வேறு எந்த உறவினால் ஆற்ற இயலும்?
தாய்மைக்கு உயர்வளித்த ஒப்பற்றக் கொள்கைதாயை தெய்வமாக மதிக்கிறோம் எனக்கூறி என போலிவேடம் போடுவதை இறை மார்க்கமான இஸ்லாம் ஏற்கவில்லை. அகிலங்களையெல்லாம் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு நிகராக எவரும் எப்பொருளும் இல்லை என்பதுதான் இஸ்லாம் கூறும் இறைக்கொள்கை.
அதே வேளையில் அன்னயருக்கு இஸ்லாம் மனித உறவுகளில் உன்னத இடத்தை அளித்து கெளரவிக்கிறது.
தாய் காலடியில்தான் சுவனம் இருக்கிறது என்ற நபிகளாரின் வாக்கு அன்னைக்கு பணிவிடைச் செய்வதன் மூலமே மரணத்திற்கு பின்னர் வரும் வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியும் என்ற உயரிய தத்துவத்தை போதிக்கிறது.
மிகப்பெரிய பாவங்களில் ஒன்று பெற்றோரை துன்புறுத்துவது எனக்கூறி அன்னையரை அபலைகளாக்குவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறது இஸ்லாம்.
உறவுகளில் உன்னத அந்தஸ்தை கொடுக்க வேண்டியது அன்னைக்குதான் என்று நபித்தோழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நபி(ஸல்...) அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினார்கள்.
உறவுகளில் உன்னத அந்தஸ்தை கொடுக்க வேண்டியது அன்னைக்குதான் என்று நபித்தோழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நபி(ஸல்...) அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினார்கள்.
அன்னையானவள் இஸ்லாத்தை தழுவாவிட்டாலும் கூட அவருக்கு இவ்வுலகில் நீ மதிப்பளிதேயாக வேண்டும் என்ற தத்துவத்தை போதித்த மார்க்கம் தான் இஸ்லாம்.
பெற்றோருக்கு கடமையாற்ற வேண்டிய முக்கிய காலக்கட்டம்தான் அவர்களுடைய வயோதிக காலம். அவ்வேளைகளில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டுமென்பதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:
"நபியே! உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படியாகவும் கட்டளையிட்டிருக்கின்றான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடம் முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை(நிந்தனையாகச்) ’சீ’ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம்(எதைக் கூறிய பொழுதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாகவும் அன்பாகவுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றியும் ’என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக!’ என்று நீரும் பிரார்த்திப்பீராக." (அல்குர்ஆன் 17:23,24).
இத்தகையதொரு இஸ்லாமிய சமூக சூழலில் முதியோர் இல்லங்களுக்கு ஏது இடம்? அதனால்தான் முஸ்லிம் சமூகத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் நிலை குறைவாகவே உள்ளது.
பெற்றோர் இறந்தாலும் கூட அவருக்காக நீ ஆற்றும் நற்பணிகள் அவரைச் சென்றடையும் எனக்கூறும் இஸ்லாம் அவர்களின் நேசத்திற்குரியவர்களுக்கு அவர்கள் இறந்த பின்னரும் மதிப்பளியுங்கள் என்ற உபதேசத்தை போதிக்கிறது.
இஸ்லாமிய குடும்பங்களைப் பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறையல்ல மாறாக வருடம் முழுவதுமே அன்னையர் தினம் தான். அங்கு போலியான பாசாங்கான நடவடிக்கைகளுக்கு சாத்தியமே இல்லை.
இத்தகையதொரு இறைமார்க்கமான இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையால்தான் அன்னையர் என்ற உன்னத உறவுக்கு உயர்வை அளிக்க இயலும். அந்த மார்க்கத்தின் வழி நின்று அன்னையரை போற்றுவோம்!
நன்றி : பாலைவனதூது
koothanallur muslims
நன்றி : பாலைவனதூது
koothanallur muslims