இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு நம்புங்கள்: ஆம் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் அது ஒரு வடிகட்டிய பொய், இந்தியா என்கிற நாட்டின் அரசுகள் அனைத்தும், அதன் ஏக போக உறுப்பினர்கள் அனைவருமே ஏறக்குறைய இந்து மதச் சடங்குகளை இந்து மதக் கடவுளரின் சிலைகளை அரசு அலுவலகம் முதற்கொண்டு நாடாளுமன்றம் வரையில் வைத்து வணங்கிக் கொண்டும், பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள், செயற்கைக் கோள்களை அனுப்பும் விஞ்ஞானிகளும், அறிவியலில் பல்வேறு துறைத் தலைவர்களும் திருப்பதி, திருமலை, பழனி, பஞ்சாமிர்தம் என்று தொடர்ந்து ஒரு சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள், இஸ்லாமிய சமயத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுக் ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராய் இருந்த அப்துல் கலாம் ஐயா கூட பல ஒழுங்கீனக் குற்றச் சாட்டுகளுக்கு ஆட்பட்ட பம்பை முடி பாபாவின் காலடியிலும், சங்கராச்சாரிகளின் கால்களிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிகிறார்கள்.

கடந்த முறை சென்னையில் இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை அன்று பூசாரிகள் சகிதம் தீப ஆராதனை, பூஜை என்று அலுவலக நேரம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமில்லை, அங்கிருக்கும், கிறித்துவ, இஸ்லாமிய அரசு அலுவலர்களின் மன உணர்வுகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள், இந்தியாவின் எந்த அரசு அலுவலகத்திலும் இஸ்லாமிய சமயச் சடங்குகளோ, கிறித்துவப் பாதிரிமாரின் ஜெபக்கூட்டங்கலோ இதுவரை நடத்தப் பட்டதாகவோ, இனிமேல் நடத்தப்படும் என்றோ எனக்கு நம்பிக்கை இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலக் காவல்துறைத் தலைவர் அலுவலகம் சென்று சில பணிகளுக்காகக் காத்திருந்த போது முகப்பில் பாம்பின் மீது தலை வைத்து பெருமாள் பத்தடி நீளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார், இந்த நாட்டின் அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கும், அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயத்தின் சொந்தக்காரர்கள் வரி செலுத்துகிறார்கள். ஒரு மதச் சார்பற்ற நாட்டின் அரசு அலுவலகங்கள் ஒரே ஒரு மதத்தின் சார்பாக இயங்குவதை கண்டும் காணாமல் இருக்கவோ, கடந்து செல்லவோ எனக்கு மனம் வரவில்லை. இதை விடவெல்லாம் விடக் கூத்து கர்நாடக முதல் அமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்தினம் அவருடைய நாற்காலிக்கு ஹோமம் நடத்திப் பூஜை செய்தார்கள், விதான சௌதாவுக்குப் பின்புறம் வாழும் குடிசைகளில் இருக்கும் இரண்டு வேளை உணவற்ற மக்களின் வரிப்பணத்தில் நாற்காலிக்குப் பூஜை செய்து அதை அரசின் செலவுக் கணக்கில் வைக்கிறார்கள் இந்த தேசத்தில்.

இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் அல்லது அவர்களின் நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இதை நான் எழுதவில்லை, என் வீட்டில் கூட என் துணைவியார் பூஜை செய்கிறார், அது அவருடைய சொந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கையில் தலையிடவோ அல்லது தடுக்கவோ எனக்கு உரிமை இல்லை, வேண்டுமானால் விளக்கிச் சொல்லி அவரை அந்த நம்பிக்கைகளில் இருந்து வெளிக் கொண்டு வரலாம். ஆனால் பல சமய மக்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தின் அரசு, பல சமய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாடு இப்படியான செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதையும், இந்த நாட்டின் தேர்வு செய்யப்பட்ட எந்தத் தலைவரும் கேள்வி கேட்காமல் இருப்பதும் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு காலித்தனம் குற்றம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இப்படியான லட்சணத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது, இந்த வழக்கே ஒரு அர்த்தமற்ற, மக்களை மூடர்களாக்கிய வழக்கு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, கரசேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி தலைமை ஏற்று ஒரு வரலாற்று நினைவிடத்தை, இன்னொரு சமய நம்பிக்கை கொண்ட மக்களின் வழிபாட்டு இடத்தை ஆணவத்தோடும், மதவெறியோடும் உடைத்து நொறுக்கினார்கள், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் காலையில் பஜ்ரங் தள் இயக்கத்தின் நிறுவனரும், தலைவருமான வினய் காட்டியாரின் இல்லத்தில் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் சந்திக்கிறார்கள், பிறகு பாபர் மசூதியின் அருகில் கரசேவை செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை அடைகிறார்கள், சிறிது நேரத்தில் மூத்த தலைவர்கள் தொலைவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட வெட்கக் கேடான அந்த நிகழ்வை எந்தக் கவலைகளும், குற்ற உணர்வும் இல்லாமல் நாடெங்கும் இருந்து பல்வேறு இந்துத்துவக் கட்சிகளால் அனுப்பப்பட்ட இளைஞர்களும், புரட்சி நாயகர்களும் சேர்ந்து உடைத்து நொறுக்கினார்கள்

அன்றைய உத்திரப் பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங், அரசு உயர் அலுவலர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அமைதி காக்கும் படி கட்டளை பிறப்பித்து இருந்ததை லிபரான் ஆய்வுக் குழு ஏற்கனவே தெளிவாகச் சொல்லி இருக்கிறது.பல நாட்களாகத் திட்டமிடப்பட்டு மாற்றுச் சமய மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டிடத்தை உடைத்து நொறுக்கியது, தாயும் பிள்ளைக்களுமாகப் பழகிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய, இந்து சமய மக்களின் மனதில் பிளவை உண்டாக்கியது, ஒரு தேசத்தின் இறையாண்மையைக் குலைத்து அதன் அமைதிக்குப் பங்கம் விளைவித்து அழிவுகளை உண்டாக்கியது என்கிற இந்தக் குற்றங்கள் வெகு எளிதாக மன்னிக்கப்படவோ அல்லது மறக்கப்படவோ முடியாதவை. லால் கிருஷ்ண அத்வானியின் அன்றைய பாதுகாப்பு அலுவலராக இருந்த அஞ்சு குப்தா விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்கையில், "அன்றைய தினம் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் காழ்ப்புணர்வு மிகுந்த சொற்களை, உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசினார்கள்" என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் பொறுப்பான தலைவர்களாக இருக்க வேண்டிய கட்சித் தலைவர்களும், அவர்களின் அடிப்பொடிகளும் ஆட்சி, அதிகாரங்களைக் கைப்பற்றத் தேர்வு செய்த ஆயுதம் தான் இந்த பாபர் மசூதி இடிப்பு. இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தெரிந்த கொலைகாரர்கள், இவர்களின் இந்த மத உணர்வால் சீர்குலைந்த அமைதி, கலவரங்களால் இறந்து போன மனிதர்கள், கல்லடிபட்டுக் குருதி சிந்திய குழந்தைகள், இவர்களுக்கான நீதி உறங்கித் தான் கிடக்கிறது, இந்த எளிய மக்களின் வரிப்பணத்தில் உண்டும் கொழுத்தும் திரியும் கொலைகாரர்கள் இசட் பிரிவுப் பாதுகாப்போடு இந்திய தேசத்தில் உலா வருகிறார்கள்.

அன்றைய காலத்தில் பார்ப்பனர்கள் தான் வேதங்களை உண்டாக்கினார்கள், வருணப் பிரிவினையை உண்டாக்கினார்கள், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று சொன்ன என்னுடைய தாத்தனை அவனுடைய சிந்தனைகளை நீ என்னுடைய பீயை அள்ளுவதர்க்குக் கூட என் வீட்டுப் பக்கம் வரக்கூடாது” என்று விரட்டி அடித்தார்கள். அதனால் அவர்களை அடித்து உதைத்து நாட்டை வீட்டுத் துரத்தி விட வேண்டும், அவர்களது இன்றைய வீடுகளை எல்லாம் உடைத்து நொறுக்கி அந்த இடத்தில் கணியன் பூங்குன்றனாரின் நினைவிடத்தை வைத்து விட வேண்டும் நான் சொன்னால் அது எத்தனை முட்டாள் தனம் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது மாதிரித் தான் இந்த பாபர் மசூதிக் கதையும் இருக்கிறது.

பொதுப் புத்தியை உருவாக்கும் ஊடகங்கள் இஸ்லாமிய எதிர்ப்புணர்வையும், இந்து மதச் சார்பையும் நன்றாகவே வளர்த்தெடுக்கவும், அதன் விளைவுகளில் பணம் செய்யவும் காத்துக் கிடக்கிறார்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் என்று அலறிக் கொண்டு ஒரு புறம் காஷ்மீரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏவிக் கொண்டிருக்கிறார்கள், காஷ்மீரிகள் இந்தியாவுடனும் சரி, பாகிஸ்தானுடனும் சரி இணைந்து வாழ்வதற்கு விரும்பவில்லை, அவர்களிடம் வாக்கெடுத்து அவர்களை விடுதலை செய்வதாக ஒப்புக் கொண்டு தான் சிம்லா ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருக்கிறது இந்த தர்ம தேசம், நீதியோடும், நேர்மையோடும் காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து விலகி இருப்பதே எஞ்சி இருக்கும் நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும். காஷ்மீரப் பண்டிட்டுகள் என்று சொல்லப்படும் இந்துக்களின் நலன்கள் பாதிப்படைவதாக சொல்லப்படுவதையும் என்னால் நம்ப இயலவில்லை, நாடெங்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் பல்வேறு அரசின் உயர் பதவிகளிலும், தனியார் துறைகளின் மேலிருக்கைகளிலும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியவில்லை, கர்நாடக மாநிலத்தில் அன்றைய முதலமைச்சர் தரம் சிங்கால் தொழிற்கல்வி ஒதுக்கீட்டில் ஐந்து சதவீதத்தை காஷ்மீர்ப் பண்டிட்டுகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பாபர் மசூதித் தீர்ப்பால் பொது அமைதிக்குப் பங்கம் விளையும் என்று இன்றைக்கு இத்தனை சமூக அக்கறையோடு துடிக்கிற இந்தியாவின் நீதித் துறை இடிப்பு தினத்தன்று இப்படி நினைத்திருக்குமேயானால், இரண்டு மூன்று தலைமுறைகளின் மனங்களில் நம்மால் அன்பையும், பிணைப்பையும் உருவாக்கி இருக்க முடியும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து, பல உயிர்களைக் காவு கொண்ட அரசியல் பெரும்புள்ளிகளின் மீது இத்தனை கண்டிப்பையும், சமூக உணர்வையும் நமது நீதித் துறை காட்டி இருந்தால் இந்த நாடு இன்னும் அமைதியாக வாழ்ந்திருக்கும். வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி டி.வி.சர்மா அக்டோபர் ஒன்றாம் நாள் ஓய்வு பெறப் போகிறார், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டும், இல்லையென்றால் சில சட்டச் சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது, அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனது தீர்ப்பின் சாரத்தை அவர் உறையிடப்பட்ட தாள்களில் அரசிடம் ஒப்படைக்கக் வேண்டும்.
இந்த நாட்டில் அனைவரும் அவர்களுக்குரிய நம்பிக்கைகளோடும்,வழிபாட்டு முறைகளோடும் அன்போடும், அமைதியோடும் வாழ வேண்டும் என்பதே நமது ஆவல்.

நன்றி: கை. அறிவழகன்
சிந்திக்கவும்

Related

RSS 8964298278248453357

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item