அயோத்தி தீர்ப்பு: தமிழக மக்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணையில் இருந்தது. அது தொடர்பான தீர்ப்பு வெளியாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் ஆர்வமும் அச்சமும் கலந்த பெரும் பரபரப்பு பொதுமக்களைப் பற்றியிருக்கிறது. யாருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டாலும் நாடு தழுவிய அளவில் பெரும் வன்முறை வெடிக்கும் என்கிற அச்சம் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் வெகுவாக மேலோங்கி உள்ளது.
இந்நிலையில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் எதிர்வரும் அக்டோபர் 3ம் தேதியிலிருந்து அக்டோபர் இறுதிவரை நடைபெறவுள்ளன. இதனால் சர்வதேச அளவிலும் அயோத்தித் தீர்ப்பு தொடர்பான அச்சம் பரவியுள்ளது.
ஒரு சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஜும்மா மசூதி அருகே வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாப் பேருந்தில் வந்திருந்தபோது அப்பேருந்தின் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, ஒரு சிலர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு டெல்லியைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறான சூழலில் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவரவிருப்பது வன்முறைக்கு வித்திடும் என்கிற பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு வன்முறை நிகழ்வுகளில் இஸ்லாமியர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைக் காலம் கடந்த நிலையில்தான் அறிய முடிந்தது. அதாவது இஸ்லாமியர்களின் பெயரால் இஸ்லாமிய விரோதச் சக்திகள் இந்திய எல்லைக்குள் வன்முறையைத் தூண்டி விடுகின்றனர் என்பதைக் காலம் உணர்த்தியிருக்கிறது.
இந்நிலையில் அயோத்தி வழக்கில் இஸ்லாமியருக்கு எதிராகத்தான் தீர்ப்பு வரும் என்பதைப் போலவும் அதனால் இஸ்லாமியர்கள் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதைப் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
எனவே வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் பொது அமைதியைக் கட்டிக்காப்பதற்கு வேறு எவரைக் காட்டிலும் இஸ்லாமியர்கள் கூடுதல் கவனத்துடன் கடமையாற்ற வேண்டும் என்பது இன்றியமையாததாகும்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றுகூடி, தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். அத்துடன், தமிழக அரசும் பொது அமைதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்டு வருகிற முயற்சிகளும் வரவேற்கத்தக்கதேயாகும்.
மேலும் இந்தத் தீர்ப்பு வெளியாகும் நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமெனவும், குறைந்தது மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
இந்துக்களும் இஸ்லாமியர்களும் வெவ்வேறு பண்பாட்டு நடைமுறைகளைக் கொண்டிருந்தாலும், தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்களே என்பதை மறவாமல் எத்தகையத் தூண்டுதலுக்கும் இலக்காகாமல் சகோதர உணர்வுகளுடன் ஒற்றுமையைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சகோதர வாஞ்சையுடன் கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
BJP, RSS-ஐ நம்ப முடியாது-காங்கிரஸ்:
இதற்கிடையே, தீர்ப்புக்குப் பின்னர் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். போன்ற சங் பரிவார் அமைப்புகளும் வன்முறையில் ஈடுபடலாம். அவர்களை நம்ப முடியாது. இப்படித்தான் 1992ம் ஆண்டு அவர்கள் அளித்த வாக்குறுதியை நாடு நம்பியது. ஆனால் அப்போது நடந்த தவறுக்கு இன்று வரை நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. எனவே இவர்கள் விஷயத்தில் அரசு மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் எச்சரித்துள்ளார்.
சேவ்ராய் பரக்கத் அலி---
ReplyDelete2016-தேர்தலுக்கு முஸ்லிம்களுக்கு அழைப்புவிடும் திரு.திருமாவளவன் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மனித நேய மக்கள் கட்சியோடு இணைந்து ஏன் போட்டியிட முன் வரவில்லை?