முஸ்லிம்களின் விஸ்வரூபம் - வேங்கை இப்ராஹீம்

தமிழ்நாடு கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இயல்பு நிலையை இழந்திருக்கிறது... இன்றைக்கும் தெருவோர தேனீர் கடைகள் முதல் பேரங்காடிகள் வரை மக்கள் குலுமக்கூடிய அனைத்து இடங்களிலும் இதுதான் பேச்சு... கூடங்குளம் அணு உலையை திறந்துவிட்டார்களா...? அல்லது மூடிவிட்டார்களா...? இல்லை தமிழகத்தின் பசியைபோக்கிட கலப்பை எடுத்து உழும் உழவர்களின் எதிர்பார்ப்பான காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிட்டதா...? இல்லை தமிழகத்தின் ஏழுகோடி மக்களும் இன்று வருமா நாளை வருமா என்று ஒவ்வொரு நாளும் ஆவலுடன் எதிரபார்க்கும் தடையில்லா மின்சாரம்தான் கிடைத்துவிட்டதா...? இல்லை இல்லை இல்லை...

நடிகர் கமலஹாசன் அவர்கள் தயாரித்து இயக்கி நடித்து தற்போது இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பால் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள விஸ்வரூபம் குறித்துதான் இத்தனை சொல்லாடல்கள்... எப்போதுமில்லாத அளவிற்கு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓரணியில் திரண்டு விஸ்வரூபத்தை திரையிடவிடமாட்டோம் என்று முழங்கிவருகிறார்கள் மறுபுறம் சில முற்ப்போக்குவாதிகளும் நடிகர்களும் படைப்பாளியின் கருத்து சுதந்திரம் பரிபோயவிட்டதாய் பதறுகிறார்கள்...

சினிமா மக்களை கவலைகள் மறந்து மகிழ்ச்சிபடுத்தும் கனவு தொழிற்ச்சாலை... அது சீர்த்திருத்ததிற்க்கான பாடசாலை அல்ல... அததகைய சினிமாத்துறையில் இருந்து நல்ல சிந்தனையாளர்கள் கருத்தியலாளர்கள் ஏன் மகத்துவமான தலைவர்கள் ஆட்சியாளர்கள் இவர்களையெல்லாம் நமது தமிழகம் கண்டுள்ளது என்பதை மறுக்க இயலாது... சினிமா மக்களை வெகு விரைவாக சென்றடையக்கூடிய சாதனம் அந்த சாதனம் முறையாக கையாலபட்டால் சாதனையாகிறது அதுவே வேறுமாதிரியாக பயன்படுத்தபட்டால் பலருக்கு வேதனையாகிறது ஆம் அதுதான் இப்போது நடத்து வருகிறது அமைதிபூங்காவான தமிழ் மண்ணில்...

அப்படி என்னதான் தவறாக விஸ்வரூபத்தில் கமலஹாசன் படம்பிடித்துவிட்டார்? முஸ்லிம்கள் ஏன் இப்படி மூர்க்கத்தனமாக எதிர்க்கிறார்கள்? இதுதான் வெகுஜன மக்களின் கேள்வி... கமலஹாசன் அவர்களால் அவரது அலுவலகத்தில் விஸ்வரூபம் சிறப்புகாட்சியாக திரையிடப்பட்டு இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு காட்டப்பட்டது... படத்தை பார்த்த கூட்டமைப்பினர் விஸ்வரூபம் ஆரம்பம்  முதல் இறுதிவரை முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் இறைவேதத்தையும் தீவிரவாத முத்திரையுடன் இழிவுபடுத்தியுள்ளது ஆகவே இப்படத்தை திரையிடுவதை அனுமதிக்க கூடாது என வாதிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர் சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாகிவிடும் என்பதால் விஸ்வரூபத்தை தடை செய்வதாக அரசு அறிவித்தது...

திரு.கமலஹாசன் தனது படத்தில் கதைக்களம் ஆப்கானிஸ்தான் அப்படி இருக்கையில் முஸ்லிம்களையும் அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் காட்டாமல் எப்படி படம் பிடிக்க முடியும் என்கிறார்... உண்மைதான் ஆனால் அப்கானிஸ்தான் தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் கோவைக்கு ஏன் வந்தார்? மதுரைக்கு ஏன் வந்தார்? இப்படி தேவையில்லாத காட்சிகளை புகுத்தியது யாருடைய தவறு? ஒவ்வொரு காட்சியிலும் தொப்பியும் தாடியும் குரானும் தொழுகையும் தீவிரவாததிற்க்கான அடையாளங்களாக புனையபட்டிருப்பது பாராட்டுக்குறியதா? கடந்தகால கசப்பான நிகழ்வுகளில் இருந்து இப்போதுதான் தமிழக முஸ்லிம்களும் மற்ற சமூக மக்களும் சிறிது சிறிதாக வெளிப்பட்டு வருகின்றார்கள் இந்த சூழலில் அமைதியை குலைக்கும்  வண்ணமாக காட்சியும் கதையும் அமைக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் தடை எப்படி கருத்து சுதந்திற்க்கான தோல்வியாகும்?

சினிமாவை சினிமாவாக பார்க்கவேண்டும் இது சில நவீன  முற்ப்போக்குவாதிகளின் அறிய கண்டுபிடிப்பு ஆம் சினிமாவை சினிமாவகதான் பார்க்கவேண்டும் சினிமாவை சினிமாவகத்தான் படம்பிடிக்க வேண்டும்... கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய அரசின்  சுகாதாரதுறை அமைச்சராக பாமக அன்புமணி இராமதாஸ் பதவியில் இருக்கும்போது திரைப்படங்கள் இளையதலைமுறையினரை சீரழிக்கிறது இனி வரும் திரைப்படங்களில் நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளோ மது அருந்தும் காட்சிகளோ அனுமதிக்கக்கூடாது என சட்டம் கொண்டுவந்தார்... அதற்க்கு அவர் சொன்ன காரணம் சினிமா இளைஞர்களை மிக சுலபமாக ஈர்க்ககூடியதாக இருக்கிறது அந்த சினிமாவில் தங்களது விருப்பத்திற்குரிய நடிகர்கள் உடுத்தும் உடை நடை முகபாவனை இவைகள் இயல்பாக ரசிகனிடம் ஒட்டிக்கொள்கிறது அதேபோல அவர்கள் செய்யும் செயல்களும் ஒட்டிக்கொள்வதால் மிகப்பெரிய சமூக சீர்கேட்டுக்கு வழி ஏற்படுகிறது என்றார்...

அந்த காலகட்டத்தில் திரு ரஜினிகாந்த அவர்களின் நடிப்பில் வெளிவந்த பாபா திரைபடத்தில் புகைபிடிக்கும் காட்சிகளும் மது அருந்தும் காட்சிகளும் நீக்கபடாமல் திரையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தி பாபா படத்தின் பெட்டிகளையே திரையரங்கில்  இருந்து தூக்கி சென்றார்கள் பாமகவினர் இப்போது அதே பாமக மருத்துவர்தான் விஸ்வரூப தடையை எதிர்க்கிறாராம்... பாபா படத்தினால் ஏகப்பட்ட நஷ்டங்களுக்கு உள்ளாகிய திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஆதரவாக அப்போது யாரும் வரவில்லையே... இப்படியாக மது புகைப்டிப்பது போன்ற காட்சிகளே சமூக சீர்கேட்டை விளைவிக்கும் என்கிறபோது ஒரு சமூகம் தொடர்ந்து சினிமாவில் தீவிரவாத முத்திரை குத்தபடுவதால் வெகுஜன மக்களின் விரோத பார்வைக்கு ஆளாகாதா...?

விஜயகாந்த் அர்ஜூன் போன்றவர்களின் படங்களை எல்லாம் எதிர்க்காமல் இப்போது ஏன் எதிர்க்க வேண்டும் நியாயவான்களின்  நியாயமான கேள்வி... தேசபக்தியை இவர்களால் முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டிதான் புலபடுத்த முடிந்தது... அதனால் ஏற்பட்ட வேதனைகளும் காயங்களும் இன்றைக்கும் சிறையிலும் கோவை மதுரை போன்ற நகரங்களிலும் வாழும் முஸ்லிம்களை சென்றுபார்த்தால் தெரியும்... விஜயகாந்தும் அர்ஜூனும் அப்போது கண்டிக்கபட்டிருந்தால் இன்றைக்கு கமலஹாசன் தண்டிக்கபட்டிருக்கமாட்டார் என்பது உண்மைதான்... ஆனால் கமலஹாசன் போன்ற உச்சநட்சத்திரம் படைக்கும்  படைப்புகள் மக்களிடம் பெரியதாக்கததை விதைக்கும் என்பதை அறியாமல்விட்டது அறியாமையல்ல அறிவீனம்...

இயக்குனர் பாரதிராஜா சில வார்த்தைகளை அள்ளிவீசி இருக்கிறார் அது மேலும் முஸ்லிம்களை காயபடுத்தியுள்ளது நடைமுறையதான் கமல்ஹாசன் படம்பிடித்துள்ளாராம் முஸ்லிம்களின் எதிர்ப்பு தவறானதாம் திரு பாரதிராஜா எப்போதாவதுதான் நிதானமாக இருப்பார் எந்த நிலையில் இந்த கருத்தை சொன்னார் என்பது அவருக்குதான் தெரியும்... நடைமுறை என்றால் ஆப்கான் மண்ணில் அத்துமீறி நுழைந்துள்ள அமெரிக்காவின் வரம்புமீரலையல்லவா காட்டியிருக்க வேண்டும்... மாறாக தாயக விடுதலைக்காக போராடும் தாலிபான் போராளிகளை எப்படி தீவிரவாதிகளாக காட்டலாம்...? வியாக்கியானம் பேசும் பாரதிராஜா கருத்து சுதந்திரம் பேசும் பாரதிராஜா கமலஹாசன் பொருளாதார நட்டமடைந்துவிட்டார் என கண்ணீர்விடும் பாரதிராஜா அண்மையில் தர்மபுரியில் தலித் சமூக மக்கள் ஆதிக்கவெரியர்களால் தங்களது இருப்பிடம் பொருளாதாரம் இவற்றையெல்லாம் இழந்து வீதிக்கு வந்தார்களே அவர்களது கண்ணீரை படமாக எடுக்கதயாரா...? அப்படி தயாரென்றால் கமலஹாசனை நாயகனாக்கி உள்ளதை உள்ளதென படம்பிடியுங்கள் அதற்க்கான பொருளாதாரத்தை முஸ்லிம்கள் தருவார்கள்...

கமலஹாசன் நட்டமடைந்துவிடுவார் என்பதால் கூக்குரலிடும் சிலர் விஸ்வரூபத்தில் என்ன கருத்தாக்கத்தை மக்களுக்கு கமல் சொல்லியுள்ளார் என்பது முதலில் விளக்கட்டும்... சமூக சீர்திருத்தங்களை இலாபநோக்கு இல்லாமல் திரைப்படமாக்கிய "வாகைசூடவா" தயாரிப்பாளர் பட்ட நஷ்டத்தை ஈடுக்கட்ட ஏன் இவர்களில் ஒருவரும் முன்வரவில்லை...? "சாட்டை" என்கிற பிரம்மாததை இவர்கள் ஏன் கொண்டாடவில்லை...? விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை படம்பிடித்த "நீர்பறவை" இவர்களின் பாராட்டுக்கு ஏன் உள்ளாகவில்லை...? பிரம்மாண்டங்களின் பின்னால் பல பிரம்மாதங்கள் புதைக்கபடுவதை தடுக்க முதலில் முயற்சியுங்கள்...

கமலஹாசனின் விஸ்வரூபத்திற்கு பின்னால் என்ன அரசியல் காரணங்கள் மறைந்திருந்தாலும் நாட்டின் அமைதியும் சமூக நல்லிணக்கமும் முஸ்லிம்களின் விஸ்வரூபத்தால் காக்கபட்டிருக்கிறது என்பதுதான் உண்மை நிதர்சனம்... ஒரு தனிமனிதனின் பொருளாதார இழப்பிற்கு மாற்றாக மக்களின் சுபிட்சம் இறையாக்கபடுவதை ஏற்றுகொள்ள முடியாது... விஸ்வரூபத்தின் தடை எதிர்காலத்திற்கும் ஏற்ற பாடம்...

வேங்கை.சு.செ.இப்ராஹீம்

Related

முக்கியமானவை 6871658751235357505

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item