விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு

முஸ்லிம் தலைவர்களிடம் படத்தை திரையிட்டு காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே .முஹம்மது ஹனீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கேளிக்கை, பொழுதுபோக்கு, சுய சம்பாத்தியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கொள்கை நெறியாக ஏற்றுச் செயல்படும் இஸ்லாத்தையும், அதை வாழ்வியல் நெறியாகக் கொண்ட முஸ்லிம்களையும் தவறாகச் சித்தரிப்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .

அந்த வகையில் அண்மையில் வெளியான ‘துப்பாக்கித்’ திரைப்படம் தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது . முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகத் துப்பாக்கி படக்குழுவினர் மன்னிப்புக் கோரியதுடன், ஆட்சேபனைக்குரிய காட்சிகளையும் நீக்கினர்.

‘துப்பாக்கி’ ஏற்படுத்திய காயத்தின் வலி தீரும் முன்னே மீண்டும் கமல்ஹாசன்  ‘விஸ்வரூபம்’ எடுத்திருக்கிறார். மென்மையான மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் வெளிவரும் பட்சத்தில் அது அமைதிப் பூங்காவான தமிழகத்தின் நல்லிணக்கச் சூழலைச் சிதைத்து விடுமோ என நாங்கள் அஞ்சுகிறோம் .

மேலும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகள் அடிமட்டத்திலிருக்கும் முஸ்லிம் சகோதரனுக்கும் கூட பெரும் ஐயத்தை ஏற்படுத்துகிறது . இந்த அச்சத்தையும் ஐயத்தையும் போக்க ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதிகளான 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்புகளின் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதற்கு கமல்ஹாசன் கடமைப்பட்டிருக்கிறார்.

அவரது முந்தைய சில படங்களிலும் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதால் எங்களது ஐயம் மேலும் வலுப்பெறுகின்றது. மேலும் முஸ்லிம் சமூகம் பல்வேறு முறைகளில் கமல்ஹாசன் அவர்களிடம் தங்கள் ஐயத்தை எடுத்துச் சென்ற பின்பும் கமல்ஹாசன் அவர்கள் சமுதாயத்தின் அச்சத்தை போக்க எவ்விதத்திலும் முன்வரவில்லை .

முஸ்லிம்களைக் குறித்து படமே எடுக்கக் கூடாது என்பதல்ல எங்களின் நிலைப்பாடு. முஸ்லிம்களின் வாழ்வியலைப் படமாக்குவதில் தவறில்லை. இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள், அவர்களின், கல்வி பொருளாதார நிலை எனப் பதிவிற்காக எவ்வளவோ விஷயங்கள் இருக்க, தொடர்ந்து அவர்கள் தேச துரோகிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவது வேதனைக்குரியது.

எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைத் தமிழகத் திரையுலகினர் மேற்கொள்ளாதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். கற்பனைச் செய்திகளுக்கு திரைத்துறையினர் பலியாகிவிடக் கூடாது. அவர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வுகள் இருக்கின்றன என்பதை நினைவுப்படுத்துகிறோம்.

நங்கள் எடுத்து வரும் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்காத பட்சத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தங்கள் எதிர்ப்பு மற்றும் உணர்வுகளை ஜனநாயக ரீதியான போராட்டங்கள் மூலம் தெரிவிக்க வேண்டியது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடும். அத்தகைய சூழல் எழாத வண்ணம் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டியது ஒவ்வொருவரின் மீதும் கடமையாகின்றது என்பதை இக்கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது.

Related

முக்கியமானவை 8007830106297651178

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item