பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில நிர்வாகிகள் தேர்வு
http://koothanallurmuslims.blogspot.com/2013/01/blog-post_826.html
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில பொதுக்குழு ஜனவர் 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவில் துவக்கவுரையாற்றிய மாநில தலைவர் தனது உரையில் பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த காலங்களில் கடந்து வந்த பாதை மற்றும் இயக்கத்தின் வளர்ச்சி குறித்து கோடிட்டுக்காட்டினார். பின்பு மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து தேசியச்செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா தேசிய அளவிலான பணிகளைக் குறித்து எடுத்துரைத்தார்.
அதன் பின் பொதுக்குழு சமூக , பொருளாதார , அரசியல் ரீதியான விவாதங்களையும் , எதிர்காலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் முன்னேற்றம் , நிகழ்ச்சிகள் குறித்தும் விவாதித்தது. அதன் பின் பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வாக அடுத்த இரண்டாண்டிற்கான மாநில செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தேசிய தலைவர் கே.எம்.ஷரீப் தலைமையில் , தேசிய செயலாளர் M.முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாநில தலைவர், பொதுச்செயலாளர் , துணைத்தலைவர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர் .
தேர்தலில் கீழ் கண்டவாறு மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் - ஏ.எஸ். இஸ்மாயில் (கோவை)
துணைத்தலைவர் - முஹம்மது ஷேக் அன்சாரி (சென்னை)
பொதுச்செயலாளர் - ஏ. காலித் முஹம்மது (மதுரை)
செயலாளர்-1 - முஹம்மது ரஸீன் (ராமநாதபுரம்)
செயலாளர்-2 - முஹம்மது இலியாஸ் (மதுரை)
பொருளாளர் - ஃபைஜல் அஹமது (கன்னியாகுமரி)
மாநில செயற்குழு உறுப்பினர்களாக A.அஹமது பக்ருதீன், அட்வகேட்.முஹம்மது ஷாஜஹான், A.K.அமீன் , A.அபூபக்கர் சித்தீக் , M.Y.அப்பாஸ் , S.சபியுல்லாஹ் , A.முஹம்மது கைசர் , இபுராஹீம், A.முஹைதீன் அப்துல் காதர் மற்றும் A.சாஹுல் ஹமீது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
இடமிருந்து வலம் : S.இல்யாஸ்
(மாநில செயலாளர் ) , A.ஹாலித் முஹம்மது (மாநில பொதுச்செயலாளர் ) ,
A.S.இஸ்மாயீல் (மாநில தலைவர்) , M.முஹம்மது அலி ஜின்னா (தேசிய செயலாளர்) ,
K.M.ஷரீப் (தேசிய தலைவர்) , M.முஹம்மது ஷேக் அன்சாரி (மாநில துணைத்தலைவர்)
, J.முஹம்மது ரசீன் (மாநில செயலாளர்) , S.பைசல் அஹமது (மாநில பொருளாளர்)
பொதுக்குழுவில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது :
பாப்புலர் ஃப்ரண்ட் தினம்
பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்த சமூக இயக்கங்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற ஒரு கொடையின் கீழ் செயல்படுவதென பிப்ரவரி 17 , 2007 பெங்களூருவில் நடைபெற்ற எம்பவர் இந்தியா கான்ஃபரன்சில் தீர்மானிக்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட அந்த தினத்தை கொண்டாடும் வகையில் வரும் 2013 முதல் பிப்ரவரி 17 ஐ பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வரும் பிப்ரவர் 17 , 2013 ல் இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கோலாகலமாக கொண்டாடப்படும் .அதன் ஒரு பகுதியாக யூனிட்டி மார்ச் (Unity March) நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கொண்டாட்டம் மற்றும் நிகழ்ச்சிகளை மாநில செயற்குழு முடிவு செய்யும்.
பதவி உயர்வில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு
பதவி உயர்வில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் அமைப்புச் சட்ட திருத்தத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது . மத்தியில் பல்வேறு அமைச்சர்களுக்கான செயலாளர் அளவிலான 126 பதவிகளில் ஒரு தலித் அதிகாரி கூட கிடையாது . தலித் பழங்குடியினருக்கு 22.5 % இடஒதுக்கீடு இருக்கும் நிலையில் அவர்களுக்கு உயர் பதவிகளில் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதற்கான சான்றாகும் . இந்த சூழ்நிலையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் வரவேற்கத்தக்கதாகும் .
இதே போன்று தான் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் மேல்மட்ட பதவிகளில் மட்டுமல்லாமல் அனைத்து பதவிகளிலும் தலித் , பழங்குடியினரை விட மிகவும் மோசமான அளவில் உள்ளது. எனவே இடஒதுக்கீடு விஷயத்தில் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து சமூகத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெற மத்திய அரசு பல்வேறு கமிஷன்கள் பரிந்துரைத்த முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கிட தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது .
குண்டர் தடுப்புச் சட்டம்
ஒருவர் மீது கிரிமினல் வழக்கு இருந்தால் போதும் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்கலாம் என கடந்த மாதம் நடைபெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது . இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்பதை சுட்டிக் காட்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுக்குழு இவ்வாறு பிரயோகிப்பது சாமானிய மக்களின் மீது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது .
பெருகி வரும் குற்ற விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதிலோ சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்பதிலோ எந்த மாற்றுக் கருத்தும் இல்லை . ஆனால் கடந்த கால வரலாறுகளை பார்க்கும் போது குண்டர் தடுப்புச் சட்டம் என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் காவல்துறையின் எதேச்சதிகார நடவடிக்கையின் அடிப்படையில் தான் பெரும்பாலும் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது . நூற்றுக்கணக்கான உயர்நீதிமன்ற தீர்ப்புகளே இதற்கு சாட்சியாக உள்ளது.
மேலும் குண்டர் தடுப்புச் சட்டம் என்பது சாதாரண பொதுவான நடைமுறை சட்டம் அல்ல. குற்றம் செய்வதை வழமையாகக் கொண்ட ஒரு தொடர் குற்றவாளியின் மீது பிரயோகிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புச் சட்டமாகும். இந்த நிலையில் மிகவும் தவறாக பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சட்டத்தின் வரம்பை ஒரு வழக்கு இருந்தால் போதும் இந்த சட்டத்தை பிரயோகிக்கலாம் என்ற வரம்பற்ற அதிகாரத்தை வழங்குவது ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் ஆபத்தை விளைவிக்கும் என இப்பொதுக்குழு கருதுகின்றது .
காவல்துறையில் பொதுவாக நிலவி வரும் பாரபட்சமான தன்மை, சிறுபான்மை விரோத போக்கு, ஆதிக்க மனப்பான்மை ஆகியவை இச்சட்டத்தை சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பிரயோகிக்க வழிவகுக்கும் . ஆகவே மேற்கூறப்பட்ட காரணங்களை ஆய்வு செய்து இச்சட்டம் குறித்தான தனது முடிவை தமிழக அரசு கைவிட வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
திரையுலகின் முஸ்லிம் விரோத போக்கு
உலக அளவில் சினிமாத்துறை என்பது ஒரு வியாபார சந்தையாக இருந்து வந்தாலும். இந்தியாவில் அதையும் தாண்டி கூடுதலாக சமூக, அரசியல் தளங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு துறையாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு இயக்கமோ அல்லது அரசியலோ கொண்டு வரமுடியாத கருத்தாக்கங்களை சினிமாத்துறை மூலம் கொண்டு வரும்போது அது சிறுவர் முதல் பெரியவர் வரை எளிதில் சென்றடைந்துவிடுகிறது.இப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த துறை துவக்க காலம் தொட்டே இந்தியாவின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை கொடுமையான கந்து வட்டிக்காரர்கள், கடத்தல் பேர்வழிகள், தமிழ் தெரியாத சேட்டுகள் என மோசமானவர்களாகவே காட்டி வந்துள்ளது. அது அப்படியே வளர்ச்சியடைந்து அண்மைக்கால சினிமாக்களில் முஸ்லிம்களை, தேசத்துரோகிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் வெளிவந்த திரைப்படமான ‘துப்பாக்கி’ ஒவ்வொரு முஸ்லிமும் சந்தேகத்திற்குரியவன் என்ற இறுதி தாக்குதலை முஸ்லிம் சமூகத்தின் மீது தொடுத்தது.இந்நிலையில் ‘துப்பாக்கி’ படக்குழுவினரை இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் சந்தித்து உண்மை நிலையை எடுத்துச் சொன்ன உடன் அவர்கள் மன்னிப்புக் கோரியதுடன் ஒரு சில நகர்ப்பகுதிகளில் திரைப்படத்தில் சொற்பமான மாற்றங்களையும் செய்தனர்.
இதற்கு அடுத்தபடியாக இப்போது ஒரு திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே ‘ஹேராம்’, ‘உன்னைப்போல் ஒருவன்’ போன்ற திரைப்படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், குரோதத்தையும் உமிழ்ந்த நடிகர் கமல்ஹாசன் இப்போது எடுத்து இன்னும் திரைக்கு வராத ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படம் முஸ்லிம்கள் குறித்து மிகவும் மோசமான செய்திகளை தாங்கி வருவதாக சொல்லப்படுகின்றது. படம் திரைக்கு வரும் முன் அதனைப்பற்றி விமர்சனம் செய்வது நல்ல நடைமுறையல்ல என்றாலும் இதற்கு முன் உள்ள அனுபவங்கள், சமீபகாலமாக சந்தேகத்திற்கிடமான வகையில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், பேட்டிகள் மற்றும் இணையத்தில் ‘யூ டியூப்பில்’ விஸ்வரூபம் தொடர்பாக காணக்கிடைத்த சில காட்சிப் பதிவுகள் முஸ்லிம் சமூகத்தில் பெரியதொரு கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
எனவே இவ்விவகாரத்தில் அரசு உடனே தலையிட்டு இத்திரைப்படம் தொடர்பான விவாதங்கள் மற்றும் ஐயங்களை போக்க வேண்டும் . திரைப்படத்தில் சிறுபான்மை முஸ்லிம் விரோத காட்சிகள் இருக்கும் பட்சத்தில் , எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது . மேலும் சமூகத்தில் பிளவை உண்டாக்கும் இது போன்ற திரைப்படங்களை திரைப்பட தணிக்கைத்துறை எவ்வாறு அனுமதிக்கின்றது என்பது குறித்தும் ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது .
அந்நிய நேரடி முதலீடு
கடந்த காலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சிகளும்,தற்போதைய மன்மோகன் அரசும் விவசாயத் துறையில் மேற்கொண்ட தவறான தாரளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையால் இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதை இந்நாடு இன்னும் மறக்கவில்லை. இடைத்தரகர்களின் தலையீட்டாலும், ஊகவர்த்தகத்தாலும் விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் கோடிக்கணக்கான விவசாயிகள் இத்தொழிலை விட்டு வெளியேறும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில் நம் நாட்டு விவசாயிகளை அந்நிய நிறுவனங்களுக்கு நிரந்தர அடிமைகளாக்க முயலும் மன்மோகன் தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கின்றது.
விவசாயத்தை தொடர்ந்து நம் நாட்டு பொருளாதார அச்சாணியாகவும் கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதரமாகவும் விளங்கும் சில்லரை வர்த்தகத்தை வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்க சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் மசோதாவையும் அதற்கு துணை நின்றவர்களையும் இப்பொதுக்குழு கண்டிக்கின்றது.மேலும் விவசாயிகள்,வியாபாரிகளின் வாழ்வாதாரமான சில்லரை வர்த்தகத்தை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கின்றது.
பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள்
பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பாலியல் வன்முறைகளும் பெருகி வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனைத் தடுத்திடும் ஒரு முயற்சியாக மாவட்டம்தோறும் மகளிர் விரைவு நீதிமன்றம் உட்பட தமிழக அரசின் 13 அம்ச திட்ட அறிவிப்பை இப்பொதுக்குழு வரவேற்கின்றது . தமிழக முதலவர் அவர்கள் இந்தியாவில் முதல் முறையாக இப்படிப்பட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வழிவகை செய்துள்ளது பாராட்டுக்குரியது.
அதே வேளையில் இச்சட்டம் எதிர்காலத்தில் தவறாக பிரயோக்கிக்கப்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் . இச்சட்டத்திலுள்ள குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகள் ஏற்கனவே தவறாக பிரயோகிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் கவனத்தில் கொண்டு அப்பாவிகளுக்கு எதிராக இச்சட்டம் தவறாக பிரயோக்கிக்கப்படாது என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இப்படிக்கு
A.ஹாலித் முஹம்மது
மாநில பொதுச்செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு