விஸ்வரூபத்திற்கு தடை விதிக்கவேண்டும் – அகில இந்திய முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை!

புனித திருக்குர்ஆனை அவமதிக்கும் விதமான காட்சிகள் அடங்கிய கமலஹாசனின் விஸ்வரூபம் என்ற திரைப்படம் திரையிடுவதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கவேண்டும் என்று அகில இந்திய அளவில் முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான மூவ்மெண்ட் ஃபார் சிவில் ரைட்ஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

திரையரங்குகளிலும்,  டி.டி.ஹெச் மூலமாகவும் விஸ்வரூபம் திரையிடப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், இத்திரைப்படத்தை சென்சார் போர்ட் மீண்டும் தணிக்கைச் செய்யவேண்டும், புனித திருக்குர்ஆனையும், முஸ்லிம்களையும் மோசமாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்கவேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகளை இக்கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

இதுக்குறித்து கூட்டமைப்பின் தலைவர்கள் கூறியது: “இத்திரைப்படத்தை தற்போதைய சூழலில் பார்க்கும் பொதுமக்கள் தாடி வைத்துள்ள முஸ்லிம்களை குண்டுகளை வைக்க தயாராகும் தீவிரவாதிகளாக முத்திரைக் குத்திவிடுவார்கள். திருக்குர்ஆனை தீவிரவாதத்தின் மூலக்காரணமாகவும், முஸ்லிம்களை நாகரீகமில்லாதவர்களாகவும், முஸ்லிம் சமுதாயமே தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நெறிமுறை வழிகாட்டுதல்களை புறக்கணித்துவிட்டு சென்சார் போர்ட் இத்திரைப்படத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆகையால் முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கும் தற்போதைய சூழலில் இத்திரைப்படத்தை திரையிடுவதை தடைச் செய்யவேண்டும். தேவர் மகன், விருமாண்டி, ஹே ராம் போன்ற திரைப்படங்களிலும் கமலஹாசன் பிறரை இழிவுப்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார் இவ்வாறு தலைவர்கள் கூறினர்.

திரைப்படத்திற்கு தடை ஏற்படுத்தாவிட்டால் ஜனநாயகரீதியில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் எதிர்ப்போம் என்று எஸ்.டி.பி.ஐ தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலி கான் தெரிவித்தார்.

தனது திரைப்படத்தை திரையிட அனுமதிக்காதது கலாச்சார தீவிரவாதம் என்றும் தேசப்பற்றுள்ள முஸ்லிம்கள் தனது திரைப்படத்தை விரும்புவார்கள் எனவும் கமலஹாசன் கூறியதை முஸ்லிம் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்தது. சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற முஸ்லிம்களின் தேசப்பற்ற அளப்பதற்கான ஊடகம் அல்ல இத்திரைப்படம் என்று கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது.

பெண்களை வியாபாரப் பொருளாக்கி சித்தரிப்பது, மக்களின் உணர்வுகளுக்கு காயம் ஏற்படுத்துவது போன்ற விவகாரங்களில் சென்சார் போர்ட் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

விஸ்வரூபம் திரைப்படத்தை தேசம் முழுவதும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இன்று கூட்டமைப்பின் தலைவர்கள் மனு அளிப்பார்கள். மேலும் இதன் நகல் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர் மனீஷ் திவாரி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், டெல்லி லெஃப்டினண்ட் கவர்னர் தேஜேந்திர கன்னா ஆகியோருக்கும் அனுப்பப்படும்.

இம்மனுவில் அன்ஸார் உல் ஹக் (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா), ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் (SDPI தேசிய பொதுச் செயலாளர்), முஹம்மது அனீஸுஸ்ஸமான் (கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா), மவ்லானா உஸ்மான் பேக் (ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்), டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான் (ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா), மவ்லானா அப்துல் வஹ்ஹாப் கில்ஜி(ஆல் இந்தியா இஸ்லாஹி மூவ்மெண்ட்), டாக்டர் பஷீர் முஹம்மது கான் (முஸ்லிம் லீக்), டாக்டர் தஸ்லிம் ரஹ்மானி(முஸ்லிம் பொலிட்டிக்கல் கவுன்சில்), மவ்லானா அன்ஸார் ராஸா (கரீப் நவாப் ஃபவுண்டேசன்), இர்ஃபானுல்லாஹ் கான் (ஜாமிஆ நகர் ஒருங்கிணைப்பு கமிட்டி) உள்பட ஏராளமான பிரமுகர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Related

முக்கியமானவை 3925141627178255867

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item