பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து SDPI ஆர்ப்பாட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2013/01/sdpi_10.html
பாலியல் வன்கொடுமைகளை கண்டிக்கும் அரசுகள் அதற்கு காரணமான மதுக்கடைகளை ஏற்று நடத்துவது கேளிக் கூத்தான செயல் என்று சென்னையில் பாலியல் வன்முறைகளை கண்டித்து SDPI கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரபீக் அஹமது கூறியுள்ளார்.
சென்னையில் SDPI கட்சியின் சார்பில் பாலியல் வன்முறைகளை கண்டித்து மெமோரியல் ஹால் முன்பு (ஜன.8) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரபீக் அஹமது கூறுகையில்;
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை என்பது நாகரீக உலகை அமைத்து விட்டதாக பிதற்றிக் கொள்ளும் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் பெருத்த அவமானமாகும். இது ஏதோ ஒரு தினத்தில், ஏதோ ஒரு நகரத்தில் மட்டும் நடந்து முடிந்துவிட்ட சம்பவம் என்று விட்டு விட முடியாது. ஒவ்வொரு 23 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன் கொடுமை நடப்பதாகவும் 2012 ஜனவரி முதல் நவம்பர் வரை டெல்லியில் மட்டும் 635 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் தலைநகர் டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் நாட்டை உலுக்கி கொண்டிருக்கும் போதே தமிழகத்தில் புனிதா என்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அதைப்போலவே கடந்த 2007 டிசம்பர் 26 ஆம் நாள் ஹைதராபாத்தில் ஆயிஷா மீரா என்ற 19 வயது மருத்துவ மாணவி அவர் தங்கியிருந்த விடுதியிலேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினர் கடந்த 5 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கின்றனர்.
எனவே அதிகரிக்கும் பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தக் கோரியும், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கவும், இதற்கு மூல காரணியாக விளங்கக் கூடிய ஆபாச சினிமா, ஆபாச விளம்பரங்கள் ஆபாச உடைகள் அணியும் கலாச்சாரம் ஆகியவற்றை தடைச் செய்யவும், பூரண மது விலக்கை அமல்படுத்தவும் வலியுருத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
எனவே மத்திய மாநில அரசுகள் பாலியல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். உணர்ச்சிகளை தூண்டும் வகையில் வெளியிடப்படும ஆபாச சினிமாக்கள், ஆபாச விளம்பரங்கள் கண்கானிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். பள்ளிக் கல்விகளில் ஆரம்பம் முதல் ஒழுக்கப் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும். மதுரை ஆதீனம் கூறியது போன்று பெண்கள் தங்களது உடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை கண்டிக்கும் அரசுகள் அதற்கு காரணமான மதுக்கடைகளை ஏற்று நடத்துவது கேளிக் கூத்தான செயலாகும். எனவே பாலியல் வன்முறைக்கு மூல காரணியாக விளங்கும் மதுவையும், ஆபாசங்களையும் தடை செய்ய வேண்டும், என்று மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் நிர்வாகிகள், செயல் வீரர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.