விஸ்வரூபம் எதிர்ப்புகள் தேவையற்றதா?

சகிப்புத் தன்மையும், பொறுமையும் இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்காகவே ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது என்பதை மீண்டும் புரியவைப்பதுதான் உலகநாயகன் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்.

ஏற்கனவே நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழக அரசு முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகளையும், துப்பாக்கி திரைப்பட தரப்பினரையும் அழைத்து பேசி சில காட்சிகளை நீக்குவதற்கு சம்மதிக்க வைத்தது. இதனால் எதிர்ப்பு தணிந்தது. இந்நிலையில்தான் கமலஹாசனின் 3 மொழிகளில் வெளியாகவிருந்த விஸ்வரூபத்தின் ட்ரெயிலர் காட்சிகள் இணையதளங்களில் வெளியானது. அதில் இடம் பெற்றிருந்த காட்சிகள் முஸ்லிம் அமைப்பினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. ஏற்கனவே ‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறுகளை அள்ளிவீசிய கமலின் ‘மதசார்பற்ற’ வேடம் கலைந்திருந்தது. இதுவும் முஸ்லிம்களுக்கு கமலைக் குறித்த நம்பிக்கையை சீர்குலைத்திருந்த நிலையில் விஸ்வரூபம் படத்தைக் குறித்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் அவருடன் சந்திப்பை நடத்தினர்.’

இத்திரைப்படத்தை பார்த்து நீங்கள் பெருமைப்படுவீர்கள், பிரியாணி போடுவீர்கள்’ என்று நடிகருக்கே உரிய பாணியில் நாடகமாடிய கமலிடம், அத்திரைப்படத்தின் ப்ரீவியூவை போட்டுக் காட்டுமாறு முஸ்லிம் அமைப்பினர் கோரினர். இதற்கு உரிய பதில் அளிக்காமல் இழுத்தடித்த கமல், கடந்த 21-ஆம் தேதி அதற்கான ஏற்பாட்டைச் செய்தார். திரைப்படத்தை பார்த்த பிறகு அதில் முழுக்க முழுக்க
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது, புனித திருக்குர்ஆனை தீவிரவாதத்தின் ஆணிவேராகவும், தொழுகை உள்ளிட்ட வணக்கங்கள் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும் காட்டுவது உள்ளிட்ட குறைபாடுகளை முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள் கமலுக்கு சுட்டிக்காட்டினர். ஆனால், இக்காட்சிகளை நீக்குவதற்கு கமல் தயாராகாமல் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அமைதியாக பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கம் கமலுக்கு இருக்கவில்லை. இதனைத் தொடர்ந்தே போராட்டம் நடத்தப்போவதாக முஸ்லிம் அமைப்பினர் அறிவித்தனர். சென்னை போலீஸ் கமிஷனரிடமும், தமிழக உள்துறைச் செயலாளரிடமும் இதுக்குறித்து சந்தித்துப் பேசினர். இதன் காரணமாக 2 வார காலத்திற்கு தமிழகத்தில் விஸ்வரூபத்தை திரையிட அரசு தடை விதித்தது.

முஸ்லிம்களின் எதிர்ப்பையும், தமிழக அரசு விதித்த தடையையும் கருத்து சுதந்திரத்தின் பெயரால் சில அரசியல் கட்சியினரும், திரையுலகை சார்ந்தவர்களும் எதிர்த்து கருத்துக்களை தெரிவித்தனர். இதில் ஒரு உண்மையை அவர்கள் வசமாக மறந்துவிட்டார்கள். திரைப்படத்தில் எவ்வாறு கருத்துக்களை தெரிவிப்பது சுதந்திரமோ, அதைப்போலவே அதற்கு எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கும், போராட்டங்களை நடத்துவதற்கும் சுதந்திரம் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. போராட்டங்கள் வரம்புகளை மீறக்கூடாது என்று கூறுகிறோம்.

சமீபத்தில் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமையை எதிர்த்து நடந்த போராட்டங்கள் எல்லை மீறியபோதும் இதே கருத்துக்கள் வெளியானது. எவ்வாறு போராட்டம் நடத்துவதற்கான சுதந்திரம் எல்லை மீறக்கூடாதோ, அதைப்போலவே கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமும் எல்லையை மீறிவிடக் கூடாது.

திரைப்படத்தை பார்க்காமல் எதிர்க்கலாமா? என்று சிலர் அறிவுபூர்வமான(?) கேள்வியை எழுப்புகின்றனர். திரைப்படத்தின் ப்ரீவியூவை பார்த்த பிறகே முஸ்லிம் அமைப்புகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். முல்லா உமரையும், பின்லேடனையும் தீவிரவாதிகளாக சித்தரிக்காமல் வேறு எப்படி காட்சிப்படுத்த முடியும் என்று அறிவுஜீவியான(?)  இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்புகிறார். தனது சொந்த நாட்டை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவை எதிர்த்து தாலிபான்கள் சுதந்திரத்திற்கான போராட்டை நடத்துகின்றனர். ஆனால், ஒரு தேசத்துக்குள்ளே இருந்து கொண்டு தனி ஈழம் கேட்டு போராடிய பிரபாகரனை தீவிரவாதியாக சித்தரித்து எடுத்தால் தமிழ் உணர்வு கொண்ட தன்மானச் சிங்கங்கள் பொறுத்துக் கொள்வார்களா?

டேம் 999 என்ற திரைப்படத்தை கேரளாவைச் சார்ந்தவர் வெளியிட்டதற்கு வானத்திற்கும், பூமிக்கும் குதித்து தடைகோரியவர்கள், முஸ்லிம்களின் உணர்வுகளை குறித்து ஏன் கவலைப்பட மறுக்கின்றார்கள்?

அமெரிக்க அஜண்டாவின் ஒரு பகுதியாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணனும், சங்க்பரிவாரத்திற்கு ஊதுகுழலாக செயல்படும் சில ஊடகங்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

கேரளாவிலும் பா.ஜ.கவினரை விட ஒரு படி மேலேச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எப்.ஐ தனது அமெரிக்க எதிர்ப்பின் சுயரூபத்தை அம்பலப்படுத்தும் விதமாக விசுவரூபத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது. விசுவரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகும் என கூச்சலிடும் இதே மார்க்சிஸ்ட் கட்சியினர் தாம் அண்மையில்
இவர்களின் உத்தரவின் பேரில் குண்டர் படையால் கொலைச் செய்யப்பட்ட டி.வி.சந்திரசேகரனைக் குறித்த திரைப்படம் தயாரிக்க முயன்றவர்களை மிரட்டி பின்வாங்க வைத்தார்கள் என்பதை நாம் இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

இதுத் தொடர்பாக கேரள மாநில அனைத்து பள்ளிக்கூடங்களின் கலை நிகழ்ச்சியில் மோனோ ஆக்ட் நடத்தியதை கூட இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கட்சியில் இருந்து விலகி தங்களது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவோரை பொறுத்துக் கொள்ள முடியாமல் குண்டர் படைகளை ஏவி கொலைச் செய்யும் இந்த கருத்து சுதந்திர போராளிகள் தாம் விஸ்வரூபத்திற்கு ஆதரவாக வாள் ஏந்துகின்றனர். கேரள கம்யூனிஸ்டுகளின் ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு என்பதது வெறும் கபட நாடகம் என்பதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் கபட வேடமே என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஏற்கனவே விக்கிலீக்ஸ் இவர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பின் சுயரூபத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கமலஹாசனின் விசுவரூபம் சிறிய விஷயமல்ல.பெரிய ரூபமே! வெறும் முஸ்லிம்களின் இமேஜை கெடுப்பது மட்டுமல்ல, தெளிவான ஏகாதிபத்திய அஜண்டாவாகும். அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சக்திகள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரால் நடத்தி வரும் அனைத்து அட்டூழியங்களையும் நியாயப்படுத்துவதே விசுவரூபம்.

உளவாளியாக ஊடுருவி ஆப்கானியர்களை ஏமாற்றுவது குற்றமல்ல. பெண்களையும், குழந்தைகளையும் கொன்றொழிப்பதும், கிராமம் முழுவதையும் குண்டுவீசி தரை மட்டமாக்குவதும் தவறு அல்ல. நிரபராதிகளான ஆப்கான் பெண்களை சுட்டுக்கொல்லும் அமெரிக்க ராணுவத்தினர் தங்களது தவறுகளுக்காக மன்னிப்புக்கேட்ட சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. சுட்டுக் கொலைச் செய்த இறந்த உடல்கள் மீது சிறுநீர் கழித்தும், உறுப்புக்களை சிதைத்து கோரமாக்கிய நிகழ்வுகள் ஏராளம் நடந்துள்ளன.

திருக்குர்ஆனை அவமதித்த சம்பவங்களும் உண்டு.குவாண்டனாமோவிலும், அபூகுரைபிலும் அமெரிக்க ராணுவ நடத்திய சித்திரவதைகளின் உச்சக்கட்டமான விசுவரூபங்களை உலகம் கண்டுள்ளது. ஒரு அமெரிக்க ராணுவ வீரன் ஒரு பெண்ணை சுட்டுக்கொல்லும்பொழுது ‘சே’ என சங்கபடப்படும் அந்த அப்பாவித்தனமான கள்ளத்தனம் இருக்கிறதே அதுதான் விசுவரூபத்தை மேலும் கொடூரமாக மாற்றுகிறது.

கருத்து சுதந்திரம் என்று எகிறி குதிக்கும் போராளிகளிடம் நாம் சில கேள்விகளை முன்வைக்கிறோம்:
கருத்து சுதந்திரத்தின் பெயரால் திரைப்படம் தயாரிக்கும் யாராவது குண்டுவெடிப்புகளை நிகழ்த்த செல்லும்போது இயேசுவின் சிலையின் முன்பாக(கிறிஸ்தவர்களின் கொள்கை) மெழுகுவர்த்தியை கொழுத்தி ’தேவனே என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று கூறி புறப்படும் காட்சிகளை எடுத்துள்ளார்களா?

கோயில் வாயிலில் தேங்காயை உடைத்து பகவானின்(ஹிந்துக்களின் கொள்கை)சம்மதம் பெற்று மலேகானிலும், அஜ்மீரிலும் குண்டுவெடிப்பை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நிகழ்த்தினார்களே! அதனை கருத்து சுதந்திரத்தின் பெயரால் யாரேனும் திரைப்படத்தில் காட்சி படுத்தினார்களா? ஆனால், அவ்வாறு எந்த சம்பவங்களும் நடக்கவில்லை.ஆனால், புனித திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி விட்டு தாக்குதல் நடத்த செல்வதை காட்சிப்படுத்துவது மட்டும் கருத்து சுதந்திரமா?

தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் வேளையில் தொழுகை நடத்துவதை காட்டும்போது அவர் உண்மையான உறுதியான முஸ்லிம் என்பதை நிலைநாட்டுவதன் பெயர் கருத்து சுதந்திரமா?

எல்லாம் முடிந்த பிறகு ஒரு காம்ப்ரமைஸாக ’எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள்’ அல்லர் என எழுதி காண்பித்துவிட்டால் முஸ்லிம்கள் சமாதானமாகிவிடுவார்கள் என்ற எண்ணம் போலும். ஆனால் அந்த வாசகத்தின் பின்னணியில் ‘தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களே’ என்ற வார்த்தைகள் மறைந்திருப்பதே நாம் புரிந்துகொள்ளலாம்.

கமலஹாசன் போன்றோர் ஏன் இதே கருத்தை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் திரைப்படங்களை இயக்குகின்றார்கள்? என்பதை குறித்து யாரேனும் சிந்தித்ததுண்டா? இந்நாட்டில் மக்கள் நலனை பாதிக்கும், மக்கள் சந்திக்கும் எத்தனை பிரச்சனைகள் உள்ளன!லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் தற்கொலை!சங்க்பரிவார ஹிந்துத்துவா தீவிரவாத சக்திகளின் நாசவேலைகள், கலவரங்கள், இனப் படுகொலைகள்! ஊட்டச்சத்துக் குறைவால் பலியாகும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!சுற்றுச்சூழல் குறித்து கவலைப்படாத அரசின் முட்டாள்தனமான நடவடிக்கைகள்!மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரால் பழங்குடியினரை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதம்!எல்லை மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்பு படையினர் நடத்தும் அட்டூழியங்கள்! இவையெல்லாம் திரைப்படத்தில் காட்சிப் படுத்த வக்கில்லாமல் முஸ்லிம் தீவிரவாதம் என்ற ஏகாதிபத்திய கருத்தியல் வாதத்தை மட்டும் பூதாகரப்படுத்துவன் பின்னணி என்ன? முஸ்லிம் தீவிரவாதம் என்றால் மேற்கத்திய நாடுகளில் இருந்து ஸ்பான்சரிங் எளிதாக கிடைப்பததுதான் காரணமா?

30 ஆண்டுகளில் முஸ்லிம்களை இழிவுப்படுத்தும் 300 திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. ஆகவே இதனையும் அந்த லிஸ்டில் சேர்த்துவிடலாம் என சிலர் கூறுவதும் முட்டாள்தனமாகும். அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு போரை முற்றிலும் முழுமையாக ஆதரிக்கும் விசுவரூபத்தை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

அமெரிக்க பாதுகாப்புத்துறையின் பங்கு இத்திரைப்படத்தில் உள்ளது என்பது தெள்ளந்தெளிவாக தெரிந்த பிறகும் அதனை ஆதரிப்போருக்கு ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளது. மதசார்பற்றவாதி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கமலஹாசன் கூறும்பொழுது சிலருக்கு அவர் மீது இரக்கம் ஏற்படுகிறது.

மதசார்பற்ற மாநிலத்தையோ, நாட்டையோ தேடிச்செல்லப்போகிறாராம்! அவருக்கு இடம் அளிக்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தயாராக இருக்கும்பொழுது ஏன் அவருக்கு இந்த கவலை? மதசார்பற்ற வாதி என்று கூறும் கமல், அமெரிக்காவில் உள்ள மதசார்பற்றவாதிகளான நோம் சோம்ஸ்கி போன்றோரின் கருத்துக்களை ஏன் திரைப்படமாக வடிக்கவில்லை. எத்தனையோ அமெரிக்க எழுத்தாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், செப்டம்பர் 11 தாக்குதலை அமெரிக்காவே திட்டமிட்டு நடத்தியது என்று கூறி ஏராளமான கட்டுரைகளையும், டாக்குமெண்டரிகளையும் வெளியிட்டுள்ளனரே இதுவெல்லாம் மதசார்பற்றவாதியான கமலின் கண்களில் படவில்லையா?

தன் மீது அனுதாபத்தை ஏற்படுத்த கமல் நடத்தும் நாடகம் அன்றி வேறு என்ன? உலகநாயகனுக்கு இதுவெல்லம கைவந்த கலையாகிவிட்டதே? கேரளாவில் உள்ள சில முஸ்லிம் அறிவுஜீவிகள் விசுவரூபத்தை எதிர்ப்பது கமலுக்கு விளம்பரத்தை தேடித்தந்துவிடும் என்றும், இதற்கு பதிலாக முஸ்லிம்கள் திரைப்படம் எடுக்கவேண்டும் எனவும் அறிவுரை வழங்குகின்றனர். இதனை எத்தனைகாலமாக சொல்லி வருகின்றீர்கள்!

எப்பொழுதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் குறித்தோ, பாசிச பயங்கரவாதத்தை குறித்தோ திரைப்படம் எடுப்பதற்கு திட்டமாவது தீட்டினீர்களா? நீங்கள் திரைப்படம் எடுக்கும் வரை இம்மாதிரியான திரைப்படங்களின் மூலம் எத்தனை நபர்களின் மூளை சலவைச் செய்யப்படும் என்பதைக் குறித்து யோசித்தீர்களா? வீதிகளில் இறங்கி போராட மனமின்றி பிறரது போராட்ட உணர்வையும் நீர்த்துப்போகச் செய்யும் இத்தகைய நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அண்மையில் மலையாள இயக்குநர் கமல்,  அரபு நாடுகளில் இந்தியாவில் இருந்து வேலைக்குச் செல்லும் பெண்கள் அனுபவிக்கும் வேதனைகள் குறித்து ‘கத்தாமா’ என்ற பெயரில் மிகைப்படுத்திய ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்த கிறிஸ்தவ சமுதாயத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் இவ்வாறு கூறினார்: “நான் இனி எப்படி என் மகளை வளைகுடா நாட்டிற்கு அனுப்புவேன்” என்று. ஆனால், எத்தனையோ இந்திய பெண்கள் அதிக சம்பளம் கொண்ட, சிறந்த வேலைகளில் அரபுநாடுகளில் அமர்ந்துள்ளனர் என்பது இவருக்கு தெரியுமா? இந்த மனோநிலையை உருவாக்கியது யார்?

ரெயில் நடந்த உண்மை சம்பவம். தாடியும், தொப்பியும் அணிந்த முஸ்லிம் இளைஞர்கள் முன் சீட்டில் உட்கார்ந்துள்ளனர். பின் சீட்டில் அமர்ந்திருந்த 12 வயது சிறுவனான விஷ்ணுநாத் தனது தாயாரிடம்,”ஹேய் ஹேட் தெம்! ஹேட் தெம்!” என கத்துகிறான். இதைக்கண்ட அருகில் இருந்து ஹிந்து சன்னியாசி ஒருவர் அவனது தாயாரிடம் காரணத்தை வினவுகிறார். அப்பொழுது தாயார்:

‘கடந்த வாரம் ஒரு ஆங்கில திரைப்படத்தை டி.வியில் பார்த்தான்.அதுதான் காரணம்” என்கிறார். திரைப்படத்தில் பார்த்த காட்சி ஒரு சிறுவனின் மனதை எந்த அளவுக்கு பாதித்துள்ளது பாருங்கள். கருத்து சுதந்திரத்தின் பெயரால் இவற்றை அனுமதித்தால் வளரும் தலைமுறைகளின் உள்ளங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாகும்.

அ.செய்யது அலீ

Related

முக்கியமானவை 4439847944399063038

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item