சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே விஸ்வரூபத்திற்கு தடை - ஜெயலலிதா

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். முஸ்லிம் அமைப்புகளும், நடிகர் கமலும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட சம்மதித்தால், அதற்கான ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை விரிவாக அளித்த பேட்டி விவரம்:  “”தமிழகத்தில் மட்டும் விஸ்வரூபம் திரைப்படம் 524 தியேட்டர்களில் திரையிட முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என 24 முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த கூட்டமைப்பினரும், தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்பினரும் அரசிடம் மனு அளித்திருந்தனர். இந்தப் பிரச்னை தொடர்பாக உள்துறைச் செயலாளரையும் சந்தித்துப் பேசி, படத்தைத் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

விஸ்வரூபம் படம் வெளியாக இருந்த தியேட்டர்கள் முன்பாக முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்தப் போராட்டங்கள் வன்முறைச் சம்பவங்களாக மாற வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவித்தன. சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது என்பது, ஒரு சம்பவத்தை அனுமதித்து விட்டு அது வன்முறையாக மாறிய பிறகு அதைத் தடுத்து அமைதியான சூழலுக்கு வழிவகுப்பது அல்ல. ஒரு இடத்தில் பிரச்னைகள் உருவாகி வன்முறைச் சம்பவம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என உளவுத் துறை அறிக்கை அளிக்கும். அப்போது, வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதும், பொது அமைதியை காப்பதும் அரசின் கடமையாகும். அந்த வகையிலேயே விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டு விஷயத்தை தமிழக அரசு அணுகுகிறது.  விஸ்வரூபம் திரைப்படம் வெளியானால், 524 தியேட்டர்களுக்கும் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, சட்டம்-ஒழுங்கை பேண முடியும். ஆனால், இது நடைமுறையில் சாத்தியமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏனெனில் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த போலீஸ் பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 718. அதில் காலிப் பணியிடங்கள் 21 ஆயிரத்து 911. எனவே, இப்போதுள்ள நிலவரப்படி போலீஸாரின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 807. இதில், பொருளாதார குற்றப் பிரிவு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இந்தப் பிரிவுகளில் பணியாற்றுவோரைக் கழித்து தமிழகத்தில் பணியாற்றும் மொத்த போலீஸாரின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 226. இந்த போலீஸாரைக் கொண்டே மாநிலத்திலுள்ள 7.28 கோடி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.

ஒரு தியேட்டரில் ஒரு ஷிப்ட்டில் 20 போலீஸாரை ஈடுபடுத்தும் வேளையில், மூன்று ஷிப்ட்களில் 60 பேரை ஈடுபடுத்த வேண்டி வரும். விஸ்வரூபம் வெளியாக இருந்த 524 தியேட்டர்களில் மூன்று ஷிப்ட்களிலும் 31 ஆயிரத்து 440 போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டிய சூழல் உருவாகும். மேலும், ரோந்துக் காவல் படையினரும், பதற்றமான கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கூடுதல் போலீஸாரையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதன்படி, 524 தியேட்டர்களிலும் மூன்று ஷிப்ட்களிலும் மொத்தம் 56 ஆயிரத்து 440 போலீஸாரை பாதுகாப்புப் பணிக்காக அனுப்ப வேண்டிய நிலை உருவாகும் .இரண்டு அல்லது மூன்றாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் 524 தியேட்டர்களுக்கு 56 ஆயிரத்து 440 போலீஸாரை பாதுகாப்புப் பணியில் எவ்வாறு ஈடுபடுத்த முடியும்.

முஸ்லிம் அமைப்பினரும், நடிகர் கமலும் அமர்ந்து பேசி சுமூக உடன்பாட்டுக்கு வர சம்மதித்தால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டவுடன், தமிழக அரசை நடிகர் கமலஹாசன் அணுகியிருந்தால் முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவர் உடனடியாக நீதிமன்றத்தை நாடினார். அரசுக்கு எதிராக மனுதாக்கல் செய்தார். தமிழகத்தில் மட்டும் விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் படம் வெளியிடப்பட்ட ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மைசூரில் தியேட்டருக்குத் தீ வைத்த போராட்டக்காரர்கள், கருவிகளைச் சேதப்படுத்தினர். புதுச்சேரியிலும் இந்தப் படம் தடை செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் எப்படித் திரையிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் ஜெயலலிதா.

Related

முக்கியமானவை 7915161794515285573

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item