முஸ்லிம் உலகம் ஒபாமாவின் ஆசை வார்த்தையில் மயங்கிவிடாது - SDPI
http://koothanallurmuslims.blogspot.com/2010/11/sdpi_08.html
SDPI National President Janab. E.Abubacker Sahib |
வெள்ளை மாளிகையின் தலைமை மாறியபொழுதும், அமெரிக்காவின் முஸ்லிம் உலகத்தோடான கொள்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
இந்தியாவிலும், உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களுக்கு ஒபாமாவிடம் எதிர்பார்ப்பு இருந்த பொழுதிலும் அது தகர்க்கப்பட்டதாக எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கரும், பொதுச்செயலாளர் எ.சயீதும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியிருப்பதாவது: புதிய அதிபரின் சொல்லும், செயலும் ஒத்துப்போகவில்லை. முந்தைய அதிபரின் பாதையை பின்தொடர்ந்து ஆப்கானிலும், ஈராக்கிலும் போரைத் தொடரும் ஒபாமாவின் மோகவலையில் முஸ்லிம் உலகம் சிக்காது.
முஸ்லிம்களுடனான அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறும் ஒபாமாவின் வார்த்தை வீணானதாகும். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களும், அந்நாட்டிற்கு செல்லும் முஸ்லிம்களும் இன பாகுபாட்டை அனுபவித்து வருகின்றனர்.
கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட உரையில், முஸ்லிம் உலகத்துடனான உறவில் புதிய அத்தியாயம் குறிக்கப்படும் என கூறிய ஒபாமா, அதனை இதுவரை செயலில் கொண்டுவரவில்லை.
அமெரிக்கா முஸ்லிம்களின் நண்பன் என்பது இதுவரை நிரூபிக்கப்படாதது மட்டுமல்ல, முஸ்லிம்கள் அமெரிக்காவின் கொள்கைகளில் மகிழ்ச்சி அடைபவர்களல்லர்.
ஃபலஸ்தீனில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் யூத குடியேற்ற நிர்மாணங்களை தடுக்க ஒபாமா நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பு இருந்த பொழுதும் ஒன்றும் நடக்கவில்லை.
ஒபாமாவின் இந்திய வருகையின் உண்மையான நோக்கம் இதுவரை தெளிவாக்கப்படவில்லை. அமெரிக்க நிறுவனங்களுக்கும், அதன் இந்திய வாடிக்கையாளர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைப்பெறப் போவதாக கருதுகிறோம். வியாபார நோக்கம் மட்டுமே ஒபாமாவின் வருகையின் நோக்கம் என கருதவேண்டியுள்ளது.
இந்தியா-அமெரிக்க அரசியல் உறவில் முதலாளித்துவ குணம் மேலும் வெட்டவெளிச்சமாகப் போகிறது. இந்தியாவின் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான வாய்ப்பை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அணுசக்தி இழப்பீடு மசோதாவில் சில மக்கள் விரோத பிரிவுகளைக்கூட சேர்ப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.
போபால் துயரச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் நிலைப்பாடுகள் குறித்து அமெரிக்கா இதுவரை பதிலளிக்கவில்லை. போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்கவும், 25 வருடங்களாக தொடரும் மனித உரிமை மீறலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் ஆம்னஸ்டி அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படவேண்டுமென ஆம்னஸ்டி கோரியிருந்தது.
ஒபாமா பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் தினத்தில் அவருடைய வருகைக்கு எதிராக சிறப்பு நிகழ்ச்சிகள் எஸ்.டி.பி.ஐ சார்பாக ஏற்பாடுச் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்