அடுத்த பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடியாம்!

தலையணையை மாற்றினால் தலைவலி போகுமா என்று சொல்லுவதுண்டு. பா.ஜ.க. மக்கள் மத்தியிலிருந்து தூக்கி எறியப்பட்டது. தொடர்ந்து இருமுறை மக்களவைத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டது. பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பை இழந்தனர்.

ஏதோ கட்சியின் தலைவர் சரியில்லை என்பதுபோல கற்பித்துக் கொண்டு தலைவர்களை மாற்றும் வேலையில் ஈடுபட்டு பா.ஜ.க. தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு திரிகிறது.
அத்வானியை பிரதமர் என்று தூக்கி நிறுத்திப் பார்த்தனர்.

பிள்ளை பிழைத்தபாடில்லை. பாகிஸ்தான் சென்றபோது ஜின்னாவை அரசியலைத் தாண்டி நான்கு வார்த்தை புகழ்ந்து சொன்னார் என்பதற்காக, அத்வானியை சங் பரிவார்க் கூட்டம் மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்து எறிந்துவிட்டது.

இன்னொரு தலைவர் ஜஸ்வந்த் சிங், அவரும் ஜின்னாவைப் புகழ்ந்தார். அத்வானியை உண்டு இல்லை என்று பிளந்து கட்டினார் - கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இப் பொழுது அவருக்கு மீண்டும் கட்சியில் ஞானஸ்நானம் கொடுத்துவிட்டனர் - ஏன் விலக்கினார்கள்? ஏன் மீண்டும் சேர்த்தார்கள்? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இவ்வளவுக்கும் மிகவும் கட்டுப்பாடான கட்சி என்று தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்பவர்கள் அவர்கள்.

கட்சிக்குப் புதிய தலைமை தேவை - அதுவும் இளைய தலைமுறையை சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று தேடி அலைந்து, சலித்து எடுத்து மும்பையில் இருந்து ஒரு தொழி லதிபரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். நிதின் கட்காரியான அவர் கடந்த ஓர் ஆண்டில் கட்சியைத் தூக்கி நிமிர்த்தவில்லை யாம். அடுத்து சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், கட்காரியை வைத்துக்கொண்டு காயை நகர்த்த முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறதாம்.

ஆர்.எஸ்.எஸ். வேறு - பா.ஜ.க. வேறு என்று சில சூழ்நிலை களில் அவர்கள் சொல்லுவதுண்டு. உண்மை வேறுவிதமானது தான் - பா.ஜ.க.வின் மூக்கணாங்கயிறு எப்பொழுதுமே ஆர்.எஸ்.எஸிடம்தான்.

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்தான் பா.ஜ.க.வின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று கட்சியின் விதியையே திருத்திக் கொண்டுவிட்டார்கள். நாடாளுமன்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸின் பிரதிநிதி ஒருவர் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதும் நடைமுறையாகிவிட்டது. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். வேறு, பா.ஜ.க. வேறு என்பது சட்ட ரீதியாகத் தப்பித்துக் கொள்ளச் சொல்லும் தந்திரம் ஆகும்.

ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவில் கரைந்த நிலையில்கூட, ஆர்.எஸ்.எஸில் அவர்கள் உறுப்பினராகத் தொடரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டபோது - இரட்டை உறுப்பினர் முறையிலிருந்து விடுபட முடியாது என்று கூறி, ஜனதாவிலிருந்து விலகி, மறுபடியும் ஜனசங்கத்துக்குப் பதில் பாரதீய ஜனதாவைத் தொடங்கினார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தில் மாநிலங்களே கூடாது என்றும், மதச்சார்பற்ற தன்மையைத் தூக்கி எறிந்து ஓர் இந்துத்துவா ஆட்சியை நிறுவவேண்டும் என்றும் கருதுகிற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இதன் பொருள் மீண்டும் மனுதர்மம் கோலோச்சவேண்டும் என்பதுதான்.

அதற்காகச் சிறுபான்மை மக்களை எதிரியாக முன் னிறுத்தி வருபவர்கள்; 450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப்பகலில் முக்கிய தலைவர்கள் முன்னிலையிலேயே இடித்துத் தரைமட்டமாக்கிய கூட்டம், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தண்டனையிலி ருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தண்டனை அளிக்கத் தவறியிருந்தாலும் மக்கள் மன்றம் இவர்களை வாக்குச் சீட்டுகள் மூலம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டது.

இந்த நிலையில், நரவேட்டை நரேந்திர மோடியை கட்சியின் தலைவராக்கி, குஜராத் மாடலில் இந்தியாவை பா.ஜ.க.வின் பிடியில் கொண்டுவந்துவிடலாமா என்ற நப்பாசையில் இருப்பதாகத் தெரிகிறது.

கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் அம்மையாரே வெளிப்படையாகக் கூறி விட்டார். நரேந்திர மோடியின் ஜம்பம் குஜராத்தில் மட்டும்தான் - வெளியில் செல்லுபடியாகாது என்று கூறிவிட்டார்.

கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அய்க்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி பிகார் பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது என்று தடை விதித்துவிட்டார்.

கோத்ராவை வைத்து சிறுபான்மை மக்களை ஆயிரக் கணக்கில் வேட்டையாடியது மூலம் இந்தியாவில் மட்டுமல்ல - உலகின் பலநாடுகளிலும் மோடியைப்பற்றித் துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டன. இதைவிட மானக்கேடு ஒன்றும் தேவையா?

இந்த நிலையில், எந்தத் தைரியத்தில் பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் நரேந்திர மோடி என்று நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மோடியின் வீர பிரதாபத்துக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.
2007 அக்டோபர் 19 ஆம் தேதி அன்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, சி.என்.என்., அய்.பி.என். (CNN -IBN) தொலைக்காட்சி நடத்துகிற சாத்தானின் வக்கீல் (Devil’s Advocate) நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மோடியைப் பேட்டி கண்டவர் புகழ் பெற்ற ஊடகவியலாளர் கரண்தப்பார் ஆவார். பேட்டியாளர் நினைக்கிற மாதிரி தன்னால் தற்போது பேச முடியாது என சொல்லி, நேர்காணல் நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறிவிட்டார். நான்கரை நிமிடமே அவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது; மிணாறு விழுங்கினார். இவர்தான் அடுத்த பிரதமராம் - பா.ஜ.க.வின் தலைவராம்.

நல்ல தமாஷ்! -------- விடுதலை தலையங்கம் (01.11.2010)

Related

RSS 5327424429598452836

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item