இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் முதல்வருடன் சந்திப்பு
http://koothanallurmuslims.blogspot.com/2012/11/blog-post_29.html
இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகளை ‘துப்பாக்கி’ படத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுத் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதச்சார்பற்ற கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின் நலன் காத்திடும் வகையிலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் தீபாவளித் திருநாளில், நடிகர் விஜய் நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘துப்பாக்கி’ என்னும் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இக்காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் கோரின.
இதனை அறிந்த முதலமைச்சர்,தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு அளித்த உத்திரவினையடுத்து, அரசு உள்துறை செயலாளர், திரைப்படத்தின் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகரன் ஆகியோரை 15.11.2012 அன்று அழைத்து, திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களின் மனம் புண்படும்படி உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை தவிர்க்கும்படியும், இது சம்பந்தமாக இஸ்லாமிய சமூக அமைப்புகளை சார்ந்தவர்களுடன் பேசும்படியும் அறிவுறுத்தினார்.
முதலமைச்சரின் உடனடி நடவடிக்கையினால் துப்பாக்கி படக்குழுவினர், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் விவாதித்து, திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று (28.11.2012) தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, முதலமைச்சர் எடுத்த விரைவு நடவடிக்கையினால், இஸ்லாமிய சமுதாயத்தை பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு ஜமாதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி அப்துற்றஹ்மான் தலைமையில் பாப்புலர் ப்ரண்ட், தமுமுக, ஜமாஅத்தே இஸ்லாமி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், SDPI , முஸ்லீம் லீக், WPI, தேசிய லீக், சுன்னத் வல் ஜமாஅத் உள்ளிட்ட 24 அமைப்புகளை உள்ளடக்கிய தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
KOOTHANALLURMUSLIMS.COM