ஹாஜிகளுக்கு IFF தன்னார்வத் தொண்டர்களின் அபார சேவை
http://koothanallurmuslims.blogspot.com/2012/11/iff.html
ஏற்கனவே மக்காவிலிருந்து மினாவிற்கு வந்து சேர்ந்த ஹாஜிகளுக்கு அவர்களின் கூடாரங்களுக்குச் சென்று சேர உதவி புரியும் வகையில் துல்ஹஜ் ஏழாம் நாள் அன்றே IFF தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் சேவைகளைத் தொடங்கினர். பின்பு துல்ஹஜ் எட்டாம் நாள் துவங்கி ஹாஜிகள் அரஃபாவிற்குச் சென்று சேர தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். இது ஒரு புறம் இருக்க, IFF தன்னார்வத் தொண்டர்கள் அனைத்து இரயில்வே நிலையங்களிலும் ஹாஜிகள் அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட இரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கும் உதவிகள் புரிந்தனர். குறிப்பாக வயோதிகர்களுக்கும், பலவீனமானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் அனைத்து விதமான உதவிகளையும் IFF தன்னார்வத் தொண்டர்கள் செய்தனர்.
மேலும் முஸ்தலிபாவிலிருந்து மினாவிற்குத் திரும்பும் சமயத்தில் பல ஹாஜிகளுக்கு சக்கர நாற்காலிகளின் மூலமும் தங்களின் உதவிகளை வழங்கினர். “இந்தச் சேவைகள் ஏனோதானோவென்று வழங்கப்படுவது இல்லை. போதுமான பயிற்சியுடனும், நன்கு தயார் செய்யப்பட்ட ஒருங்கிணைப்புடனும் கூடிய திட்டம் இருந்தால் மட்டுமே மேற்கூறப்பட்ட அனைத்து சேவைகளும் சாத்தியப்படும்” எனக் கூறினார் ஹஜ் சேவை ஒருங்கிணப்பாளர் இக்பால். இவரது சீரான ஒருங்கிணைப்பிலும், IFFன் தலைவர் அஷ்ரஃப் மோராயூர் அவர்களின் வழிகாட்டுதலிலும் இந்தச் சேவைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
மினாவில் பல வருடங்கள் ஹாஜிகளுக்குச் சேவை செய்த அனுபத்தின் அடிப்படையில் IFF முழுமையான வரைபடம் ஒன்றை மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் தயாரித்து, ஹாஜிகளுக்கு வழங்கியது. கூடாரத்தை எளிதில் கண்டுபிடிக்கவும், வழி தவறிய ஹாஜிகள் தங்கள் கூடாரங்களுக்கு மிக எளிதாகத் திரும்பி வரவும் எளிதான தோற்றம் கொண்ட இந்த வரைபடம் மிகவும் பயனுள்ளதாகவும், உதவிகரமாகவும் இருந்ததாக ஹாஜிகள் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
Popularfronttn.org