மகிழ்ச்சியில் காஸ்ஸா - அஞ்சி நடுங்கும் டெல் அவீவ்

ஃபலஸ்தீன் போராட்ட வரலாற்றில் முக்கிய தினமாக கடந்த வியாழன் (15/11/2012) அமைந்தது. ஃபலஸ்தீன் போராளிகளின் தீரமிக்க நாயகன் அஹ்மத் ஜஃபரி கடந்த புதன்கிழமை சியோனிச பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். அவரது இரத்தக்கறை உலரும் முன்னரே பதிலடிக்கொடுத்தது ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம். ஹிஜாரத்துஸ்ஸிஜ்ஜீல் என்ற பதிலடித் தாக்குதலில் ராக்கெட்டுகள் சரமாரியாக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவீவை தாக்கின.

டெல் அவீவின் இதய பகுதியை ஃபலஸ்தீன் போராளிகளின் ராக்கெட்டுகள் தாக்கும் என்பதை இஸ்ரேல் மக்களோ, அரசோ கனவில் கூட எண்ணவில்லை. நேற்று(16/11/2012) 300க்கும் மேற்பட்ட ராக்கெட்டுக்களை அல் கஸ்ஸாம் இஸ்ரேல் மீது ஏவுயுள்ளது. இதில் நான்குபேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஒரு உளவு விமானம் வீழ்த்தப்பட்டுள்ளது என்பது அங்கிருந்து வரும் செய்தியாகும்.

தாங்கள் பாதுகாப்பானவர்கள் என்பது அண்மைக்காலமாக இஸ்ரேல் மக்கள் கருதியிருந்தனர். அமெரிக்க-மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற எங்களை ஏழ்மையில் வாடும் ஃபலஸ்தீனர்களின் எதிர்ப்புப் போராட்டம் என்ன  செய்துவிடும்? என்று மனப்பால் குடித்தனர். ஆக்கிரமிப்பு அரசான இஸ்ரேல் உருவாகி 64 ஆண்டுகள் நிறைவுறுகின்றன.

அதனிடையில் கடந்த 40 ஆண்டுகளாக டெல் அவீவை ஒரு ராக்கெட் கூட தொட்டதில்லை. ஆனால், தற்போது வரலாறு திசை திரும்பியுள்ளது. அல் கஸ்ஸாமின் ராக்கெட்டுகள் டெல் அவீவின் நெஞ்சை பிளந்துள்ளது. கடந்த சில பத்தாண்டுகளுக்கு பிறகு டெல் அவீவில் முதன் முதலாக அபாயமணி முழங்கியுள்ளது. ஃபலஸ்தீன் எதிர்ப்புப் போராட்ட போராளிகளின் ராக்கெட்டுகள் தங்களின் இதய பகுதியில் தாக்கியதால் ஏற்பட்ட மரண ஓலத்தின் அதிகாரப்பூர்வ குரலாக அபாயமணி ஒலித்தது.

தாக்குதல் நடக்கும் வேளையில் சியோனிச ராணுவத்தின் தலைமையகத்தின் உள்ளே பதுங்கி இருந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. தனது இரண்டு உதவியாளர்களுடன் பாதுகாப்பு மையத்தை நோக்கி உயிரைக் காப்பாற்ற ஓடினார் பிரதமர் என்று சியோனிச இணையதள பத்திரிகையான Yedioth Ahronot கூறுகிறது.

இஸ்ரேல்-ஃபலஸ்தீன் போராட்ட வரலாற்றில் முதன் முறையாக டெல் அவீவில் ராக்கெட்டுகள் தாக்கியதை கண்டு சியோனிச சமூகம் அஞ்சி நடுங்கியதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. டெல் அவீவில் அபாய மணி ஒலித்ததும், ஓலமிட்டவாறும், அழுதுகொண்டும் மக்கள் அங்குமிங்கும் ஓடியதாக குத்ஸ் ப்ரஸ் கூறுகிறது.

டெல் அவீவில் ஆசிரியரான உஸாமா பர்ஹம் இவ்வாறு கூறுகிறார்: நான் வழக்கமாக காணும் தைரியத்தையும், கோபத்தையும் இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் முகத்தில் காணமுடியவில்லை. மாறாக அழுகையும், துக்கத்தையும் தான் பார்க்க முடிந்தது.

அதுமட்டுமல்ல, காஸ்ஸாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளில் இருந்து தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி டெல் அவீவில் இஸ்ரேலிய குடிமகன்கள் போராட்டத்தை நடத்தினர். அபாயத்தைக் குறிக்கும் சிவப்பு உடையை அணிந்துகொண்டு அவர்கள் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பேர் கலந்துகொண்டனர்.

சொந்த குடிமக்களின் பாதுகாப்பிற்கு கூட உத்தரவாதம் இல்லாத இஸ்ரேல் அரசின் கபடவேடத்தை அம்பலப்படுத்தும் விதமாக டெல் அவீவில் ராக்கெட்டுகள் தாக்கிய சம்பவம் வெளிப்படுத்துவதாக எகிப்தின் முன்னாள் ராணுவ அதிகாரியும், தற்போதைய ராணுவ நிபுணருமான ஸஃப்வத் ஸய்யாத் கூறுகிறார். இஸ்ரேல் ராணுவத்தால் காஸ்ஸாவின் மீது ஆக்கிரமிப்பை நடத்தவியலாது என்று ஸஃப்வத் ஸய்யாத் கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தலைமையை ’மீண்டும் தோல்வியை தழுவிய முட்டாள்கள்’ அவர் வர்ணித்துள்ளார்.

அதேவேளையில், காஸ்ஸாவின் நிலை மாறுபட்டதாகும். இரத்த சாட்சிகள் அவர்களுக்கு புதிதல்ல. அல் கஸ்ஸாமின் புதிய தாக்குதல் காஸ்ஸா மக்களுக்கு புத்துணர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது. தங்கள் மீது வட்டமிடும் இஸ்ரேலின் போர் விமானங்களுக்கு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லை. தற்போதைய தாக்குதலில் பதினேழுபேர் ஷஹீதான பிறகும் காஸ்ஸா மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

வரலாற்றில் முதன் முறையாக சியோனிஸ்டுகளின் தலைநகரை கஸ்ஸாமின் ராக்கெட்டுகள் தாக்கியது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் நவீன உலோக பாதுகாப்பு கவசத்தை உடைத்து அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது கஸ்ஸாமின் ராக்கெட்டுகள். உலக ஆயுத சந்தையின் உரிமையைக் கொண்டாட தக்க காரணமாக உலோக கவசத்தைக் குறித்து இஸ்ரேல் தம்பட்டம் அடித்தது. அல் கஸ்ஸாமின் ஃபஜ்ர் ராக்கெட்டுகளின் முன்னால் இஸ்ரேலின் எல்லாவித பெருமைகளும் தகர்ந்துவிட்டன.

எதிர்ப்பு போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதை காஸ்ஸா மக்கள் தெரிவிக்கின்றனர். வேதனையில் மூழ்கியிருக்கும் காஸ்ஸா மக்களுக்கு உள்ளத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தும் நிகழ்வே டெல் அவீவில் ராக்கெட்டுகள் தாக்குதல்கள்.

இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வரும் அஹ்மத் கூறிய வார்த்தைகள் காஸ்ஸா மக்களின் நிலைகுலையாமைக்கு உதாரணமாகும். அஹ்மத் கூறுகிறார்: ”எங்களுக்கு வேதனை இருக்கலாம். ஆனால், நாங்கள் உறுதியாக நிற்போம். ஃபலஸ்தீன் விடுதலைக்காக எங்கள் இதயத்தை பறித்து வழங்குவோம். நாங்கள் அழுவதற்கு எதுவுமில்லை.”

ஆம், ஃபலஸ்தீன் மக்கள் எதிர்த்துப்போராட்டத்தை தொடரத்தான் செய்வார்கள். பழைய கால அரபு ஆட்சியாளர்களிடமிருந்து மாறுபட்டு துணிச்சல் மிக்க அரசுகள் தற்பொழுது அவர்களுக்கு உதவ தயாராக இருக்கின்றார்கள். இது ஓர் நற்செய்தியாகும். எகிப்து ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவே உள்ளது. ஆட்சியில் அமர்ந்த உடனேயே எகிப்திய அரசு அவசரமாக இரண்டு செய்திகளை அனுப்பியது.

முதல் செய்தி ஃபலஸ்தீன் மக்களுக்கு. தடையால் வாடும் மக்களுக்கு எகிப்து அனைத்து வித உதவிகளையும் வழங்கும் என்பதே அச்செய்தி. 2-வது செய்தி இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. அதில், ஃபலஸ்தீனை தாக்கும்பொழுது எகிப்து கையை கட்டி வாயைப் பொத்திக்கொண்டு பார்வையாளராக இருக்காது என்ற எச்சரிக்கையாகும். காஸ்ஸாவிற்கு நிவாரணப்பொருட்களை அளிப்பதற்காக, அவர்களுடன் இருக்கிறோம் என்ற ஒற்றுமை உணர்வை அறிவிப்பதற்காக தங்கள் நாட்டு பிரதமரின் தலைமையில் ஒரு குழுவை காஸ்ஸாவிற்கு அனுப்பியுள்ளது எகிப்து.

அ.செய்யது அலீ.

Related

முக்கியமானவை 1420466620388501892

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item