நீண்ட காலமாக சிறைவாடும் கோவை சிறைவாசிக்கு திருமணம்
http://koothanallurmuslims.blogspot.com/2011/06/blog-post_08.html
கோவை குனியமுத்தூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் காஜா உசேன். இவருடைய மகன் அமானுல்லாஹ் (வயது 29). கடந்த 1996ம் ஆண்டு நாகூரில் நடைபெற்ற அலிம்ஜார்ஜ் என்பவருடைய மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அமானுல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 13 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அமானுல்லா, திருமணம் செய்ய முடிவு செய்தார்.கோவை பி.கே.புதூரை சேர்ந்த முகமது ரபி என்பவருடைய மகள் ரிசானா பானுவுக்கும், அமானுல்லாவுக்கும் திருமணம் செய்ய முடிவுசெய்யப்பட்டது.
ரிஸானாபானு பி.ஏ. பட்டதாரி பெண், ஆயுள் தண்டனை கைதியான அமானுல்லாவை திருமணம் செய்ய முழுமனதுடன் சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவரின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. திருமணம் நடைபெற இருப்பதையொட்டி பரோலில் விடுவிக்க அனுமதிக்குமாறு அமானுல்லாஹ், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
அவருக்கு வருகிற 21ந் தேதி வரை பரோல் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பகல் 12 ;30 மணி அளவில் கரும்புக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் அமானுல்லாவுக்கும், ரிஸானா பானுவுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது 2 1/2 பவுன் தங்கநகையை மணப்பெண்ணுக்கு திருமண கொடையாக அமானுல்லாஹ் வழங்கி, திருமண ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
திருமணம் முடிந்த பின்பு அமானுல்லாஹ் கூறும்போது, இருவரின் முழு சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறுகிறது. 13 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த எனக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறுபான்மை கைதிகளை விடுவிப்பதில் முன்பு பாரபட்சம் காண்பிக்கப்பட்டது. புதிய அரசு இந்த விஷயத்தில் கருணை காண்பிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். பரோல் விடுதலை காலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் வருகிற 21ந்தேதி அமானுல்லாஹ் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார். ஆயுள் தண்டனை கைதியின் திருமணத்தையொட்டி கரும்புக்கடை பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
நன்றி : தினந்தந்தி.
INTJ ONLINE