மாவீரன் மருத நாயகம் வரலாறு 01

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது. 1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.

அப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.

படத்திற்குப் பெயர் மருதநாகயம்! படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது. யார் அந்த மருத நாயகம்? அவரது போராட்ட வரலாறு என்ன? இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது. காரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.

கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை!

இனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம்!

ஊரும், பெயரும்

மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.

இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார். இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார். 1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.

வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும்

சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.

மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.

தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!

பிரெஞ்சுப் படையின் ஆயுதம்

பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.

இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.

ஆற்காடு நவாப்

ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னர் பலமிழந்த முகலாய பேரரசு, தென்னிந்தியாவில் சிதறியதால், கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள் தோன்றின.

அப்போது ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டி எழுந்தது. ஒரே ரத்த உறவுகளை சேர்ந்த சாந்தா சாஹிபும், முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர்.

சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அது வசதியாய் போயிற்று. சாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர்.

இதன் நோக்கம், ஆதிக்க போட்டியும், போரின் வெற்றிக்கு பிந்தைய வணிக நோக்கமும்தான். இன்று அன்னிய நிறுவனங்களான கோகோ கோலாவும், பெப்ஸியும் ஆளுக்கொரு அரசியல் கட்சிக்கும் அல்லது பெரிய கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்து, தங்கள் வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் அல்லவா- அதுபோல்தான் அன்றும் இருந்தது.

ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் சொந்தங்களான சாந்தா சாஹிபுக்கும், முஹம்மது அலிக்கும் மோதல் ஏற்பட்டது. திருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.

திறமை, குணம், தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபே தகுதியானவர் ஆயினும் பதவி வெறி பிடித்த முகம்மது அலியால் தேவையற்ற பல போர்கள் நடந்தன. மருதநாயகம் பங்கேற்ற பிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்ற சாந்தா சாஹிப் இறுதியில் ஆற்காட்டில் 1751ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார். மருதநாயகம் வீர தீரத்தோடு போரிட்டாலும், மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்ட ஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லை. பிறகு துரோகங்களால் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிபின் உடல், திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே அடக்கப்பட்டது.

நிஜாம் – நவாப்?

இன்று கவர்னர் பதவிகளை மத்திய அரசு நியமிப்பது போல் அன்றைய முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். ஆனால், இன்றைய கவர்னர்களைப் போல ஜாலியாக ஓய்வெடுக்க முடியாது. போர்க்களம் செல்ல வேண்டும், தினமும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும். இவருக்கு மேல் நிஜாம் என்பவர் இருப்பார். நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.

யார் ஆற்காடு நவாப்?

ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும், பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.

ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப்

ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது. கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.

வீரமும் – பரிசும்

மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!

அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.

நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால், புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.

1752ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது. ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.

இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.

பொறாமை

இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர். அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்ததால்தான், அன்று பெற்ற அதே சலுகைகளில் சில இன்றும் தொடர்கிறது. துரோகமும் கூட! இன்று இந்தியாவின் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும், ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும் ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான்! இருவரின் பெயரும் ஒன்று என்பதும் ஒரு ஒற்றுமைதான்.

சரி. மீண்டும் மருதநாயகம் காலத்துக்குப் போவோம்! கான்சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர். திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்!

இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-? இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை, சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!


தொடரும்… இன்ஷா அல்லாஹ்

எம். தமிமுன் அன்சாரி
சமுதாய ஒற்றுமை

Related

TAMIL MUSLIM 5512873391172997843

Post a Comment

  1. மருத நாயகம் கான் சாஹிப் வரலாறு , நல்ல பதிவு

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item