பழமைவாத அமைப்புகளும்… பலஹீனமான அரசியலும்…

தமிழ்நாடு,அஸ்ஸாம்,மேற்கு வங்காளம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்து அஸ்ஸாம் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பதிய அரசுகள் பதவியேற்றுள்ளன…

இவற்றுள் கடந்த ஐந்து மாநில பேரவைகளிலும் மொத்தமாக 105 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியில் இருந்துள்ளனர். தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தல்களில் ஐந்து மாநிலங்களிலும் மொத்தமாக 130 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வென்றுள்ளனர்… ஆக 25 முஸ்லிம்கள் அதிகமாக வென்று சட்டமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர்.

இவற்றுள் குறிபிட்டதக்கது மேற்குவங்கம் 34 ஆண்டுகால கம்யூனிச அரசை மக்கள் தூக்கி எறிந்துவிட்டு செல்வி.மம்தாபானர்ஜி  அவர்களின் தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சியை பெரும் வெற்றிபெற செய்துள்ளனர்.  294 தொகுதிகளைகொண்ட மேற்குவங்கத்தில் முஸ்லிம்கள் 59 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக வென்றுள்ளனர்… அஸ்ஸாம் மாநில தேர்தலில் முஸ்லிம்கள் 33 பேர் வென்று பேரவைக்கு சென்றுள்ளனர்… இதில் கடந்த முறை 9 இடங்களை வென்றிருந்த அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி இம்முறை 18 தொகுதிகளை வென்று பிரதான எதிர்கட்சியாக வளர்ந்துள்ளது… 140 தொகுதிகளைகொண்ட கேரளாவில் 36 தொகுதிகளை முஸ்லிம் வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.. கேரளாவை தவிர்த்து அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிகமான அளவில் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் பெரிய அளவில் பொருளாதார பின்பலமோ சமுதாய அமைப்புகளின் பலமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது…

ஆனால் பெரும் வீரியமிக்க அமைப்புகள் எல்லாம் வீதியெங்கும் கிளைகள் பரப்பிவிட்ட தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் பல்வேறு கட்சிகளின் சார்பாக 17 தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் வென்றிருப்பது வெறும் 6 இடங்கள்தான் என்பது வெட்ககேடான விஷயம் அல்லவா…? எவ்விதமான பின்புலமும் இல்லாத மேற்குவங்க மற்றும் அஸ்ஸாம் முஸ்லிம்களால் வெல்லமுடிந்த அரசியல் அங்கீகாரத்தை ஏன் தமிழக முஸ்லிம்களால் வெல்லமுடியவில்லை…?!!!

காரணம் இருக்கிறது… என்னவெனில் அங்கெல்லாம் தமிழகத்தில் உள்ளதுபோல வீதிக்கொரு சமுதாய அமைப்புகள் இருந்து மக்களை பிளவுபடுத்தவில்லை… இளைஞர்களிடையே அமைப்புவெறியினை விதைத்து சந்திசிரிக்கும் சமுதாய சண்டைகள் இல்லை… அண்டை மாநிலமான கேரளாவில் முஸ்லிம்லீக் மாநில முதல்வரையே நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது… ஆனால் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு கட்சிக்கு கூஜாதூக்குவதையே புத்தியாக கொண்டுள்ளது… ஏன் இந்த இழிநிலை…???

கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களின் காலத்திற்கு பிறகு தமிழக முஸ்லிம்களின் அரசியல் என்பது கேலிக்குரியதாகவும்… கேள்விக்குறியதாகவும் மாறிப்போனதை மறுக்க இயலாது… 90 களின் துவக்கத்தில் தமிழக முஸ்லிம்களின் அரசியல் அங்கீகாரத்தை வென்றெடுக்க தனது வீரியமான உரைவீச்சுக்களால் இளைஞர்களை அணிதிரட்டினார் ஷஹீத் பழனிபாபா ஒரு காலகட்டத்தில் திமுகவுடனும் பின்னொரு காலகட்டத்தில் அதிமுகவுடனும் நெருக்கமான உறவு வைத்திருந்த பழனிபாபா அவர்களின் சமுதாய அரசியல் இரு பெரும் கட்சிகளுக்குமே தலைவலியை தந்ததால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு அவர் ஆளாகினார் பழனிபாபா அவர்களுடன் தொடர்பில் இருந்தாலே தாங்களும் கைது செய்யபடுவோம் என்கிற அச்சம் சமுதாய மக்களுக்கு ஏற்பட்டதால் அவரால் நிலையான அரசியல் கட்டமைப்பை நிறுவமுடியாமல் போனது…

ஷஹீத் பழனிபாபா அவர்களின் மறைவிற்குப் பிறகு தனது வீரியமான போராட்டங்களால் தமுமுக சமுதாய மக்களின் கவனத்தை ஈர்த்தது… தமுமுகவின் எழுச்சிக்குப் பிறகு தமிழகத்தில் பெருவாரியாக இஸ்லாமிய அமைப்புகள் முளைக்க ஆரம்பித்தது… அதுவரை சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்து திரையரங்குகளில் தங்களின் வாழ்கையை தேய்த்துகொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் சமுதாய அமைப்புகளில்  இணைந்து
பணியாற்ற துவங்கினார்கள்…

எழுச்சியான இலக்கை நோக்கி பயணிக்க துவங்கிய தமிழக முஸ்லிம் சமுதாயம் அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனத்தை  ஈர்த்த முஸ்லிம்கள் தங்கள் உரிமைக்கான குரலை உயர்த்திய வேளையில் தமுமுகவில் இருந்து சகோ.பீ.ஜைனுல் ஆபிதீன் விலகி தனியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற இயக்கத்தை ஆரம்பித்ததும் ஓரணியில் நின்ற இளைஞர்கள் பிளவுபட்டனர்… வீரியமாக அவர்கள் முன்னெடுத்து சென்ற சமுதாய பணிகள் சகோதர யுத்தங்களால் தேக்கம் கண்டது…

மறுமையிணையும் மார்கத்தையும் குர்ஆன்  ஹதீஸையும் போதித்த இயக்க தலைமைகள் இம்மைக்கு தேவையான அரசியலை கற்றுகொடுக்க தவறியது… இவர்கள் மார்கத்தையும் அரசியலையும் ஒன்றாக போட்டு குழப்பி வருவதால் நமது இளைஞர்களுக்கு தெளிவான அரசியல் பாதை தெரியாமலேயே இருந்து வருகிறது… இவர்கள் இங்கு ஆம்புலன்ஸ் அற்பனிப்புகளையும் ரத்ததான முகாம்களையும் நடத்திவந்த வேளையில் அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும் முஸ்லிம்கள் அரசியலை கையாள துவங்கிவிட்டார்கள்…இன்று அதிகாரத்தில் அமர்ந்துவிட்டார்கள்…

புற்றீசல்போல் பெருகிவிட்ட சமுதாய அமைப்புகள் நேரடி அரசியலை தவிர்க்கும் அதேவேளையில் மற்றவர்களின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட தயங்குவதில்லை… தனிமனித துதிபாடல் தனிமனித விமர்சனங்கள் இவைகள்தான் இன்றைய அமைப்புகளின் தலையாய கடமையாக பார்க்கப்படுகிறது… தலைமைகள் எட்டடி பாய்ந்தால் தொண்டர்கள் பதினாறடி பாய்கிறார்கள்… மற்றவரின் குறைகளை பறைசாற்ற… ஒவ்வொரு ஊர்களிலும் சமுதாய அமைப்புகளுக்கு அலுவலகம் இருக்கிறதோ இல்லையோ தனித்தனியாக கண்டிப்பாக இருக்கவேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது… இவற்றால் ஏதாவது சமுதாய நன்மை ஏற்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை மாறாக பகைமைதான் ஏற்பட்டிருக்கிறது… என்பதற்கு பல சான்றுகளை சொல்லலாம்…

ஊரெங்கும் பள்ளிவாசல்கள் கட்ட விரும்பும் அமைப்புகள் எங்காவது ஒரு கல்வி நிறுவனத்தை ஏற்படுத்தி இருக்கிறார்களா என்றால் இல்லை… எந்த ஒரு சமூகத்தில் கல்வியாளர்கள் பெருகுகிறார்களோ அந்த சமூக மக்கள்தான் தன்னிறைவு பெற்ற மக்களாக உருவாக முடியும்…அதற்க்கான மிகப்பெரிய சான்று வன்னிய சமூக மக்கள் முஸ்லிம்களைவிட பலவகைகளில் பின்தங்கி இருந்த வன்னிய சமூக மக்கள் இன்றைக்கு பல்வேறு அரசுத்துறைகளில் கோலோய்ச்ச முடிகிறது என்றால் அவர்களில் கல்வியாளர்கள் பெருகியதுதான் காரணம்…இதனை ஏன் நமது சமுதாய அமைப்புகள் செய்ய தவறியது…?
 

தமிழக சமுதாய அமைப்புகளில் தமுமுக மற்றும் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகள் தற்போது மமக எஸ்டிபிஐ போன்ற அரசியல் கட்சிகளை களமிறக்கி உள்ளது வரவேற்க்கதக்கது… இதில் மமக கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டில் வென்றிருப்பது தாமதமான நல்ல துவக்கம்… பன்முக தன்மைகொண்ட சமூக மக்கள் வாழக்கூடிய நாட்டில் வெகுஜன மக்கள் விரும்பும் வகையில் அரசியலை இட்டுசென்றால்தான் வெற்றிகொள்ள முடியும் அதற்க்கான நல்ல உதாரணம் அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி…

சமுதாய அமைப்புகளில் அங்கம்வகிக்கும் சமுதாய சொந்தங்கள் சுயசிந்தனையுடன் ஒரு நிமிடம் சிந்தித்து பார்க்க வேண்டும்… உங்களின் பொருளாதாரம்… உழைப்பு… தியாகம் இவைகள் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வழியில் பயன்பட்டுள்ளதா…? பழைமைவாதம் பேசக்கூடிய சமுதாய அமைப்புகளால் நமது அரசியல் எதிர்காலம் பலஹீனபட்டே உள்ளது… இன்றைக்கு நம்மில் சிந்தனைவளமிக்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உண்டு… இந்த சமுதாய அமைப்புகளால் எவ்விதமான நன்மையையும் சமுதாயம் அடையவில்லை என்கிறஉண்மையை உணர்ந்தும் ஊமையாக இருத்தல் நமக்கு நாமே செய்துகொள்ளும் துரோகம்… மௌன வலையை அறுத்து வெளியில் வரவேண்டும்… சரியான திட்டமிடளோடு பிற சமூக மக்களுடன் அரசியலை முன்னெடுத்தால் அஸ்ஸாமும் மேற்குவங்கமும் ஏன் கேரளாவும்கூட நமது வெற்றியை உதாரனமாக்கிகொள்வார்கள்…

இனியாவது உண்மையை மறைக்க முயலும் சமுதாய அமைப்புகள் சமுதாய நலனை முன்னெடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்… இல்லையெனில் எந்தஇளைஞன் உதிரத்தை உழைப்பாக்கி  தருகிறானோ…  எந்த இளைஞன் நீங்கள் சொல்வதற்கெல்லாம் சுயசிந்தனை இல்லாமல் தலையசைக்கிறானோ… அவன் கேள்விகேட்க ஆரம்பிப்பான்… அப்போது உங்களிடம் பதில்கள் இருக்காது… 

வேங்கை சு.செ.இப்ராஹீம்

Related

TNTJ 8397030346850393604

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item