அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு: ஈரானின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி!
http://koothanallurmuslims.blogspot.com/2012/09/blog-post_8559.html
டெஹ்ரானில் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த அணிசேரா நாடுகளின் 6 நாள் உச்சிமாநாடு ஒரே நேரத்தில் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு கிடைத்த பலத்த அடியாகவும், ஈரானின் ராஜ தந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.
அணு ஆயுதத்தின் பெயரால் இஸ்ரேல் ஈரானை தாக்கப் போவதாக ஊகங்கள் கிளம்பிய வேளையில் ஈரான் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு களம் அமைத்தது. மேற்கத்திய நாடுகள் ஈரானின் மீதுதடைகளை தீவிரப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ள வேளையில்தான் உச்சிமாநாடு நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு ஐ.நா பொது அவை பொதுச்செயலாளர் பான் கீ மூனை அணிசேரா நாடுகளின் இயக்கத்தின் உச்சிமாநாட்டில்கலந்துகொள்ளச் செய்தது ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதின் வெற்றியாகும். உச்சிமாநாட்டில் பங்கேற்க கூடாது என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் பான் கீ மூனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தன. பான் கீ மூனின் இதயத்தில் ஈரானுக்கு சிறிதளவேனும் இடம் அளித்ததில் வெட்கப்படுவதாகஅமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
பான் கீ மூனை அடுத்து உச்சிமாநாட்டில் அனைவரையும் ஈர்த்தது இந்தியாவின் பங்களிப்பாகும். இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அணிசேரா நாடுகளின் இயக்க உச்சிமாநாட்டில் கலந்துகொண்டது முக்கியத்துவம் பெற்றது. ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ உடன் சந்திப்பையும் நடத்தினார் மன்மோகன். ஒருவேளை, ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ ஐ முதன் முதலாக சந்திக்கும் முஸ்லிம் அல்லாத நாட்டின் தலைவராகவும் மன்மோகன் இருக்க வாய்ப்புள்ளது. உச்சிமாநாட்டின் போது அஹ்மத் நஜாத் இந்திய பிரதமருக்கு தனியாக விருந்தும் அளித்தார். உச்சிமாநாட்டிற்கு வருகைத் தந்த 120 நாடுகளின் தலைவர்களில்அஹ்மத் நஜாதால் அதிகம் கவனிக்கப்பட்டவர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆவார். ஈரானுடான வர்த்தக-தூதரக உறவை வலுப்படுத்த இந்தியா தீர்மானித்தது ஈரானுக்கு ஆதாயமாக மாறியுள்ளது.
உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதுடன், ஈரானுக்கு புகழாரம் சூட்டிய பான்கீ மூனின் நடவடிக்கை இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் பலத்த அடியாக மாறியது. சர்வதே அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நடுநிலையான முயற்சிகளை மேற்கொள்ள ஈரானால் இயலும் என்று ஐ.நா பொது அவை பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது உரையில் குறிப்பிட்டார். அதேவேளையில் அணுசக்தி உள்ளிட்ட விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் கவலைகளை அகற்றவும், சர்வதேச அணுசக்தி ஏஜன்சியுடன் ஈரான் ஒத்துழைக்கவும் வேண்டும் என்று பான் கீமூன் கோரிக்கை விடுத்தார். தமது நாட்டில் அணு ஆயுதங்கள் இல்லை என்றும், மேற்காசியா முழுவதையும் அணு ஆயுதம் இல்லாத பிராந்தியமாக மாற்றவேண்டும் என்பதே தங்களது நோக்கம் எனவும் ஈரான் பதிலளித்தது.
இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதை இதன் மூலம் உணர்த்த ஈரானால் முடிந்தது. ஈரான் அணு ஆயுத நாடாக மாறிவிடும் என்பதல்ல, மாறாக ஈரானின் தற்போதைய அரசிடம்தான் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு என்று டெஹ்ரான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் ராபர்ட் நைமன் தெரிவித்தார். முன்னர் அணுசக்தி திட்டத்திற்காக ஷாவின் அரசுக்கு அமெரிக்கா எல்லாவித ஒத்துழைப்பையும் அளித்தது. அதுமட்டுமல்ல, இஸ்ரேல் அணு ஆயுதங்களை சொந்தமாக்கியது அமெரிக்காவுக்கு பிரச்சனை இல்லை. காரணம், இஸ்ரேல் அமெரிக்காவிற்கு நேசத்திற்குரிய நாடு என்று நைமன் கூறினார்.
120 உறுப்புநாடுகள், 21 கண்காணிப்பு நாடுகள் அடங்கியதுதான் அணிசேரா நாடுகளின் இயக்கமான NAM. ஐக்கிய நாடுகள் சபையை அடுத்து அதிகமான நாடுகளை உறுப்பினராக கொண்ட அமைப்பு. ஐ.நா அவை உறுப்பினர்களில் 3-இல் 2 பகுதி நாடுகள் NAM இல் உறுப்பினராக உள்ளன. இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவுடன் சேராத இயக்கமாக அணிசேரா நாடுகளின் அமைப்பு உருவானது. இதுவரை அமெரிக்காவின் கட்டளைகளை நிறைவேற்றும் உயிர் துடிப்பில்லாத அமைப்பாகவே NAM கருதப்பட்டது. ஆனால், டெஹ்ரானில் நடந்த உச்சிமாநாட்டில் அணிசேரா நாடுகளின் இயக்கத்தை உயிரூட்டும் வகையில் மாநாட்டின் ஒவ்வொரு காலடித் தடங்களும் அமைந்திருந்தன.
எகிப்தில் அண்மையில் நிகழ்ந்த மக்கள் எழுச்சியின் வாயிலாக சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகினார். இதனையடுத்து அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஃவானுல் முஸ்லிமீனின் டாக்டர்.முஹம்மது முர்ஸி உச்சிமாநாட்டில் கலந்துகொண்டது நஜாதின் சாதனையே.
1979-ஆம் ஆண்டு ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு கலந்துகொள்ளும் முதல் எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸிஆவார். முஸ்லிம்களில் இரு மாறுபட்ட கொள்கையை கொண்டவர்களாக இருநாட்டு தலைவர்களும் திகழ்ந்தாலும் புதிய உலக ஒழுங்கு முறைக்கு அஹ்மத் நஜாத் தனது உரையில்அழைப்பு விடுத்தபொழுது அதனை கைத்தட்டி வரவேற்றார் முஹம்மது முர்ஸி. முன்பு இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஷாவுக்கு எகிப்து புகலிடம் அளித்தது. மேலும் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இதனால் எகிப்துடன் உறவை ஈரான் துண்டித்தது. முஸ்லிம் உலகில் ஈரானுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
உச்சிமாநாட்டின் தீர்மானங்களிலும் ஈரானின் ‘டச்’ காணப்பட்டது. சிரியாவில் வெளிநாட்டு தலையீடு மற்றும் ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா ஏற்படுத்திய தடைகளை கண்டித்த தீர்மானம், ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் பிரகடனப்படுத்தியது.
உச்சிமாநாட்டை மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் புறக்கணித்தன. அதேவேளையில் மாநாட்டில் உரையாற்றிய முர்ஸி, தனது உரையில் சிரியாவை கண்டித்தவுடன் அந்நாட்டின் பிரதிநிதி அவையில் இருந்து வெளியேறிய செய்திக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.