அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற தமுமுக
http://koothanallurmuslims.blogspot.com/2012/09/blog-post_3760.html
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தைக்
கண்டித்து சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற முஸ்லிம்கள்
கைது
உலகில் வாழும் 200 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக ஒவ்வொரு
நொடியும் கருதிக் கொண்டிருக்கும் அகிலத்தின் வழிகாட்டி, இறைத்தூதர் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக "இன்னொசன்ட் முஸ்லிம்ஸ்' என்ற
திரைப்படத்தை சாம் பாசைல் என்ற யூத மதவெறியன் வெளியிட்டிருக்கிறார். இதன்
பிரத்யேக காட்சிகள் "யூ டியூப்' இணையதளத்தில் வெளியாகி உலகமெங்கும்
கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்; அமெரிக்காவும் அதன்
ஆதரவு சக்திகளும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்; இந்திய அரசு
அமெரிக்கத் தூதரை அழைத்து தமது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்; "யூ
டியூப்' இணையதளத்திலிருந்து அத்திரைப்படக் காட்சிகளை நீக்கவேண்டும் - ஆகிய
கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்
சார்பில், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிடும்
போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திரைப்படம் குறித்து சென்னை உட்பட பல நகரங்களில் ஜும்ஆ உரையின் போது
உலமாக்கள் உரை நிகழ்த்தினர். தொழுகைக்குப் பின்னர் முஸ்லிம்களிடையே
தமுமுகவினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு பிரச்சாரம்
செய்தனர். இதனையடுத்து அமெரிக்க தூதரகம் அருகிலுள்ள ஆயிரம் விளக்கு
பள்ளிவாசல் அருகில் முஸ்லிம்கள் மாலை 4 மணியிலிருந்தே சாரை சாரையாக
வந்தவண்ணம் இருந்தனர்.
மாலை 4.15 மணியளவில் தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். மமக பொதுச் செயலாளர்
எம். தமிமுன் அன்சாரி முழக்கங்களை எழுப்பினார். மூத்த தலைவர் செ. ஹைதர்
அலி, தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள்
பி.எஸ்.ஹமீது, கோவை செய்யது, காஞ்சி மீரான் மொய்தீன், தென்சென்னை மாவட்டத்
தலைவர் சீனிநெய்னா முஹம்மது, வடசென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி, காஞ்சி
வடக்கு மாவட்டத் தலைவர் யாகூப், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள்
உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதனிடையே, ஒரு பெரும் கூட்டம் அண்ணா சாலையில் இறங்கி மறியலில்
ஈடுபட்டது. அதற்குள் தொண்டரணியினர் களத்தில் இறங்கி தூதரகத்தை நோக்கிச்
சென்ற மக்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர்.
பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடியதால் காவல்துறையினரால் கைது நடவடிக்கையை
தொடர முடியாமல் போனது. முதல் இரண்டு மண்டபங்களும் நிரம்பி வழிந்தன.
தொடர்ந்து கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைஅலையாய் அமெரிக்க தூதரகத்தை நோக்கி
புறப்பட்ட வண்ணம் இருந்தனர். இதனிடையே முறைப்படுத்தப்பட்ட பேரணி
இராயப்பேட்டையை நோக்கி திரும்பியது. தூதரகம் அருகே குவிந்த மக்கள்
ஊர்வலத்தை நோக்கி திரும்பினர். அனைவரும் காவல்துறையினரால்
பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே மணி 6ஐ நெருங்கியதும் அருகிலுள்ள புதுக்கல்லூரி வளாகத்துக்கு
அனைவரும் அழைத்து வரப்பட்டனர். அனைவரையும் பதிவு செய்ய வசதி இல்லாததால்
மக்ரிப் தொழுகை முடிந்ததும் அனைவரும் தாமாகவே கலைந்து சென்றனர்.
அமெரிக்க தூதரகமே அஞ்சி நடுங்கும் அளவுக்கு முஸ்லிம்களின் கோபம் கட்டுமீறியதை செய்தி ஊடகங்கள் இச்செய்தியை முதன்மை செய்தியாக்கின.
இதுபோல் தமிழகம் முழுவதும் 22 நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள்
கலந்துகொண்ட ஆர்ப்பாட்டங்கள் மிகுந்த கோபாவேசத்துடன் நடந்து
முடிந்திருக்கிறது. பல இடங்களில் தடையை மீறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால்
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரை பல்வேறு நகரங்களில் தமுமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற உள்ளன.