கர்நாடகாவா அல்லது சங்க்பரிவாரின் ராம ராஜ்யமா?

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிப் பூசல்கள் மற்றும் ஊழல் ஆட்சியால் அம்மாநிலத்தில் பாஜக வேகமாக வளர்ந்தது. வலுவான சிறுபான்மை மக்களின் ஆதிக்கம் இல்லாத கர்நாடகாவில் சங்க்பரிவாரத்தின் மதவெறி அஜண்டாக்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கத் துவங்கியது.

தென்னிந்தியாவில் காவியின் ஆட்சி என்ற சங்க்பரிவாரத்தின் கனவை நினைவாக்கும் விதமாக அவர்களுக்கு ஆதரவான களத்தை உருவாகும் சூழலை காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதாதளமும் ஏற்படுத்திக் கொடுத்தன. கிராம மக்களை மறந்துவிட்டு நகரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதலாளித்துவ சக்திகளின் விருப்பங்களுக்கு துணை நின்று, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வழியில் பயணித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா.

கிராம மக்களின் பிரச்சனைகளை கண்டும் காணாததுபோல் நடித்த எஸ்.எம்.கிருஷ்ணா, உலக ஐ.டி வரைப்படத்தில் பெங்களூரின் இடத்தை உறுதிச் செய்வதிலேயே குறியாக இருந்தார்.
ஐந்துவருடம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது. மதசார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி பாரதீய ஜனதா ஆதரவுடன் கர்நாடகாவின் 18-வது முதல்வராக பதவியேற்றார். இது பா.ஜ.கவின் அதிகாரத்தை நோக்கி எடுத்துவைத்த காலடிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒரு ஆண்டிற்கு பிறகு குமாரசாமி முதல்வர் பதவியை இழக்க கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பான்மைக் கிடைக்க 4 சீட்டுகள் குறைவான நிலையில் ஆட்சியில் அமர்ந்தது பா.ஜ.க.பின்னர் கர்நாடகத்தில் பா.ஜ.கவின் ஆட்சி ஊழலிலும், குதிரை வியாபாரத்திலும் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளியது. ஹிந்துத்துவத்தின் உயிர்தெழலுக்காக கடுமையாக உழைக்கும் சங்க்பரிவாரின் உண்மையான விருப்பம்தான் கர்நாடகாவில் தற்பொழுது நடந்துவரும் பகல் கொள்ளையாகும். பெல்லாரியின் ராஜாக்களாக வலம்வரும் ரெட்டி சகோதரர்கள்தான் ஊழலின் சூத்திரதாரிகள்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஒரு மெட்ரிக் டன் இரும்பை விற்று அதில் 25 ரூபாயை வரியாக செலுத்துகிறார்களாம். பெல்லாரியின் மலைகளையெல்லாம் ரெட்டி சகோதரர்கள் தரைமட்டமாக்கி வருகின்றனர். கிடைப்பதில் ஒரு பங்கு டெல்லியில் பா.ஜ.க தலைவர்களின் சட்டைப் பையில் முறைதவறாமல் விழுந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பட்டப்பகல் கொள்ளையை ஆசிர்வதித்தவாறு கர்நாடகா ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.சி.ஜெயதேவும் எடியூரப்பாவுக்கு உறுதுணையாக உள்ளார். அதிகாரத்தை காப்பாற்றுவதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆட்சி ரிஸார்ட்டுகளுக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குமிடையே சீரழிந்துக் கொண்டிருந்தது.

அதிகாரம்-அது மட்டுமே எடியூரப்பாவிற்கும், அவரது கூட்டாளிகளுக்கும் ஒரே லட்சியம். மூன்று வருடங்களுக்கு முன்பு எடியூரப்பா காங்கிரஸில் சேர்வதற்கு முயற்சி மேற்கொண்ட பொழுது ஜெயதேவ் தலையிட்டு தடுத்து நிறுத்தினார். அதேவேளையில் ஹிந்துத்துவாவின் மதவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஊழல் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆட்சியில் தனது செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்துக்கொண்டு பிரமோத் முத்தலிக்கின் ஸ்ரீராம சேனா ஒரு கலவரத்திற்கு பத்துலட்சம், இரண்டு கலவரத்திற்கு பணம் கட்டினால் ஒரு கலவரம் இலவசம் என்ற மூலதன சந்தையின் ஆஃபருடன் செயல்படத் துவங்கியது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தியதைக் கூட எடியூரப்பாவின் பாஜக அரசால் பொறுத்துக் கொள்ளவியலவில்லை. இதற்காக அவர்கள் நிழலுக தாதாக்களுடன் கூட்டணி வைக்கக்கூட தயங்கவில்லை. நவ்ஷாத் ஹாஸிம்ஜி ஒரு அரசு-நிழலுக தாதாக்கள் கூட்டணியின் கொடூரத்திற்கு தனது இன்னுயிரை பறிக்கொடுத்தார்.

மைசூரில் ஹலீமா ஸாதிய்யா மஸ்ஜிதில் சங்க்பரிவாரக் கும்பல் பன்றியின் இறைச்சியை எறிந்து முஸ்லிம் சமுதாயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த முனைந்தது. ஆனால், இதனைப் புரிந்துக் கொண்ட முஸ்லிம் அமைப்புகள் ஒரு கலவரத்தை திட்டமிட்ட சங்க்பரிவார ஆட்சியாளர்களின் முயற்சிகளை எதிர்த்தனர். ஆனால், கலவரத்தை கொளுந்துவிட்டு எரியச் செய்யலாம் எனக் கருதிய ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சார்ந்த கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் ஆச்சார்யாவின் முயற்சி தோல்வியடைந்ததால், அவரது கவனம் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சிறையில் அடைப்பதை நோக்கி திரும்பியது.

பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை கலவரத்தை தூண்ட முயன்றதாகக் கூறி கைதுச் செய்த ஆச்சார்யா, இதற்கெதிராக ஜனநாயகரீதியில் போராடிய பெண்கள் உள்ளிட்டவர்களை காவல்துறையின் மூலம் வீதியில் போட்டு கண்மூடித்தனமாக அடித்து உதைக்கச் செய்தார். இறுதியில் சட்டத்திற்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றமே தலையிட நேர்ந்தது. தொடர்ந்து எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பவும், மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தவும் ஒரு தீவிரவாதியை உருவாக்கும் நிலைமைக்கு கர்நாடக பா.ஜ.க அரசு தள்ளப்பட்டது.

பலிகடாவை கண்டுபிடிக்கும் முயற்சி கடைசியாக கர்நாடகா எல்லையும் தாண்டி கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் சென்று முடிந்தது. ஊனமுற்றவராக ஒன்பது ஆண்டுகளை கோவைக் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டு பின்பு விடுதலையான அப்துல் நாஸர் மஃதனியை பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கிலும் கேரள அரசின் உதவியுடன் கைதுச்செய்து சிறையிலடைத்தது கர்நாடகா பா.ஜ.க அரசு.

வழக்கத்திற்கு மாறாக அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிரான முயற்சிகளைக் குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. மஃதனிக்கெதிரான சாட்சிகளும், வாக்குமூலங்களும் போலி என பல பக்கங்களிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கர்நாடகா மாநிலம் குடகு என்ற இடத்தில் நடந்த ரகசிய முகாமில் மஃதனி கலந்துக் கொண்டார் என்பதுதான் கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக முன்வைத்த முக்கிய சாட்சி .

கேரள போலீசாரின் கண்காணிப்பிலிருந்த அப்துல் நாஸர் மஃதனி அவர்களின் அனுமதியில்லாமல் எங்கும் செல்வதற்கான சுதந்திரத்தையும் இழந்திருந்தார். கேரள போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அப்துல் நாஸர் மஃதனி தனது ஒற்றைக் காலுடன் கர்நாடகா மாநிலம் குடகு ரகசிய முகாமில் பங்கேற்றார் என கர்நாடகா அரசு கூறியது. பிரபலமானவர் என்ற நிலையில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அப்துல் நாஸர் மஃதனியின் உருவம் அடிக்கடி தென்படுவதால் அவரை குடகில் வைத்து அடையாளம் கண்டதாக கூறி சாட்சி வாக்குமூலம் அளித்ததாக கர்நாடகா போலீஸ் தெரிவித்தது.

இதன் உண்மை நிலையை அறிவதற்காக ஏசியாநெட்டின் முன்னாள் செய்தியாளரான ஷாஹினா டெஹல்காவிற்காக கர்நாடகா அரசு மஃதனிக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறும் சாட்சிகளை சந்தித்துள்ளார். சாட்சிகளில் ஒருவர் பா.ஜ.கவைச் சார்ந்த யோகானாந்த் என்பவராவார். பா.ஜ.க அரசு அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக சாட்சிகளாக முன்னிறுத்தியவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றதுக்கூட தனக்கு தெரியாது என யோகானந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, குடகில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என யோகானந்த் கூறியுள்ளார்.

உண்மை விபரங்கள் வெளிவந்தால் தங்களின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுவிடும் என அஞ்சிய பா.ஜ.க அரசு ஷாஹினாவுக்கெதிராக நடவடிக்கையை மேற்கொண்டது. சமீபத்தில் கேரளாவிலிருந்து தாய்லாந்திற்கு வர்த்தகம் தொடர்பாக பயணித்துவிட்டு திரும்பி வருகையில் பெங்களூர் வழியாக பயணித்த கேரளாவைச் சார்ந்த 9 நபர்களை அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் தனியாக கடுமையான சோதனைகளை மேற்கொண்டது பா.ஜ.க அரசு. இவ்வாறு நாடு எக்கேடுக் கெட்டு குட்டிச்சுவாரானால் எங்களுக்கு என்ன? எங்கள் நோக்கம் நிறைவேறினால் போதும் என்ற மனோநிலையிலிருக்கும் கர்நாடகாவின் சங்க்பரிவார அரசுக்கு இனி குஜராத் மாதிரி இனப்படுகொலைதான் மீதமுள்ளதோ?

நன்றி: பாலைவனதூது விமர்சகன்.

Related

RSS 5700250676236940285

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item