தமுமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
http://koothanallurmuslims.blogspot.com/2015/03/blog-post_12.html
வேலூரில் 7.3.2015 அன்று நடைபெற்ற தமுமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. இட ஒதுக்கீடு:
கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தித் தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில், இட ஒதுக்கீட்டிற்கான இன சுழற்சி முறை (Roaster System) பின்பற்றப்படுவதில் உள்ள பல்வேறு குளறுபடிகளால் முஸ்லிம் சமுதாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இக்குறைபாட்டை களைய, ஆளுங்கட்சியல்லாத சட்டமன்ற உறுப்பினர் களையும், சமூக ஆர்வலர்களையும் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை அரசு உருவாக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
2. ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகள்:
மத மற்றும் மொழி வழி சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என தமுமுக தொடர்ந்து போராடி வருகிறது.
2007 மார்ச்-7ல் இக்கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் தமுமுக மாபெரும் பேரணியை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
3. காவல்துறை அத்துமீறல்கள் :
தமிழக காவல்துறையின் சட்ட விரோத அத்துமீறல்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. காவல்நிலைய சித்ரவதைகளும், கொலைகளும் தொடர்ந்து வருகின்றன.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்வதும், குண்டர் சட்டத்தில் அடைப்பதும் அதிகரித்து வருகின்றன.
அலைபேசி, இணையம் கடைகள் வைத்துள்ள முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கைப் புனைந்து தேடல் (ரெய்டு) என்ற பெயரில் கைப்பற்றப்பட்ட பொருட்களை உரிய முறையில் பதிவு செய்து ரசீது வழங்காமல் பிறகு தடை செய்யப்பட்டவற்றை கைப்பற்றப்பட்டதாக போலியாக ஜோடித்து முதல் வழக்கையே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
மேலும் கோவையில் சித்திக் என்பவரின் வியாபார பங்குதாரரை மிரட்டி போலியான வாக்குமூலங்களை போலீசாரே எழுதி பலவந்தமாக கையெழுத்து வாங்கி குண்டர் சட்டத்தில் சிக்கவைத்திருப்பதையும்,
நீண்டகாலமாக சிறையில் ராஜாஉசேன் என்பவரின் குடும்பத்தினருக்கு தொல்லைதரும் வகையில் வழக்கில் சிக்கவைப்பதற்காக சர்புதீன் என்பவரிடம் பொய்யான வாக்குமூலங்களில் கையெழுத்து வாங்கியிருப்பதையும்,
தாம்பரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக விரோதிகள் நடத்திய அராஜகங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் போக்கையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இப்போக்கு தொடருமானால் மாநில அளவிலான மாபெரும் அறப்போராட்டங்களை நடத்த நேரிடும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
4. மீத்தேன் எதிர்ப்பு :
காவிரிப் படுகை விவசாய பூமியைப் பாழாக்கி பாலை நிலமாக்க முயலும் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
அமெரிக்க நிறுவனத்துடனான மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காத தமிழக அரசை இப்பொதுக்குழு பாராட்டுவதோடு, தமிழக விவசாயிகளுக்குத் தமிழக அரசு வலிமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
5. நியூட்ரினோ எதிர்ப்பு :
மேற்குத் தொடர்ச்சி மலையின் வளத்தையும், அழகையும், சுற்றுச் சூழலையும் நாசப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தை இப்பொதுக்குழு வன்மையாக எதிர்க்கிறது.
6. கல்வி நிறுவனங்களில் தலையீடு :
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை தொடங்க, நடத்த, நிர்வாகம் செய்ய அரசியல் சாசனம் உரிமையளிக்கிறது. ஆனால், சிறுபான்மையினர் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் தேவையற்ற தலையீடுகளைச் செய்து வருவதாகப் புகார்கள் வருகின்றன. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் அரசு அதிகாரிகள் தேவையற்ற தலையீடுகளை செய்யக்கூடாது என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
7. உருது மொழி வழிக் கல்வி :
தமிழக பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக அனைவரும் பயில வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. அதேநேரம், உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தங்கள் தாய் மொழி வழியில் அடிப்படைக் கல்வியைப் பெறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது கல்விக்கோட்பாட்டிற்கு எதிரானது.1967-ல் அண்ணா அவர்கள் மேற்கொண்ட மொழிக் கொள்கைக்கும் எதிரானது.
உருது, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தங்கள் தாய்மொழி வழியில் பயிலும் உரிமையை அரசு உறுதிப்படுத்தி அதற்கான வசதிகளை செய்து தரவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
8. நீலகிரி :
கடந்த 14.02.2015 அன்று நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் தாலுக்காவில் உள்ள பிதிர்காடு பகுதியில் மனிதர்களைக் கடித்து வேட்டையாடிய புலியைப் பிடிக்கக் கோரி தொடர்ந்து மூன்று நாட்களாக மக்கள் போராட்டத்தில் இறங்கி அது வன்முறையாக மாறியது. அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த வன்முறையில் யார் மீதும் வழக்கு போடப்படாது என எழுத்து மூலமாக உறுதி கொடுக்கப்பட்டது. அதையும் மீறி அப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் “நக்சலைட்” தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என்று ஒரு பொய்யான காரணத்தைக் கூறி அங்கு இருக்கக்கூடிய மக்களை குறிப்பாக இளைஞர்களைக் குறிவைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அவர்களை காவல்துறை படுமோசமாக அடித்து, துன்புறுத்தி வருகின்றது. இது தொடர்பாக அப்பகுதி பந்தலூர் தாலுக்கா / பிதிர்காடு போன்ற பகுதிகளில் காவல்துறையினரின் தொடர் அத்துமீறல்களால் பொதுமக்கள் கிராமங்களில் வசிப்பதற்கே அச்சப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு காவல்துறையின் கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும், காவல்துறை இப்போக்கை தொடருமேயானால், தமிழகம் தழுவிய போராட்டங்களை நடத்த நேரும் எனவும் இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
9. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி மறுப்பு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக சிறுபான்மை முஸ்லிம் நீதிபதி ஒருவர் கூட இல்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மற்றொரு சிறுபான்மை கிறிஸ்துவ சமூகத்தில் நீதிபதி ஒருவர் கூட இல்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 18 நீதிபதிகள் காலி பணியிடத்தை நிரப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் பட்டியலில் ஒரு முஸ்லிம் நீதிபதியும் பரிந்துரைக்கப்படவில்லை.
ஒரே நேரத்தில் 18 நீதிபதிகள் பொறுப்பிற்கு பெயர்களை பரிந்துரைத்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்தால் மாவட்ட நீதிபதிகள் வரிசையில் முதல் நிலையில் உள்ள முஸ்லிம் நீதிபதி இடம்பெற்றிடுவார் என்பதால் 18 பேர்களை பரிந்துரைக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி மறுக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கின்றது. லக்னோ உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பல்வேறு சமூகங்களுக்கும் விகிதாச்சார இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகின்றது. சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் சமூக நீதியின் அடிப்படையில் நீதிபதிகளின் நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த வகையில் முஸ்லிம்கள் உட்பட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு நீதிபதிகள் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என இப்பொதுக்குழு கோருகின்றது.
10. முஸ்லிம் இட ஒதுக்கீடு ரத்து; மராட்டிய அரசிற்கு கண்டனம் :
மராட்டிய மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு முஸ்லிம்களுகு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், மராட்டியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 15% விழுக்காடு இட ஒதுக்கீடும் அளித்து அவசர சட்டம் பிறப்பித்தது.
இந்த இருவகை இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் மராட்டியர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்தது. இதே நேரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் என வகைச் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த அதே வேளை, முஸ்லிம்களுக்கான கல்வி வாய்ப்பிற்கான இட ஒதுக்கீடு தொடரும் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் முஸ்லிம்களுக்கான கல்வி வாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான கல்வி வாய்ப்பிற்கான இட ஒதுக்கீடு அளிப்பதற்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யும் வகையில் சட்டத்தை இயற்றாமல் முந்தைய அரசின் அவசர சட்டத்தை காலாவதியாக விட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் மீது பா.ஜ.க.-விற்கு இருக்கும் வெறுப்புணர்வை இது பிரதிபலிக்கின்றது. இது நீதிமன்ற அவமதிப்பாக விளங்குகின்றது. மராட்டிய பா.ஜ.க. / சிவசேனா அரசின் இந்த சிறுபான்மை விரோதப் போக்கை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
11. மாட்டிறைச்சிக்கு தடை :
மராட்டியத்தை ஆளும் பா.ஜ.க. / சிவசேனா அரசு அனைத்து வகையான மாட்டிறைச்சியை தடை செய்துள்ளதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
வறுமையின் காரணமாக விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலத்தில் மாட்டிறைச்சி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை மக்களுக்கு மிகவும் குறைவான விலையில் நிறைவான புரதச் சத்தை தரும் உணவாகும்.
மாட்டிறைச்சியை தடை செய்ததின் மூலம் ஏழை மக்களுக்கு மராட்டிய அரசு வஞ்சகம் செய்துள்ளது. இதை திரும்பப்பெற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
12. திருமணப் பதிவுச் சட்டம் :
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம், மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுவதோடு, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படைக் குடிமையியல் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் உள்ளது. திருமணம் செய்வோரைப் பெரும் அலைக்கழிப்புக்குள்ளாக்கும் இந்த சட்டத்தை தேர்தல் வாக்குறுதியளித்தபடி தமிழக அரசு கைவிடவேண்டும் எனவும், முஸ்லிம் ஜமாஅத்கள் முறையில் பதிவு செய்து வழங்குகிற திருமணச் சான்றிதழை திருமண ஆவனமாக ஏற்கவேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
13. நிலம் கையகப்படுத்தும் சட்டம்:
பெரு நிறுவனங்களுக்கு ஏழைகளின் நிலங்களைப் பறித்துக் கொடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
14. வேலூர் கோட்டைப் பள்ளிவாசல்:
வேலூர் கோட்டை வளாகத்தில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் செயின்ட் ஜான்ஸ் தேவாலயம் ஆகியவற்றில் வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஆனால் அதே வளாகத்தில் உள்ள பள்ளிவாசலில் மட்டும் தொழுகை நடத்தவோ, பார்வையிடவோ அனுமதி மறுக்கப்படும் சூழல் மிகவும் பாரபட்சமானது.
இதைக் கண்டித்து 2008ஆம் வருடம், மே மாதம், 9-ஆம் தேதி மாபெரும் போராட்டத்தை தமுமுக நடத்தியபோது விரைவில் பள்ளிவாசலைப் பார்வையிடவும், வணங்கவும் அனுமதியளிப்பதாக அரசுத் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அவ்வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை அனுமதி உடனடியாக வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் பள்ளி வாசலில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட தமுமுக மாபெரும் போராட்டங்களை நடத்த நேரும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
15. பூரண மதுவிலக்கு :
தமிழக மக்களின் வாழ்வைப் பல வகையிலும் சீரழிக்கின்ற நஞ்சான மதுவை அரசே டாஸ்மாக் மூலம் விற்பனை செய்வது அவலகரமானது.
இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்ற மாநிலமாகத் தமிழகம் ஆகியிருப்பது மது போதையால்தான் என்பதை மறுக்க முடியாது. மதுவை ‘பாவங்களின் தாய்’ என இறைத்தூதர் முகம்மது(ஸல்) குறிப்பிட்டார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் பாலியல், கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களும் அதிகரிப்பதற்கு மது போதை காரணமாகியுள்ளது.
தமிழக அரசு மக்களின் நல்வாழ்வைப் பாழ்படுத்தும் மதுவை ஒழிக்க, அரசு பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
16. இறைச்சிக் கடைகளுக்கு நெருக்கடி :
ஆண்டுதோறும் மஹாவீர் ஜெயந்தி அன்று எளிய இறைச்சிக் கடைக்காரர்களுக்கு காவல்துறை பெரும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆடு, மாடு ஆகியவற்றை அறுக்கவோ, விற்கவோ கூடாது என எளியவர்களை நெருக்கும் இவர்கள், நட்சத்திர விடுதிகளைக் கண்டுகொள்வதில்லை.
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்படும் இத்தகைய அடாவடிகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
17. உருது ஆசிரியப் பணியிடங்கள் :
வேலூர் அரசு முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் கடந்த 14 ஆண்டுகளாக 11 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அந்தப் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் உருதுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்பிட வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.