பாலியல் வன்புணர்வு: தஹிர் சதுக்கமாக மாறிய இந்தியா கேட்
http://koothanallurmuslims.blogspot.com/2012/12/blog-post_8235.html
ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் பல்கலைக்கழக மாணவி பாலியல் வல்லுறவு செய்த கொடியவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோரி புது டெல்லியில் ஆட்சி, அதிகார மையங்களின் முன்னால் நடந்த போராட்டத்தில் இந்திய வரலாற்றில் சம காலங்களில் இல்லாத அளவுக்கு எதிர்ப்புகள் அணை உடைந்த வெள்ளமாய் சீறிப்பாய்ந்தன.
நேற்று குடியரசு தலைவர் மாளிகைக்கு முன்னால் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தடுப்பு வேலிகளைத் தாண்டி குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார்
தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். கண்ணீர்ப் புகை, தடியடி பிரயோகம் செய்து போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இச்சம்பவத்தில் சிலர் காயமடைந்தனர்.
புது டெல்லி, விஜய் சௌக் பகுதியில் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் பல முறை தடியடி நடத்தி துரத்தினர். மற்றொரு பகுதியில் போராட்டக்காரர்கள் கும்பலாக சேர்ந்து போலீஸாரைத் துரத்தினர். இதனால், ராஜபாதை சாலையே கலவரப் பகுதியாக மாறியது.
பேருந்தில் பயணம் செய்த மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரியும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு அமைப்புகள் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி… சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் நீதி கோரி குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி சென்றனர். சில மகளிர் அமைப்புகள் வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் உள்ளே நுழைந்து போராட்டம் செய்த காரணத்தால் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
“நடைப்பயணம்’ சென்ற போராட்டக்காரர்கள் ராஜ்பாத் சாலை சந்திப்புகளில் இருந்து தடுப்பு வேலிகளை அகற்றிவிட்டு பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகம் உள்ள நார்த் பிளாக், சௌத் பிளாக் பகுதிக்கு முன்னேறினர். விஜய் சௌக் பகுதியில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
அப்போது “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும்” என்று
போராட்டக்காரர்கள் கோஷமிட்டபடி, தடுப்பு வேலிகளை மீறி செல்ல முயன்றனர். அவர்கள் மீது, போலீஸார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். அப்போதும் கூட்டம் கலையாததால், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் போலீஸார் வாகனங்களையும், தடுப்பு வேலிகளையும் சேதப்படுத்தினர்.
சிறிது நேரத்தில் மீண்டும் கும்பல் கூடியதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். ஆண்களும், பெண்களும் சிதறியடித்து ஓடினர். சிலர் நாடாளுமன்ற நுழைவாயிலுக்குள் தஞ்சம் அடைய ஓடினர். சிறிது நேரத்துக்குப் பின் போராட்டக்காரர்கள் மீண்டும் கூடி தங்கள் கையில் கிடைத்த தண்ணீர்ப் பாட்டில்கள், செருப்பு, கற்கள், செடிகள் ஆகியவற்றை வீசி போலீஸாரை விரட்டி அடித்தனர்.
பின்னர் பெருமளவில் அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். இந்தக் கலவரத்தில் மாணவ, மாணவிகள் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான மாணவியின் உடல் நிலை தேறிவருவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். “அந்த மாணவியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
செயற்கை சுவாசக் கருவியின்றி, தானாகவே சுவாசிக்கிறார். தண்ணீரும், ஆப்பிள் பழ ரசமும் அருந்தினார்” என்று சப்தர் ஜங் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அதானி கூறினார்.
இதனிடையே நடந்த சம்பவம் குறித்த வாக்குமூலத்தை சார்கோட்ட ஆட்சியரிடம் அந்த மாணவி சனிக்கிழமை அளித்தார். “இந்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும். இந்த சம்பவம் தொடர்பாக இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தில்லி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.