குஜராத் - வகுப்பு வாதத்தின் வெற்றி!

ஆச்சரியங்களை ஒன்றும் ஏற்படுத்தாமல் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய நரேந்திர மோடியின் தொடர்ச்சியான 3-வது வெற்றிக்கு தடை போடும் அளவுக்கு குஜராத் வாக்காளர்களுக்கு ஜனநாயகரீதியான உணர்வு ஏற்படவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2002-ஆம் ஆண்டு முஸ்லிம் இனப்படுகொலைகளின் கதி கலங்க வைக்கும் நினைவலைகள் குஜராத் மாநிலத்தில் ஜனநாயகம் மற்றும் மதசார்பற்ற கொள்கைகளை ஊக்கமளிப்பதற்கு பதிலாக ஹிந்துத்துவா வன்முறை அரசியல் வேர்ப்பிடிக்க உரமாக மாறியது.

குஜராத் புவியல் ரீதியாக இந்தியாவின் ஒரு பகுதியாகும். ஆனால், மனோரீதியாக அவ்வாறல்ல. இந்திய சமூகம் நெஞ்சில் சுமக்கும் சகிப்புத் தன்மை, நல்லிணக்கம் ஆகியன குஜராத்திற்கு இப்பொழுது அந்நியமாகவே தென்படுகிறது. தேர்தல் முடிவுகள் இதனை நிரூபித்துள்ளன. துவேசத்தின் தத்துவத்தை அரசியல் அதிகாரத்திற்கான குறுக்கு வழியாக மாற்றுவது என்பது பா.ஜ.கவுக்கு கைவந்த கலை. குஜராத் ஹிந்துத்துவா கொள்கைகளின் சோதனைக் கூடம் என்பதை மோடியின் தொடர்ச்சியான வெற்றி நிரூபித்துள்ளது.

பா.ஜ.க வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின. முந்தைய தேர்தல்களை விட இப்பொழுது மோடிக்கு எதிராக பல கோணங்களிலும் எழுந்த எதிர்ப்புகள் ஒன்றிணைந்திருந்தன. மாநிலத்தில் பா.ஜ.கவை ஆட்சி கட்டிலில் அமர்த்திய கேசுபாய் பட்டேல், மோடியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தனியாக பிரிந்து குஜராத் பரிவர்த்தன் பார்டி என்ற கட்சியை துவக்கினார். ஆனால், அவரது கட்சி மோடிக்கு எவ்வித அச்சுறுத்தலையும் தேர்தலில் ஏற்படுத்தவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

குஜராத்தில் செல்வாக்குப் பெற்ற பட்டேல் சமூகத்தினரின் ஆதரவைப் பெற்ற பிறகும் மோடியின் மூக்கை வியர்க்கச் செய்யும் அளவுக்கு கூட கேசுபாய் பட்டேலுக்கும், அவரது கட்சிக்கும் இயலவில்லை. தீவிர ஹிந்துத்துவாவின் சர்வதேச பிரதிநிதியான பிரவீண் தொகாடியா, மோடிக்கு எதிரானவர் என செய்திகள் வெளியாகின.

ஹிந்துத்துவாவின் உள்ளே எழுந்த இந்த புயலும் புஷ்வாணாமாக மாறிவிட்டது. மும்முனைப் போட்டி காங்கிரசுக்கு ஆதாயமாக மாறும் என்ற கணிப்பும் பொய்த்துப் போனது. மோடியின் கொலையாளி பட்டத்திற்கு மெருகூட்டிய ஹிந்துத்துவா ரவுடி அமித் ஷாவுக்கு வேட்பாளர் பதவி வழங்கி மணி மகுடம் சூட்டியதும், முஸ்லிம் கூட்டுப் படுகொலைக்கு தலைமை தாங்கிய மாயா கோட்னானிக்கு ஆயுள் சிறை கிடைத்ததும் குஜராத் அரசியலில் ஜனநாயகத்திற்கு ஆதரவான சலனங்கள் எதனையும் உருவாக்கிவிடவில்லை.

பிரதமர்  பதவி குறித்து கனவில் மூழ்கியுள்ள மோடிக்கு குஜராத் ஊடகங்கள் மனமார்ந்த ஆதரவை தெரிவித்து உதவி புரிந்தன. பொதுவாகவே குஜராத்தை சூழ்ந்திருக்கும் மோடி பயம் இன்னமும் அம்மாநிலத்தை விட்டு விலகவில்லை என்பது தேர்தல் முடிவுகள் தரும் இன்னொரு பாடமாகும். இமாச்சல் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியதன் மூலம் காங்கிரஸுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது எனலாம்.

செய்யது அலி

Related

முக்கியமானவை 6745189342236910107

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item