ஃபலஸ்தீனை வெற்றிக்கொள்ளல் இஃவான்களின் முடிவுறாத போராட்டம்!
ஃபலஸ்தீன், உலக முஸ்லிம்களின் அகீதாவோடு தொடர்புப்பட்ட பூமி. அல்குர் ஆன் அதனை பரக்கத் செய்யப்பட்டது என்கின்றது. நபிமார்களின் அனைவரது போராட்டத்திலும் ஃபலஸ்தீனுக்கு ஒரு முக்கிய இடம் இருந்திருக்கின்றது. உலகை ஆட்சி செய்த அனைத்து சமூகங்களும் ஃபலஸ்தீனை தமது ஆளுகைக்குள் கொண்டுவருவதற்காக கடும் பிரயத்தனங்கள் செய்திருக்கின்றன. ஏனெனில் ஃபலஸ்தீனை தம் கைவசம் வைத்திருக்கும் சமூகம் தான் உலகிற்கு தலைமையினை வழங்கியிருக்கின்றது. அந்தவகையில் இஸ்ரா நிகழ்வுடன் ஃபலஸ்தீன் பூமியின் தலைமை நபியவர்களிடம் அல்லாஹ் தஆலாவால் ஒப்படைக்கப்பட்டது. அந்த நம்பிக்கையின் விளைவால்தான் ஃபாலஸ்தீனை நோக்கிய படையெடுப்புகள் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. இறுதியில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஃபலஸ்தீன் முழுமையாக முஸ்லிம்களிடம் வருகிறது. இடைக்காலத்தில் சில வருடங்கள் முஸ்லிம்களிடமிருந்து ஃபலஸ்தீன் கிறிஸ்தவர்கள் கைக்கு நகர்ந்திருந்தாலும், ஸலாஹூத்தீன் அய்யூபியின் காரணமாக மீண்டும் ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் கைக்கு வருகிறது. அன்று முதல் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் கைகளில்தான் இருந்திருக்கிறது.
1948 மே மாதம் 15-ம் திகதியுடன் உத்தியோக பூர்வமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டதுடன் பைத்துல்முகத்தஸ் உட்பட ஃபலஸ்தீனின் பெரும்பகுதி முஸ்லிம்களை விட்டுச்செல்கிறது. ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் அகீதாவில் ஒரு பகுதி, அது விட்டுக் கொடுக்கப்படக்கூடாது-இஸ்லாமிய உலகின் இதயத்தில் ஒரு யூத நாடு தோன்றிவிடக்கூடாது என்ற ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது தான் அல் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தவரின் போராட்டம். இன்று வரை தொடரும் போராட்டம்.
ஃபலஸ்தீன் முழுமையாக மீட்கப்படும் வரை நடைப்பெறப்போகும் போராட்டம். ஃபாலஸ்தீன விவகாரத்தில் இவர்கள் ஆரம்பமுதலே கவனம் செலுத்தியிருக்கிறார்கள். 1930 களில் ஃபாலஸ்தீன விவகாரத்திற்கான தனிப்பிரிவு இஃவான்களால் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக 1936ம் ஆண்டு புரட்சியில் அமீன் ஹுசைனியுடன் பல இஃவான்கள் பங்கு பெற்றனர். தொடர்ந்து, 1938ஆம் ஆண்டு நடைப்பட்ட இஸ்ஸுத்தீன் கஸ்ஸாம் புரட்சியுலும் பல இஃவான்கள் கலந்துக்கொண்டனர். பின்னர் ஃபலஸ்தீனுக்குள்ளேயே இருந்து செயல்படும் நோக்கில் 1946 ஆம் ஆண்டு இஃவான்களது கிளை ஒன்று ஃபலஸ்தீனில் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக ஜமால் ஹுசைனி என்பவர் நியமிக்கப்பட்டார். மறுபுறத்தில் எகிப்துக்குள்ளே யூதர்களின் நடவடிக்கைகல் பலம் பெறத்தொடங்கின. 1943ஆம் ஆண்டு எகிப்தில் சியோனிச இயக்கத்தின் பிரிவு அரச அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
1944ஆம் ஆண்டு அலெக்சாந்திரியாவில் நடைப்பெற்ற அவர்களது மாநாட்டில் சாமாதானத்தில் மூலமோ அல்லது யுத்தத்தின் மூலமோ இஸ்ரேல் உருவாகியே தீரும் என்று பகிரங்கமாக அறிவித்தார்கள்.
எகிப்தின் கம்பெனிகளில் 40 வீதமானவறை யூதர்களே தம் வசம் வைத்திருந்தார்கள். இந்த அபாயகரமான நிலையை எதிர்த்து இஃவான்கள் மாத்திரமே போர்க்கொடி தூக்கினார்கள். இரண்டாம் உலகப்போரின்போது பிரித்தானிய அரசு எகிப்திய யூதக் கம்பெனிகளின் உதவியுடன் ஆயிரக்கணக்கான யூதர்களை ஆயுத ரீதியாக பயிற்றுவித்தது. அப்போது இஃவான்கள் மாத்திரமே தமது உரைகள் ஊடாகவும் துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் ஊடாகவும் இந்தக் கம்பெனிகளின் உற்பத்திகளை நிராகரிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள். பல மாநாடுகளை நடத்தினார்கள். அரபுத்தலைவர்களை உசுப்பிவிட்டார்கள். இதன் விளைவாக ஃபலஸ்தீனுக்கான முதலாவது அரபு மாநாடு நடைப்பெற்றது. அதன் விளைவாக அரபு நாடுகளை திருப்திப்படுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்கு பிரித்தானியா தள்ளப்பட்டது. எனவே லண்டனில் அரபிகளையும் யூதர்களையும் இணைத்து வட்டமேஜை மாநாட்டை நடத்தினார்கள். அதில் ஃபலஸ்தீனுக்குள்ளே யூதர்கள் மேற்க்கொள்ளும் சிறைப்பிடிப்புகளும் சித்திரவதைகளும் கொலைகளும் நிறுத்தப்படுவதற்கு உத்திரவாதம் தரப்பட்டது. அத்துடன் வெளியிடங்களிலிருந்து யூதர்கள் ஃபலஸ்தீனுக்கு வருவதில் ஒரு வரையறை இடப்பட்டது. இதனை யூதர்கள் அங்கீகரிக்கவில்லை. உடனே பிரித்தானியாவை விட்டுவிட்டு அமெரிக்காவிடம் போய் உதவிக்கேட்டார்கள். அதன் விளைவாக, அமெரிக்க-பிரித்தானிய நட்புறவு சபை உருவாக்கப்பட்டு அதன் தீர்மானத்தின் பிரகாரம் உடனடியாக ஒரு லட்சம் யூதர்கள் ஃபலஸ்தீனுக்கு அனுப்பப்பட அனுமதிக்கப்பட்டது. அத்துடன் யூதர்கள் ஃபலஸ்தீன நிலங்களை வாங்க விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. தொடர்ந்தும் 1947 நவம்பர் 29ஆம் திகதி அமெரிக்க, பிரித்தானிய அழுத்தத்தின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபை ஃபலஸ்தீனை இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் தீர்மானத்தை வெளியிட்டது. ஒன்று யூதர்களுக்குரியது. மற்றையது அரபிகளுக்குரியது. இத்தீர்மானத்தை அரபுத்தலைவர்கள் எதிர்த்தார்கள். இஃவான்கள் ஒரு பெரும் எதிர்ப்பு மாநாட்டை ஏற்பாடு செய்தார்கள். அதில் சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, சூடான் போன்ற நாடுகளின் பல அறிஞர்கள் கலந்துக்கொண்டனர். அந்த மாநாட்டில் உரையாற்றிய இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள், "ஃபலஸ்தீனே எமது இரத்தங்கள் உனக்கு அர்ப்பணமாகட்டும், இந்த மேடைமீது நின்று நான் உரத்துச்சொல்கிறேன். இஃவான்களில் பத்தாயிரம் பேர் ஃபலஸ்தீனில் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அழைப்பை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்" என்று அறிவிப்புச் செய்தார்கள். மாநாட்டின் நிறைவில் ஃபலஸ்தீனைக் காப்பதற்கான உயர்சபை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் இமாமவர்களும் அங்கத்துவம் வகித்தார்கள். அவர்கள் ஃபலஸ்தீன போரட்டத்திற்கான ஆயுதங்களையும் நிதியையும் திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.
1948ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி இஃவான்கள் ஆக்கிரமிக்கும் யூதர்களுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்தார்கள். ஒவ்வொரு அங்கத்தவனும் ஜிஹாதிற்காக தன்னை தயார் படுத்திக் கொள்வதை கடமையாக்கினார்கள். இஃவான்களின் இந்த உறுதியைக் கண்ட பல தலைவர்களும் அவர்களுடன் ஒத்துழைக்க முன்வந்தார்கள். எகிப்திய அரசப்படையில் இருந்த பல தளபதிகள் தமது தொழிலை ராஜினாமா செய்துவிட்டு இஃவான்களது படையில் வந்து இணைந்துக்கொண்டனர். இஃவான்களின் இராணுவ பயிற்சி சிரியாவில் நடைப்பெற்றது. அது முஸ்தபா ஸிபாஈ, உமர் பாஹாவுத்தீன் அல் அமீரி, முஹம்மத் ஹாமித், அப்துல்லாஹ் ஹில்லாக் போன்ற அன்றைய முக்கிய இஃவான்களின் தலைவர்களினது மேற்பார்வையில் நடைபெற்றது. உண்மையில் இந்த தலைவர்கள் நேரடியாக யுத்தத்தில் ஆயுதம் ஏந்திப்போராடினார்கள். சிரியாவிலிருந்து வந்த படைக்கு முஸ்தபா ஸிபாஈ தலைமைத் தாங்கினார்கள். ஜோர்தானிலிருந்து வந்த படைக்கு அப்துல் லதீப் அபூகூரஃ தலைமை தாங்கினார்கள். ஈராக்கிலிருந்து வந்த படைக்கு முஹம்மத் மஹ்மூத் ஸவ்வாப் தலைமை தாங்கினார்கள். இவர்கள் தான் அன்றைய நாளில் அந்த நாடுகளில் இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவர்களாகவும் காணப்பட்டார்கள். யுத்தம் நடைபெறுகின்றபோது, முஸ்தபா ஸிபாஈ அவர்களை ஏனையவர்கள், அவர் நேரடியாக யுத்தத்தில் ஈடுபடாமல் தலைமையகத்தில் இருந்துகொண்டு மேற்பார்வை செய்தால் போதுமானது என்றார்கள். நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்ட முன் அனுபவங்கள் அவருக்கு குறைவு என்பதே காரணம். ஆனாலும் அதனை மறுதலித்த முஸ்தபா ஸிபாஈ அவர்கள் "நான் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக வேண்டும் என்பதற்காவன்றி வேறு எதற்காகவும் இங்கு வரவில்லை." என்றார். எனவே அவரும் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டார்.
உண்மையில் 1948ஆம் ஆண்டு யுத்தத்தில் இஃவான்கள் காட்டிய வீரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. மிகக்குறைந்த மனித வளங்களுடனும் மிகக் குறைந்த ஆயுதங்களுடனும்-ஆனால் மிக உயர்ந்த ஈமானுடனும் அவர்கள் போராடினார்கள். எனவே தான் அவர்கள் ஏனையவர்களை விட அதிகமாக சாதித்தார்கள். தபத்86 என்னும் இடத்தை கைப்பற்றுவதற்கான போராட்டம் இடற்கு சான்றாக உள்ளது. எகிப்திய படையினர் 3ஆயிரம் பேருடன் மூன்று நாட்களாக போராடினார்கள். வெற்றி கிடைக்கவில்லை. படைத்தளபதி முஹம்மது நஜீப் என்பவர் கூட போராட்டத்தில் காயப்பட்டார். மூன்றாம் நாள் முடிவில் அவர்கள் இஃவான்களிடம் உதவிக்கேட்டார்கள். இஃவான்கள் 50 பேரை மாத்திரம் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் படையின் முன்னணியில் நின்று போராடினார்கள். ஒரே நாளில் அந்த இடம் கைப்பற்றப்பட்டது. யூதர்கள் வெருண்டோடினார்கள். 1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி திடீரன யுத்த நிறுத்தத்திற்கு அரபுத் தலைவர்கள் உடன்பட்டுவிட்டார்கள். ஃபலஸ்தீனில் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியைக் கொடுத்தது. முஸ்லிம்கள் வெற்றியின் உச்சத்தில் நிற்கின்றபோது முழுமையான வெற்றியை பெறுமுன்னர் ஏன் இந்த யுத்த நிறுத்தம்? யூதர்கள் தமக்குத்தேவையான் ஆயுதங்களை வரவழைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த யுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபையைக் கொண்டு வந்தது. இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் விரைந்துச் செயல்பட்டார்கள். அரபுத் தலைவர்களுக்கு இந்த விடையத்தை தெளிவுப்படுத்த முற்பட்டார்கள். விளைவாக யுத்தம் மீண்டும் ஆரம்பித்த போதிலும் அது நீடிக்கவில்லை. இரண்டாவது தடவையாகவும் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இந்தத் தடவை யூதர்கள் நவீனகரமான ஆயுதங்களைக் கொண்டு குவித்தார்கள். யுத்த நிறுத்தம் அமுலில் உள்ளபோதே அதைப்பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாது, புதிய ஆயுதங்கள் கொடுத்த தைரியத்தில் முஸ்லிம்களைக் கொடூரமாக தாக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம்களுக்கு ஆயுதங்களைக்கொண்டு சேர்ப்பதற்கு அரபுத் தலைவர்களே தடையாக இருந்தார்கள். சில பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் படைகள் பலவந்தமாய் வாபஸ் வாங்க வைக்கப்பட்டன. எகிப்திய இஃவான்களின் படையினர் மேலகப் பயிற்சி என்ற போர்வையில் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். யூதர்கள் இஃவான்களில் கைதாவோரை சராசரி கைதியாக கருதாமல் போர்க் குற்றவாளிகள் என்று கூறி கொடூரமாகக் கொலைச் செய்தார்கள். இறுதியில் இது போன்ற சதிகளின் விளைவாக முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கும் யூதர்களுக்கு முன்னால் தோற்றுப் போனார்கள். ஃபலஸ்தீன் பரிதாபமாய் ஆக்கிரமிக்கும் யூதர்களின் கைகளில் விழுந்தது. இந்த யுத்தம்தான், உலகிற்கு இஃவான்களின் பலத்தை அறிய வைத்தது. இதன் பின்னர்தான் இமாம் ஹஸனுல் பன்னா கொலை செய்யப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு மேற்குலகம் வந்தது. 1948ஆம் ஆண்டு "ரோஸ் காரீப்" எனும் யூதப்பெண் பத்திரிகையாளர் ஒருவர் "சண்டே மிரர்" எனும் பத்திரிக்கைக்கு எழுதிய ஒரு கட்டுரையில் இஃவான்களைப்பற்றி இவ்வாறு எழுதுகிறார்: "தற்பொழுது இஃவானுல் முஸ்லிமூன் என்னும் ஈர்ப்புமிக்க இந்தப் பெயருக்குப்பின்னால் உள்ள அந்த மனிதர்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. தற்போது ஃபலஸ்தீனில் உள்ள யூதர்கள்தான் இவர்களது மிகப்பெரிய எதிரிகள். யூதர்கள்தான் இவர்களது அடிப்படை இலக்கு. மத்திய கிழக்கின் பல நகரங்களில் இதன் அங்கத்தவர்கள் யூதர்களின் சொத்துகளை அழிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் தற்பொழுது பஹ்ரைனிலும் யெமனிலும் யூதர்கள் மீது அத்துமீற ஆயத்தமாகிறார்கள். அவர்கள் தான் அமெரிக்கக் கவுன்சில்களை தாக்கியவர்கள். பகிரங்கமாகவே அரபு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேறவேண்டும் எனக்கேட்டுள்ளனர். ஃபலஸ்தீனிலுள்ள யூத நாடு ஐக்கிய நாடுகள் சபையிடம் எதிர்பார்ப்பது நாட்டை இரண்டாகப் பிரிக்கும் அதன் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் சர்வதேசப் படைகளையல்ல. மாற்றமாக இஃவனுல் முஸ்லிமூன்களை நேருக்கு நேர் நின்று எதிர்க்கத் தகுதியான படைகளைத்தான் எதிர்ப்பாக்கிறார்கள். இந்த இயக்கத்தின் பெயரில் இருக்கும் அடிப்படை அபாயத்தை உலகம் அறிந்து கொள்ளவேண்டும். மிக அவசரமாக உலகம் அந்த உண்மையை உணர்ந்துக் கொள்ளவில்லையெனின், ஐரோப்பா இந்த நூற்றாண்டின் கடந்த நாட்களில் நாஸிஸ இயக்கத்திடம் கண்டதை இங்கேயும் காணவேண்டியிருக்கும்.வட அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரையிலும்-துருக்கி முதல் இந்தியாவரையிலும் பரந்த ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை ஐரோப்பா எதிர்க்கொள்ள வேண்டிவரும்." இவை யூதப்பெண் எழுத்தாளர் ஒருவரின் வார்த்தைகள். மிகப்பெரிய உண்மைகள் விஷம் கலந்து தரப்பட்டிருக்கின்றன. இந்த உண்மைகள் ஃபலஸ்தீன் விவகாரத்தில் இஃவான்களின் பாரிய பங்களிப்புகளுக்கு போதிய சான்றுகளாகும். இஃவான்கள் ஒரு பெரும் சக்தி என்பதை அன்றே அங்கீகரித்துவிட்டனர். அவர்களால்தான் ஃபலஸ்தீனும் உலகின் செல்வாக்கும் மேற்குலகிற்கு கிடைக்காமல் போக முடியும் என்றுக் கண்டனர். எனவேதான் இன்று வரைக்கும் மேற்குலகின் பிரதான எதிரியாக அவர்கள் பார்க்கப்படுகின்றனர். அல்லாஹ் அவர்களை வெற்றிபெறச்செய்வானாக.