சங்கரன்கோவில் கலவரம் பாசிஸ்டுகளின் திட்டமிட்ட சதி : PFI
http://koothanallurmuslims.blogspot.com/2012/02/pfi.html
நெல்லை மாவட்டத்தில் (மேற்கு) சங்கரன்கோவில் கழுகுமலை ரோட்டில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். நட்புணர்வோடும், சுமூகமாகவும் வாழ்ந்து வரும் இவர்கள் மத்தியில் பகையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சில சமூக விரோத விஷமிகள் சமீபகாலமாக பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று (07.02.2012) தலித்கள் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் ஊர்வலம் கழுகுமலை ரோடு பள்ளிவாசல் அருகே வரும்போது ஊர்வலத்தில் இருந்த விஷமிகள் சிலர் பள்ளிவாசலின் உள்ளே செருப்புக்களை வீசியும், வெடிகளை வெடித்தும் பிரச்சனை செய்து விட்டு சென்றுள்ளனர். இதனைப் பார்த்த முஸ்ளிம்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். பிரச்சனையின் தீவிரத்தை உணராத காவல் துறையினரோ சில காவலர்களை மட்டும் சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
பின்னர் மீண்டும் அந்த பகுதிக்கு ஊர்வலத்தினர் வரும்போது பிரச்சனை செய்துள்ளனர். அதனை தடுக்க வந்த காவல்துறையினரையும் தாக்கிவிட்டு பிரச்சனையை தொடரவே இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் கலவரமாக மாறி இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் கூடி தாக்குதலில் ஈடுபட்டதோடு கண்ணில் பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி தீயும் வைத்துள்ளனர்.
சில மணி நேரம் நீடித்த கலவரம் எஸ்.பி தலைமையிலான போலீஸ் படை வந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசிய பின்பு கட்டுக்குள் வந்துள்ளது. கலவரத்தில் திட்டமிட்டே முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டு தீக்கரையாக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே ஒரு குழு செயல்பட்டுள்ளது தெளிவாகின்றது.
நெல்லை மாவட்டம் மேற்கு பகுதியில் கலவரத்தை ஏற்படுத்த ஃபாசிஸ்டுகள் அவ்வப்போது முயன்று வருவதும், கடந்த காலங்களில் தென்காசியில் முஸ்லிம்கள் போன்று போலி தாடி, தொப்பி வைத்து குண்டு வைத்து கலவரம் ஏற்படுத்த முயன்றதும் குறிப்பிடத்தக்கது.
எனவே தான் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் தலித் - முஸ்லிம்கள் மத்தியில் பகையை ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனரோ என்ற சந்தேகம் வலுவாக ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் காவல்துறை இது விஷயத்தில் அதீத சிரத்தை எடுத்து கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலை ஏ.எஸ் இஸ்மாயில் தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும் தலித்கள் மற்றும் தலித் இளைஞர்கள் ஃபாசிஸ்டுகளின் வஞ்சக எண்ணத்திற்கு பலியாகி விடக்கூடாது என்றும், இது விஷயத்தில் கவனம் செலுத்தி முஸ்லிம் - தலித் ஒற்றுமையை பலப்படுத்த முஸ்லிம் மற்றும் தலித் தலைவர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் கேட்டுக்கொண்டதுடன் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.