முன்னாள் இஃவான் தலைவருக்கு யூசுஃப் அல் கர்ளாவி ஆதரவு
http://koothanallurmuslims.blogspot.com/2012/02/blog-post_8511.html
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் (இஃவானுல் முஸ்லிமூன்) முன்னாள் தலைவர் அப்துல் முனீம் அப்துல் ஃபத்தாஹ் எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிட மிகவும் தகுதியான நபர் என்று உலக புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், இஃவானுல் முஸ்லிமூனுக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம் என்றும் கர்ளாவி கூறினார். ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கர்ளாவி இதனை தெரிவித்துள்ளார். மே மாதம் இறுதியில் எகிப்தில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று எகிப்தின் அல் அஹ்ராம் பத்திரிகை நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.
அதிபர் தேர்தலில் சொந்த வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று இஃவானுல் முஸ்லிமூன் ஏற்கனவே அறிவித்துள்ளது. ஏதேனும் இஸ்லாமிய வாதிகளுக்கு அதிபர் தேர்தலில் ஆதரவு அளிக்கமாட்டோம் என்றும் அவ்வமைப்பு கூறியது. எகிப்தை இஸ்லாமிய கட்சிகள் கைப்பற்ற முயலுகின்றன என்ற பீதி கிளம்புவதை தடுக்கவே இத்தகையதொரு முடிவை இஃவான் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. ஆகையால் ஷேக் கர்ளாவியின் கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகமே. ஷேக் கர்ளாவி இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.