போலீஸின் சதித்திட்டத்தை முறியடித்த பாட்லா ஹவுஸ் மக்கள்
http://koothanallurmuslims.blogspot.com/2012/02/blog-post_18.html
போலி என்கவுண்டரில் அப்பாவி முஸ்லிம் மாணவர்கள் கொலைச் செய்யப்பட்டு பீதி மாறாத பாட்லா ஹவுஸில் நிரபராதிகளான அப்பாவி இளைஞர்களை நள்ளிரவு ஆபரேசன் மூலம் கடத்த முயன்ற டெல்லி போலீசாரின் சதித்திட்டத்தை பொதுமக்கள் முறியடித்து ஜாமிஆ நகர் காவல் நிலையத்தில் போலீசாரை ஒப்படைத்து 25-க்கும் மேற்பட்ட இளைஞர்களை விடுவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக மாறிய இச்சம்பவத்தில் இருந்து தலை தப்புவதற்காக டெல்லி போலீஸ் தலைமை எட்டு போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு சர்ச்சையை கிளப்பிய பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் சம்பவத்தை நினைவுக் கூறும் வகையில் நாடகீய சம்பவங்களுக்கு பாட்லா ஹவுஸ் சாட்சியம் வகித்தது.
பாட்லா ஹவுஸின் நஃபீஸ் சாலையில் போலீஸ் வேனில் வந்த பெண் போலீஸ் உள்ளிட்ட போலீஸ் குழு முன்னரே திட்டமிட்டது போல சில வீடுகளில் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்து இளைஞர்களை கைது செய்தனர்.
“நீங்கள் எல்லோரும் பங்களாதேஷை சார்ந்தவர்களா?” என கேள்வி எழுப்பி 25க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து போலீஸ் வேனில் ஏற்றிய வேளையில், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிலர் ஓடி வந்தனர். முதலில் வந்த சிலர் அருகிலுள்ள மஸ்ஜிதில் நுழைந்து மைக்கில், “போலீஸ் நமது பகுதியை சுற்றி வளைத்து நிரபராதிகளை பிடித்துச் செல்கிறார்கள்” என உரக்க சத்தமிட்டு கூறியதை கேட்டு மக்கள் வெளியே வந்து போலீஸ் வேனை சூழ்ந்தனர்.
“நாங்கள் டெல்லி பங்களாதேஷ் போலீஸ் பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்கள் பங்களாதேஷைச் சார்ந்தவர்கள் என்ற தகவல் கிடைத்ததால் கைது செய்தோம்” என்று போலீசார் விளக்கம் அளித்தனர். ஆனால், வேனில் அடைக்கப்பட்ட இளைஞர்கள், “போலீஸ் கூறுவது தவறு” என கூறி தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் இந்திய பாஸ்போர்ட்டுகள், தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள அடையாள அட்டைகள் ஆகியவற்றை காண்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசின் ஒரு பிரிவு ஏற்கனவே திட்டமிட்ட சதித்திட்டம் தான் இளைஞர்களை பிடித்த சம்பவம் என்பது மக்களுக்கு புரிந்தது. இளைஞர்கள் அனைவரும், பீகாரில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் டெல்லிக்கு வந்தவர்கள் என்பதும், அவர்களில் பெரும்பாலோர் தர்பங்கா பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதும் நிரூபணமானது.
பின்னர் ஜாமிஆ நகர் போலீஸ் ஸ்டேசனில் பொதுமக்கள் தொடர்புகொண்ட பொழுது, இத்தகையதொரு ஆபரேசன் குறித்து எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த மக்கள் போலீசாரையும், கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் அழைத்துக்கொண்டு ஜாமிஆ நகர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றனர். போலீஸ் கைது செய்தவர்களை பாட்லா ஹவுஸ் பகுதி மக்களிடம் ஒப்படைத்த ஜாமிஆ போலீஸ் ஸ்டேசன் அதிகாரிகள், வெளியிலிருந்து வந்து இளைஞர்களை அநியாயமாக கைது செய்த போலீஸாரின் நடவடிக்கையை குறித்து மேலதிகாரிகளுக்கு புகார் அளிப்பதாக உறுதி அளித்தனர்.
தொடர்ந்து அதிகாலை மூன்றரை மணியளவில் போலீஸ் ஸ்டேசனில் திரண்டிருந்த மக்கள் வீடு திரும்பினர். சில மணிநேரங்களில் எட்டு போலீசாரை சஸ்பெண்ட் செய்த உத்தரவை பாட்லாஹவுஸ் பகுதி மக்களிடம் போலீசார் தெரிவித்தனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின் பெயரால் அப்பாவி இளைஞர்களை கைது செய்ய போலீஸ் நடத்திய முயற்சியை பாட்லா ஹவுஸ் மக்கள் முறியடித்துள்ளனர்.