பள்ளிவாசல்களில் தாக்குதல்; தேவை உடனடி பரிகாரம்!
முஸ்லிம்கள் தங்களின் ஒப்பற்ற இறைவனை வணங்குவதற்காக எழுப்பிக்கொண்டவைகள் தான் பள்ளிவாசல்கள். இங்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமின்றி முஸ்லிம்கள் என்ற ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்று கூடுமிடம். இத்தகைய பள்ளிவாசல்கள் மீது அதுவும் தொழுகை நேரத்தில் தாக்குதல் நடத்துவது பல்லாண்டுகளாக நடைபெற்று வருவதும் , இந்த தாக்குதல்களின் பல நூறு பேர் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்திய சுதந்திர போராட்ட்டத்தின்போது ஜூம்மா மேடைகள் சுதந்திர தாகத்தை ஊட்டும் காரணியாக திகழ்வதை கண்ட வெள்ளையர்கள், ஒரு தொழுகையின் போது வெறியாட்டம் ஆடி முஸ்லிம்களை கொன்ற அந்த மஸ்ஜித் ‘கூன் மஸ்ஜித்’[ரத்தப்பள்ளி] என்று அழைக்கப்படுகிறது.
இலங்கையில் தமிழீழம் பெறப்போகிறோம் என்று புறப்பட்டு, தமிழ்பேசும் சக முஸ்லிம்களை பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த போது ரத்த சகதியாக்கிய புலிகளின்[?] சாகசத்தை, இன்றும் காத்தான்குடி பள்ளிவாசல் ‘கறைபடிந்த’ சான்றாக திகழ்கிறது.
பாகிஸ்தானில் அவ்வப்போது ஷியா-சன்னி பள்ளிவாசல்களில் தொழுகையின் போது குண்டுகள் வெடிப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. இதற்கு காரணம் இஸ்லாம் காட்டித்தராத பிரிவுகள் என்ற பெயரால் முஸ்லிம்கள் பிரிந்ததுதான்.
ஈரானில் சமீபத்தில் பள்ளிவாசலில் தொழுகையின்போது குண்டு வெடித்து பலர் பலியாகி, உடனடியாக சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரை பொது இடத்தில் தூக்கிலிட்டது ஈரான் அரசு.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் பள்ளிவாசல்களிலும், அஜ்மீர் தர்காவிலும் குண்டுகள் வெடித்து பலர் உயிரிழந்தனர். இந்த வழக்குகளில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தலையிலேயே குற்றமும் சுமத்தப்பட்டு இன்று இந்த வழக்கு நிலையும் ‘வெடிக்காதகுண்டு’ போல் அமைதியாக உள்ளது.
நேற்று தாய்லாந்தில் ஒரு பள்ளிவாசலில் தொழுகையின்போது புகுந்த ஒரு கும்பல் சரமாரியாக சுட்டதில்பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இவ்வாறாக உலகெங்கிலும் இஸ்லாமிய எதிரிகளின் இலக்காக திகழக்கூடிய பள்ளிவாசல்கள் விஷயத்தில் அந்தந்த நாட்டு அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை.குறிப்பாக இந்தியாவில் முக்கியமான கோயில்களுக்கு பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்களை நியமிப்பதோடு அது மட்டுமன்றி, கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தும் அரசு, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் கேமராக்கள் அமைப்பது இல்லை. ஆனால் முஸ்லிம்கள் நினைத்தால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் . பல லட்ச ரூபாய் செலவு செய்து பள்ளிவாசல் எழுப்புபவர்கள், சில ஆயிரம் செலவு செய்து கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பள்ளிவாசலில் அசம்பாவிதம் நடப்பதை பெருமளவு குறைக்கமுடியும். அப்படியே ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால்கூட கேமராக்களின் துணை கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து உலகுக்கு உணர்த்தமுடியும், அதோடு அடித்தவனும் முஸ்லிம்-அழுபவனும் முஸ்லிம் என்ற பாணியில் நம்மீதே காவல்துறை பழிபோடாமல் பாதுகாக்க முடியும். மேலும், சமுதாய வாலிபர்கள் அதிக அளவில் பள்ளிவாசலோடு தொடர்பில் இருக்கவேண்டும். சந்தேகப்படும் வகையில் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பள்ளிவாசல் கட்டுவதோடு நம்பணி நிறைவடைந்து விடாது. அங்கு இறைவனை வணங்க வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் நம்பணிதான் என்பதை சமுதாயம் உணரவேண்டும்.
Thanks : நிழல்களும்-நிஜங்களும் - முகவை எஸ்.அப்பாஸ்