மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்
உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் - கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.
பழமையானது - உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே.
இளமையானது - முகமது (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.
உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.
பல்கேரியாவில் தொழுகை
இத்தாலியில் தொழுகை
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகம் சி.என்.என். (CNN) இந்த தகவலை நமக்குத் தருகின்றது.
குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கறுப்பின அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்கள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவதை கண்டு வெதும்பி இஸ்லாம் கூறும் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை தழுவுகின்றனர்.
அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதே நிலைதான். கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்து சர்ச்சுகளுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே செல்கின்றது. இங்கிலாந்தில், சர்ச்சுகள் மூடப்பட்டு “பார்” களாக மாற்றப்படுகின்றன; அதே நேரம் பல சர்ச்சுகள் முஸ்லிம்களால் முழு நேர வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிவாசல்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாமே அதுமாதிரியான பள்ளிவாசலில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சென்றிருக்கும் போது, அங்கே ஜூம்ஆ தொழுதுள்ளோம்.
இஸ்லாம் தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பினும், ஓர் எல்லைக்குட்பட்டே வழங்கி உள்ளது; தனி மனித உரிமைகளை விட சமுதாயத்தின் உரிமைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றது. ஆனால், மேற்கத்திய உலகமோ சமுதாயத்தின் உரிமைகளை கண்டு கொள்வதே இல்லை. இதனை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் விளங்கலாம். ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆடையை அணிவது அவளுடைய தனி மனித உரிமை என்கிறது மேற்கு. அது, உடலின் பாகங்களை அசிங்கமாக வெளிப்படுத்தினாலும் சரியே; ஆனால், இஸ்லாமோ கீழ்த்தரமாக ஆடை அணியும் பெண்ணால், சமுதாயத்திற்கு தீங்கு விளையும்; தவறான செயல்களுக்கு தூண்டுதலாக அமையும்; அதனால், அப்பெண்ணின் தனிமனித உரிமையும் பாதிக்கப்படும்; ஆகவே மறைக்க வேண்டிய பாகங்கள் மறைக்கப்பட்டு, ஒரு பெண் இயங்குவதில் தவறில்லை என்று பொது நன்மையை நாடி கூறுகின்றது. இதே போன்றே ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் இதனை தனி மனித உரிமை என்கின்றனர்; ஆனால், இதனால் சமூக கட்டமைப்பு கெட்டு, சமுதாய ஒழுக்கம் தவறி, மாபெரும் அநீதி இழைக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இஸ்லாம் ஓரினச் சேர்க்கையை வேரோடு சாய்க்கின்றது. சமூக உரிமைகளை மதிக்கும் இஸ்லாத்தின் இக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மேற்கத்திய உலகம் மிக வேகமாக இஸ்லாத்தினை நோக்கி நெருங்கி வந்து கொண்டுள்ளது.
ஃபிரான்ஸில் ஹிஜாபுக்கான போராட்டக் காட்சி
(நீதிமன்றம் மூலம் ஹிஜாம் அணிய போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லிம் பெண் சபீனா பேகம்)
இவ்வாறு இஸ்லாத்தினை நோக்கி முஸ்லிமல்லாதோர் வரும் இவ்வேளையில், மேற்கத்திய முஸ்லிம்களிடையேயும் வெகுவாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஃபிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய முறைப்படி, தலையை மறைத்துக் கொண்டு (Headscarves) வருவதைத் தடுக்க சட்டம் இயற்றிய போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் இறங்கி தமது உரிமைக்குரிலை எழுப்பினர். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளான எகிப்து, குவைத், ஈராக், லெபனான் மட்டுமன்றி மேற்கத்திய உலகம் முழுமையாக, ஸ்வீடன், கனடா, பிரிட்டன், அமெரிக்கா என பல நாடுகளிலும் முஸ்லிம்கள் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள் நடத்தினர்.
“ நமக்குத் தேவை மாற்றம்” – (Change We need) என்ற தேர்தல் கோஷத்தை முன் வைத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பராக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த கறுப்பின முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தந்தைக்கும், வெள்ளை அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவராவார் இவர். இவர் முஸ்லிமாக வாழவில்லை எனினும், முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரித்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவிற்கு முஸ்லிம் பின்னணியிலிருந்து, அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிமகனாக ஆகியுள்ள நிகழ்வு கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகின்றது.