திருமண நோக்கம்
இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மனமுடிக்கப்படுகிர்ரால்: முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! அறிவிப்பவர் : அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி(எண் 5090)
மேற்கண்ட நபிமொழி திருமணம் முடிக்கும் நோக்கத்தைச் சுட்டிக்காட்டி அதில் எது சிறந்தது என்பதை எடுத்துரைப்பதோடு இன்னும் பல விஷயங்களையும் போதிப்பதை நன்கு சிந்தித்தால் உணரலாம். நடைமுறையில் ஒரு பெண் திருமணம் முடிக்கப்படும் பொழுது அவளின் அழகு, செல்வம், குடும்ப அந்தஸ்து, குணம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டதோ முக்கிய அம்சமாக கவனிக்கப்படுகிறது.
ஒரு முஸ்லிம் தனது மணவாழ்விற்கு துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது பெண்களை அவர்களின் செல்வத்திற்கோ, வம்சத்திற்கோ, அழகுக்கோ முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களின் மார்க்கப்பற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மணமுடிக்க தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்று இஸ்லாம் மேற்கண்ட நபிமொழி மூலம் வலியுறுத்துகிறது. இதில் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் படிப்பினை உள்ளது .
* ஒரு முஸ்லிம் தன் துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது இந்நபி மொழியை பேணி மேலோட்டமான உலகியல் ரீதியான காரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன் துணையை தேர்ந்தெடுப்பானாயின் அந்த திருமண வாழ்வு இறை அருள் நிறைந்ததாக இருக்கும்.
* ஒரு பெண் தன் திருமண வாழ்வு இறையருள் நிறைந்ததாக அமைய இறையச்சமுள்ள ஒருவரை தன் துணையாக அடையப்பெற வேண்டுமாயின் தான் மார்க்க கடமைகளை முறையாக இறையச்சத்துடன் கடைபிடித்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை இந்நபிமொழி பெண்களுக்குப் போதிக்கிறது.
* தன் மகளுக்கு இறையச்சத்துடன் கூடிய நல்ல கணவன் அமைய வேண்டும் என்றால் அவளை நல்ல குணத்துடன் மார்க்கப்பற்றுடன் மார்க்க அறிவு உள்ளவளாக வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையைப் பெற்றோர்களுக்கு ஏற்படுத்துகிறது.
* தன் மகள் நல்ல குணநலன்களுடன் மார்க்கப்பற்றுள்ளவளாக வளர வேண்டும் என்றால் அதற்கு முன்னுதாரணமாக தாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்; இல்லையென்றால் வளரும் தனது குழந்தை சிறந்தவளாக வளர சாத்தியம் இல்லை என்பதனை அவர்களுக்கும் நினைவுறுத்துகிறது.
* தான் சிறந்த குணநலன்கள் கொண்ட மார்க்கப் பற்றுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் தானும் மார்க்கப் பற்றுள்ளவனாக வாழ வேண்டும் என்று ஆண்களுக்கும் போதிக்கிறது.
* தன் மகனுக்கு மார்க்கப்பற்றுள்ள பெண் வாழ்க்கை துணையாக அமைய வேண்டும் என்றால் நாம் நம் மகனை மார்க்கப்பற்றுடன் சிறந்தவனாக வளர்க்க வேண்டும் என்று ஆணின் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்துகிறது.
* அதே போல் தன் மகன் மார்க்கப்பற்றுடன் வளர வேண்டும் என்றால் நாம் மார்க்கப்பற்றுடன் வாழ்ந்து குடும்பத்தில் இறையச்ச சூழ்நிலையினை அவனுக்கு உருவாக்கித்தர வேண்டும் என்று பெற்றோர்களுக்கு உணர்த்துகிறது.
* இறையச்சத்திற்கு அவசியமான மார்க்க ஈடுபாடு, மார்க்க விருப்பம், மார்க்க அறிவு போன்றவற்றை அதிகரிக்கச் செய்யும் நிகழ்ச்சிகள், சாதனங்கள், நூல்கள், ஒலி/ஒளி நாடாக்கள், தட்டுக்கள் என்று தமது செல்வம் மற்றும் நேரத்தை மார்க்க காரியங்களில் செலவிடுதல் அவசியம் என்ற சிந்தனையை ஆண்-பெண் என்ற பாகு பாடின்றி சமுதாயத்தின் அனைத்து வர்க்கத்தினருக்கும் அவர் தாயாகவோ, தந்தையாகவோ, மகனாகவோ, மகளாகவோ யாராக இருந்தாலும் இது அவசியம் என்ற பேருண்மையையும் இந்த நபிமொழி உணர்த்தி நிற்கிறது.
ஒருவர் மார்க்கக் கடமைகள் எனும் போது வெறுமனே வணக்கவழிபாடுகள் மட்டும் செய்துவிட்டு தன் மனம் போல் வாழ்ந்து வரலாம் என்ற எண்ணத்தை அவர் மனதிலிருந்து அகற்றி தீய பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள், வீண் விரயங்கள் அகற்றப்பட்ட ஒரு கட்டுப்பாட்டுடன், ஒழுக்கமான, ஆரோக்கியமான, அமைதியான வாழ்க்கையின் பால் தங்கள் வாழ்வை இட்டுச்செல்ல இது வழி காட்டுகின்றது என்பதால் இந்நபிமொழி முழு சமுதாயத்திற்கும் வழிகாட்டியாக அமைகிறது.
கவர்ச்சி, அழகுச் சாதனங்கள், அழகு நிலையங்கள், அழகுப் போட்டிகள் போன்றவைகளோ செல்வம், சொத்து, சுகச் சாதனங்கள் என்பதோ குல, இன, வம்ச பெருமைகளோ மார்க்கப்பற்றை விட மதிப்பிற்குரியதோ உயர்ந்ததோ அல்ல என்ற தெளிவினை இந்நபிமொழி ஏற்படுத்துவதனால் ஆக்கப் பூர்வமான வழிகளில் குடும்பம், சமூகம் முன் செல்ல பாதை அமைக்கப் படுகிறது.
நிலையற்ற அழகு, செல்வம், குலப்பெருமை போன்றவற்றை பெறுவதற்காக போட்டி மனப்பான்மையுடனும், பொறாமையுடனும் எவ்வித வரம்பும் கட்டுபாடும் இன்றி அவற்றை அடையும் வழிகளின் மாயையையும் அதன் மூலமாக செய்ய விழையும் தவறான செயல்களின் வாயில்களையும் இந்நபிமொழி அடைத்து நிற்கின்றது.
இதற்கும் மேலாக நமது சமூகத்தில் கண்ணீரால் தமது கனவுகளை கரைத்து வா(டு)ழும், திருமணம் எனும் மணத்தைச் சுவைக்க இயலாத எத்தனையோ அபலை குமர்களுக்கும், அவர்களைப் பெற்றெடுத்த பாவத்தை செய்த(?) அப்(பாவி) பெற்றோர்களுக்கும், அவர்களை ஈவிரக்கமின்றி வரதட்சணை (வாங்குதல்) எனும் பெயர் பெற்ற பயங்கர ஆயுதத்தால் (ரொக்கம், நிலம், பொன், பொருள், வீடு, வாகனம் , கணினி.....இத்யாதிகளால்) தாக்கும் (விலை) மாந்தர்களுக்கும் அதன் விளைவால் கடன், வட்டி, போதைப் பொருட்கள், மனநோய், பாலியல் குற்றஙகள்,விபச்சாரம், தவறான உறவுகள், தற்கொலை, கொலை... போன்ற தீமைகளுக்கு இறையச்சமின்றி விரைந்து செல்லும் மனஉறுதியற்றவர்கள், அதற்கு காரணமானவர்கள், இவற்றை கண்டும் காணாமல் வாழ்ந்துவரும் (கருத்தற்ற அகக்கண் இல்லாத) குருடர்கள்.. போன்ற அனைவருக்கும் இந் நபிமொழி திருமண நோக்கத்தின் இலக்கணத்தை போதிக்கும் கனிவானதொரு நல்லுபதேசமாகவும் அமைந்துள்ளது.
மார்க்கப்பற்று எனும் ஒளி உள்ளத்தில் குடி கொண்டு, அறியாமை இருளை அகற்றி, நேரான பாதையில் வெற்றி நடை போட்டு, இம்மை மறுமை ஈடேற்றம் பெற இறையச்சத்துடன் கூடிய தூய செயல்பாடுகளின் பால் அனைவரையும் கொண்டு சேர்க்கும் பாலமாக இந்நபிமொழி அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
எல்லாம் வல்ல ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒவ்வொருவரின் மார்க்கப்பற்றை அதிகப் படுத்தி அனைவரையும் தூய்மையான மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திருந்து வெற்றி பெற்றவர்களோடு இணைப்பானாக.
ஆமீன்..
ஆக்கம்: இப்னுஹனீஃப்