SDPI மாநில தலைவராக தெஹ்லான் பாகவி மீண்டும் தேர்வு

திருச்சியில் நேற்று (09.03.2013) துவங்கிய SDPI (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு நேற்று (10.03.2013)மாலையுடன் முடிவடைந்தது திருச்சி எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் KKSM.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்

இதில் கடந்த 2 ஆண்டுகளில் கட்சியின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வறிக்கையை மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து ஆய்வறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.ஆய்வறிக்கை சம்பந்தமாக பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாநில நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

இதன் பிறகு புதிய மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், கேரளா மாநில தலைவருமான வழக்கறிஞர் அஷ்ரஃப் இந்த தேர்தலை நடத்தினார்.

தேர்தல் முடிவுகளை தேசியத்தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டார்.மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு தேசியத்தலைவர் இ.அபூபக்கர் வாழ்த்துக்களை தெரிவித்து உரை நிகழ்த்தினார்.

மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்றைய அரசியலின் சூழலை பற்றியும்,கட்சியின் நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

இதனை தொடர்ந்து பொதுக்குழுவின் தீர்மானங்களை மாநிலப்பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் வாசித்தார்.

தீர்மானம் 1.

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் இலங்கை இராணுவம் இலட்சத்திற்கு மேற்ப்பட்ட தமிழர்களை கொன்றொழித்தது, மேலும் சர்வதேச போர் விதி முறைகளை பல்வேறு விதங்களிலும் இலங்கை அரசும் இலங்கை இராணுவமும் மீறி உள்ளது. பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது.

இதற்கான பல்வேறு ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இறுதி போருக்கு பிறகும் இன்று வரை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன.இந்நிலையில் ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இலங்கையின் இனப்படுகொலைக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக சர்வேதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அமெரிக்காவும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

இச்சூழலில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்திலும்,டெல்லியிலும்,எஸ்.டி.பி.ஐ கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது.எனவே இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறலுக்கு எதிராக சர்வேதேச விசாரணையை ஐக்கிய நாட்டு சபை நடத்த வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐ.ந வின் மனித உரிமை கூட்டத்தில் இந்தியா அதற்காக ஒரு தீர்மானத்தை முன் மொழிய வேண்டும் எனவும், இலங்கைக்கு எதிராக வரும் தீர்மானங்களை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2.

நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் மது மூல காரணமாக உள்ளது. வயது, பாலின வேறுபாடில்லாமல் எதிர்கால இளைய தலைமுறையின் வாழ்க்கை மதுவினால் சீரழிந்து வருகிறது.மதுவினால் பெண்கள் பல வித துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும்,சமூக நல அமைப்புகளும் கடுமையாக போராடி வருகிறது.ஆனால் இதன் பிறகும் தமிழக அரசு சில ஆயிரம் கோடி வருமானத்துக்காக மதுபான கடைகள் நடத்துவது வன்மையாக 
கண்டிக்கத்தக்கது.மதுக்கடைகளால் அரசுக்கு வரும் வருமானத்தை விட,மதுவினால் ஏற்படும் சட்ட ஒழுங்கு சீரழிவை சீர் செய்ய அரசு செய்யும் செலவு மிக அதிகம்.தமிழகத்தில் மதுவினை தடைசெய்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று அரசு கூறும் காரணம் ஏற்புடையது அல்ல.மேலும் பிற மாநிலங்களில் லாட்டரிக்கு தடையில்லாத சமயத்தில் தமிழகத்தில் லாட்டரியை தடை செய்தது தமிழக அரசு. இதனை போலவே பிற மாநிலங்களை காரணமாக கூறாமல் தமிழகத்தில் உடனடியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3.

காவிரி நதிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 16 வருடங்கள் விசாரணைக்கு பின்னரே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது .நமது கோரிக்கையை விட குறைவாக தண்ணிர் வழங்க நடுவர் மன்றம் உத்தரவிட்டாலும் தமிழகத்தின் காவிரி நீர் உரிமைக்கு ஒரு சட்ட பாதுகாப்பை இந்த தீர்ப்பு வழங்கியது .ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆன பிறகும் மத்திய அரசு அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் கர்நாடகாவிற்கு சாதகமாக காலம் தாழ்த்தி வந்தது.எனவே தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அரசியல்கட்சிகளும்,விவசாய சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இதனால் தமிழக அரசு இந்த விவகாரத்தை உச்சநீதி மன்றத்திற்கு எடுத்து சென்றதால் உச்ச நீதிமன்ற உத்தரவிற்கிணங்க நிர்பந்தமான நிலையில் அரசிதழில் வெளியிடும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது .இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.மேலும் இதற்காக போராடி குரல் கொடுத்த அனைத்து கட்சிகள் மற்றும் இப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கும்,உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசிற்கும் இப்பொதுக்குழு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 4.

தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடகா திறந்து விடாததால் தஞ்சை டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி பொய்த்து போய் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் நஷ்டத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டது..

எனவே பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது.இதனை தொடர்ந்து தமிழக அரசு வறட்சி நிவாரண தொகையாக ஏக்கருக்கு ரூபாய் 15000 என அறிவித்தது.இது போதுமானதல்ல,மேலும் இந்த நிவாரணத்தொகையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை என்ற புகார்கள் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.எனவே தமிழக அரசு வறட்சி நிவாரணத்தொகையாக விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் 25000 ரூபாயும்,விவசாய தொழிலாளிகளுக்கு ரூபாய் 10,000 வழங்க வேண்டும்.மேலும் இந்த தொகை முழுமையாக விவசாயிகளுக்கு செனறடைய அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும்
மேலும் டெல்டா விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மத்திய அரசு இதனை பேரிடராக அறிவித்து ,தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக ரூபாய் 1000 கோடி வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு அரசினை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5.


வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுவது எனவும்,தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு மாநில செயற்குழுவிற்கு முழு அதிகாரத்தையும் அளிப்பது எனவும் இப்பொதுக்குழுவில் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 6.

அடுத்த இரண்டாண்டுக்கான மாநில செயற்குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநிலத்தலைவர்- K.K.S.M.தெஹ்லான் பாகவி-நெல்லை

மாநில துணைத்தலைவர்- S.M. ரஃபீக் அகமது-தேனி

மாநில பொதுச்செயலாளர்கள்:
M.முஹம்மது முபாரக் –நெல்லை , B.அப்துல் ஹமீது-இராமநாதபுரம்,
M.நிஜாம் முஹைதீன் -செங்கோட்டை

மாநில செயலாளர்கள்:

அமீர் ஹம்ஸா-சென்னை
நாஞ்சில் A.செய்யது அலி-கன்னியாகுமரி, 
V.M.அபுதாஹீர்-கோவை
T.ரெத்தினம்-சென்னை, 
அப்துல் சத்தார்-தஞ்சை

மாநில பொருளாளர்

A.அம்ஜத்பாஷா-சேலம்

மாநில செயற்குழு உறுப்பினர்கள்

வழக்குரைஞர் அப்பாஸ்-மதுரை, 
k.செய்யது இப்ராஹீம்-மதுரை
s.ஃபாத்திமா கனி-மதுரை, 
I.உஸ்மான்கான்-நெல்லை

தீர்மானம் 7.

அன்றாடம் மீனவர்கள் காரணமின்றி இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் படுவதும், சித்ரவதைச் செய்யப்படுவதும், மீனவர்கள் குடும்ப உறவுகளை இழந்து பரிதவிக்கும் நிலையும் தொடர்கதையாக உள்ளது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகும் நிலையாக மாறிவிட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே இந்நிலை மாறவேண்டுமெனில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்த மத்திய அரசு, மீண்டும் கச்சத்தீவை மீட்டு இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும்.

மேலும் தமது வாழ்வியல் தேவைகளுக்காக கடல் அட்டையினை பிடிக்கும் மீனவர்கள் மற்றும் கடல் பாசியினை சேகரிப்பவர்கள் மீது கைது நடவடிக்கைகள் தொடர்கிறது. ஏற்கனவே மீன் பிடித்தொழில்கள் பல காரணங்களால் நலிவடையும் நிலையில் உள்ளது.இந்நிலையில் பல்லாயிரம் மீனவ மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடல் அட்டை மற்றும் கடல் பாசி ஆகியவற்றை மத்திய அரசு தடை செய்ததனால் மீனவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.எனவே மீனவர்களின் நலன் கருதி உலகில் பல நாடுகளில் தடை செய்யப்படாத கடல் அட்டை மற்றும் கடல் பாசி மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது

தீர்மானம் 8.

கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் உடனடி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மிஸ்ரா கமிஷன் மத்திய அரசுக்கு அளித்தது.ஆனால் மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் அடிப்படையில் மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு உடனே வழங்க வேண்டும்

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முஸ்லிம்கள் தமிழகத்தில் 7 சதவீதம் உள்ளனர்.உண்மையில் முஸ்லிம்களை முன்னேற்றுவதற்கு இடஒதுக்கீடு தேவையெனில் 7 சதவீதம் பூரண இடஒதுக்கீடு வழங்குவதே நியாமானதாகும். எனவே முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 7 சதவீதம் இடஒதுக்கீடும்,மத்தியில் 10 சதவீதமும் வழங்க வேண்டும் என்று மத்திய ,மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது

தீர்மானம் 9.

இந்தியாவில் நடக்கும் பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு உடனடியாக யாரையாவது குறிப்பாக முஸ்லிம்களை குற்றப்படுத்துவதனால் உண்மைக்குற்றவாளிகள் தப்புவதற்கு அரசே காரணமாகிறது.ஏனெனில் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளை தீவிர விசாரணைக்குட்படுத்தும் போது சங் பரிவார அமைப்புகளை சார்ந்தவர்கள் கைதாகியுள்ளனர்.எனவே தீர விசாரணை செய்து செய்தி வெளியிடுமாறும்,உண்மை குற்றவாளிகளை கைது செய்ய காவல் துறைக்கு அறிவுறுத்துமாறு மத்திய மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10.

தமிழகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் தலை தூக்கியுள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய வன்முறைகள் இதனை உறுதி படுத்துகிறது.ஆதிக்க சக்திகளின் திட்டமிட்ட தாக்குதல்களினால் இதுபோன்ற வன்முறைகள் தொடர்கிறது.கலப்பு திருமணத்தை காரணம் காட்டி கடந்த சில நாட்களுக்கு தர்மபுரியில் 300க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.தமிழகத்தில் இருந்து சாதீய வேற்றுமைகள் முற்றிலும் ஒழிய வில்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு சமூக விரோதிகளின் மீது கடுமையான, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

இறுதியாக மாநில செயலாளர் ரெத்தினம் அண்ணாச்சி நன்றி கூறினார்.

Related

முக்கியமானவை 8569031757922025998

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item