சமூக நீதிக்கான பிரச்சாரம் தமிழகத்திலும் தொடங்கியது


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார துவக்க பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடைபெற்றது.

வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்  தேசத்தின் தலைநகரமான புதுடெல்லியில் ராம்லீலா மைதானத்தில் தேசத்தை நீதியால் கட்டமைப்போம் என்ற முழக்கத்தோடு "சமூக நீதி மாநாடு" (SOCIAL JUSTICE CONFERENCE ) நடக்க‌ இருக்கின்றது. இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தையும் அதன் செய்தியையும் இந்தியாவில் பட்டித்தொட்டி எங்கும் கொண்டு செல்லும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இதன் பிரச்சாரம் வீரியத்துடன் நடைபெற்றுவருகிறது.




தமிழகத்திலும் இதன் பிரச்சாரம் நேற்று முதல் தொடங்கியது. திருவல்லிக்கேணி பகுதி ஐஸ்ஹவுஸ் ஷேக் தாவூது தெருவில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள். தலைமை தாங்கி உரை நிகழ்த்திய மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் கூறும்போது இன்றைய தினத்தில் பிறப்ப‌டுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்திற்கு எதிராக நடக்கும் அநீதிகளை புள்ளிவிபரங்களோடு எடுத்துக்கூறினார். அனைத்து மக்களுக்கும் சம நீதி என்ற இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டத்தின் விதிமுறைகள் வெறும் ஏட்டளவில் தான் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ‌சிறுபான்மை மக்களின் நிலையை அறிந்து கொள்ள மத்திய அரசு எண்ணற்ற கமிஷன்களை ஏற்படுத்தியிருந்தும் அந்தந்த கமிஷன்கள் தங்களது அறிக்கையை சமர்பித்த பின்பும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையை எடுக்காததும் நீதி மறுக்கப்படுவதற்கான ஒரு செயலேயாகும் என்றும் கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொருளாளர் வழக்கறிஞர் கே.பி.ஷரீஃப் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இந்திய அரசியல்வாதிகளால் மக்கள் எந்தளவிற்கு சிரம்மபடுகிறார்கள் என்பதை எடுத்துக்கூறினார். பெரும்பாலும் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் தான் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகிறது எனக் கூறினார்.


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் உரை நிகழ்த்தும் போது வரலாறுகளில் முஸ்லிம்களின் தியாகத்தை பற்றி சாட்சிக் கூறினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தற்போது நீதிக்கான போராட்டத்தை துவக்கியுள்ளது. இதற்காக அவர்கள் நிறைய தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். அதற்கு மதிமுக எப்போதும் ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.

ஜமிய்யத்துல் உலமாயே ஹிந்தின் பொதுச்செயலாளர் மன்சூர் காஷிஃபி அவர்கள் உரை நிகழ்த்தும் போது பாராளுமன்றத் தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்ட அஃப்சல் குருவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பும், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜித் தீர்ப்பும் முஸ்லிம் சமூகத்திற்கு நீதி மறுக்கப்பட்டு வருவதற்கு சாட்சியாகும் என்று குறிப்பிட்டார்.

இறுதியாக உரை நிகழ்த்திய எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தும் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 2007ஆம் ஆண்டு பெங்களூரில் வலிமையான இந்தியாவை உருவாக்க மாநாட்டை நடத்தியது அதன் விளைவாக இன்று வட இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் வேகமாக இன்று கால்பதித்து வருகிறது. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் "தேசிய அரசியல் மாநாட்டை" நடத்தியது. இதன் விளைவாக இன்று சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றினைந்து  சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) என்னும் அரசியல் பேரியக்கம் உருவாக அடித்தளமாயிருந்தது. தற்போது தேசத்தை நீதியால் கட்டமைப்போம் என்ற முழக்கத்தோடு தலை நகராமாம் புதுடெல்லியில் நடக்க இருக்கும் மாநாடு ஒரு வரலாற்று திருப்புமுனையாக திகழும் என்பதாக கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சென்னயில் நல்ல மதிப்பெண் பெற்று கல்வியை தொடர முடியாத ஏழை மாணவர்களுக்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் உதவித்தொகையினை வழங்கினார். இறுதியாக சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த பொதுக்கூட்டம் நிறைவுற்றது.. பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.‌





படிப்பு உதவித்தொகை (ஸ்காலர்ஷிஃப்) வழங்குகிறார் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில்

Related

SJC 8875030637661686527

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item