கர்நாடகா: இந்துத்துவாவின் மூன்றாவது சோதனைக் களம்

“முதலில் கொல்; காரணங்களைப் பிறகு உருவாக்கிக் கொள்ளலாம்”. இதுதான் தற்போது சங்பரிவாரத்தைச் சேர்ந்த இந்து வெறியர்களின் பிரகனப்படுத்தப்படாத தாரக மந்திரம். ஒருவனைக் கொல்வதற்கு அல்லது கொலை வெறியுடன் தாக்குவதற்கு அவன் ‘இந்து அல்லாதவன்’ என்ற ஒரு காரணம் மட்டும் போதும் எனும் முடிவுடன் தங்கள் அழிப்பு வேலைகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள். குஜராத், ஒரிசாவைத் தொடர்ந்து இவர்களுடைய பார்வை தற்போது கர்னாடகாவின் மீது விழுந்திருக்கிறது.


மதப் பிரச்சினைகள் பெரிய அளவில் தலை தூக்காத தென் மாநிலங்களில் தங்கள் அமைப்புகளைப் பலப்படுத்த சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த இந்துத்துவ அமைப்புகளுக்கு கர்னாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் பெரிய உத்வேகம் கிடைத்துள்ளது. இதுதான் சரியான நேரம் என்று முடிவுகட்டி தீவிரமாகக் களத்தில் குதித்துள்ளனர். தென் மாநிலங்களை இந்துத்துவப்படுத்தும் முயற்சிகளுக்கு உரிய புதிய களமாக கர்னாடக மாநிலம் கிடைத்து விட்ட உற்சாகம் இவர்களிடம் சமீபகாலமாகவே தென்படுகிறது.பொதுவாகவே கடந்த இருபதாண்டுகளில் கர்னாடகாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் இந்து வெறியர்களின் பார்வை கர்னாடகாவின் மீது திரும்பியிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். பா.ஜ., ஆட்சியின் முதல் இரண்டு மாதங்களில் கிறித்தவர்கள் மீது மட்டும் இந்துத்துவ அமைப்புகள் 56 முறை தாக்குதல் நடத்தியிருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்தத் தாக்குதல்களின் போது காவல் துறையும் வன்முறையாளர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளது.


ஒரிசாவில் கிறித்தவர்கள் மீதான தாக்குதலையடுத்து, கர்னாடகாவில் சிறுபான்மைச் சமூகத்தினர் மீதான தாக்குதல் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதல்களை கர்னாடக அரசு கண்டு கொள்ளாது என்னும் அபரிமிதமான நம்பிக்கை சங் பரிவாரங்களிடம் வேரூன்றியுள்ளது. இந்த நம்பிக்கையை அவர்களிடம் உண்டாக்கும் விதமாக எடியூரப்பா பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்து மதவாத அமைப்புகளைச் சேர்ந்த பலர் மீதான காவல்துறை வழக்குகள் பலவற்றைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார். காவல் துறை மற்றும் ஆட்சித்துறையில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு எந்தத் தடையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகச் செய்யப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் இவை.


கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி பெங்களூருவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை முன்வைத்து இந்துத்துவ அமைப்புகளால் மதவெறிப் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. கர்னாடகாவில் தங்களுடைய செயல்பாடுகளுக்குத் தலைமையகமாக இந்து வெறி அமைப்புகள் தேர்வு செய்திருப்பது மங்களூர் மாவட்டத்தை. கடந்த சில மாதங்களாகவே இந்த மாவட்டம் மதப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறது.


சமீபத்தில் மங்களூர் அருகே புத்தூர் எனும் இடத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்த 3 மாணவர்களை பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த இந்து வெறிக் கும்பல் ஒன்று வழிமறித்து கொலை வெறியுடன் தாக்கியுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளுடன் பயணம் செய்த அந்த மாணவர்களை இஸ்லாமியர்கள் என்று நினைத்து அவர்கள் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மதக் கலவரமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து பஜ்ரங் தளம் பந்த் நடத்தியது. இதனால் அந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


மங்களூர் எனும் பனிப்பாறை முனை:
இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களுடன் பழகும் பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது கொஞ்சகாலமாகவே மங்களூரில் அதிகரித்து வருகிறது.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஏழு முறை இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. வடமாநிலங்களில் பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளைப் போன்று கர்னாடகாவில் சங் பரிவாரங்களின் பிரதிநிதியாக ‘ஸ்ரீராம் சேனை’ எனும் இந்துத்துவ பாசிஸ அமைப்பு உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பு மிகத் தீவிரமாக செயல்படுவது மங்களூரில்தான். சமீபகாலமாக கர்னாடகாவில், குறிப்பாக மங்களூர் வட்டாரத்தில் இந்து மத அமைப்பினர் நடத்தி வந்த அடாவடித் தனங்களின் தொடர்ச்சியாகவே மாணவர்கள் மீதான தாக்குதல் நிறைவேறியுள்ளது. இந்த தாக்குதல்களில் முன்னிலை வகிப்பது ஸ்ரீராம சேனை.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தங்களுக்கும் ராம சேனை அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்திருந்தாலும் இவர்கள் எல்லோருமே இந்துத்துவம் எனும் ஒரே குட்டையில் ஊறியர்வகள்தான்.


கடந்த மாதம் மங்களூரில் ‘அம்னீசியா’ எனும் உற்சாக விடுதியில் ஆபாச நடனமாடியதாக இளம் பெண்களைக் கொலை வெறியுடன் தாக்கினர் ஸ்ரீராமசேனை அமைப்பினர். உடனடியாக எழுந்த பலத்த கண்டனங்களையடுத்து இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை மாநில அரசு கைது செய்தது. இதனையடுத்து அந்த அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகளும் லாரிகளும் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டன. பின்னர் எதிர்பார்த்தது போலவே இந்த சட்ட விரோத வன்முறைச் சம்பவத்தில் கைதான அனைவரும் நான்கைந்து நாட்களுக்குள்ளாகவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


இந்தச் சம்பவம் தொடர்பாக கர்னாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அறிக்கை சேனையின் செயலை நியாயப்படுத்துவது போலிருந்தது. எல்லோரும் ஸ்ரீராமசேனையின் செயலைக் கண்டித்துக் கொண்டிருக்க, அவர் மட்டும் ‘இத்தகைய ஆபாச நடனங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது’ என்றார். அதாவது சிக்கலுக்கு முக்கியக் காரணம் ஸ்ரீராமசேனையினர் அல்ல; ஆபாச நடனமாடிய பெண்கள்தான் என்பதே அவருடைய வாதம். ஸ்ரீராமசேனையின் தலைவரான பிரமோத் முதாலிக், ‘கர்னாடக முதலமைச்சர் என்னுடைய நல்ல நண்பர்’ என்று கூறி தனக்கும் மாநில அரசுக்குமான உறவை தன் வாயாலேயே காட்டிக் கொடுத்தார்.தங்களை இந்தியக் கலாச்சாரக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் இந்துத்துவ அமைப்பினர் உண்மையில் கலாச்சாரம், பண்பாடு போன்ற கற்பிதங்களையெல்லாம் பெண்கள் மீதே திணித்துப் பார்க்கின்றனர். நடனமாடிய பெண்கள் குற்றவாளிகள் என்றால், அதைப் பார்த்து ரசித்த ஆண்கள் எல்லோரும் உத்தம புருஷராக இவர்களால் வணங்கப்படும் ஸ்ரீராமரின் அவதாரங்களா? இந்த நடனத்தை ஏற்பாடு செய்து நடத்திய விடுதி நிர்வாகம் மீது ஏன் இவர்களுக்குக் கோபம் உண்டாக வில்லை. காரணம் வெளிப்படையானது. இவர்கள் பெரும்பாலும் முதலாளிகளைப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. கர்னாடக மாநில உள்துறை அமைச்சர் இந்தச் சம்பவத்தில் ஸ்ரீராம சேனைக்கு உள்ள தொடர்பையே முதலில் மறுத்தார். விடுதி நிர்வாகம் மாமூல் தர மறுத்ததால் கோபப்பட்டு வன்முறையில் இறங்கிய சில ரவுடிகளின் செயல் என்று சப்பைக்கட்டு கட்டினார். பின்னர் உண்மைகள் வெளியானவுடன் மவுனமானார்.


சங் பரிவாரங்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாதவர்கள் யாரென்றால் சிறுபான்மையினரும் பெண்களும்தான். ‘பெண்களை அடக்கப்பட வேண்டியவர்கள்; சிறுபான்மையினர் அழிக்கப்பட வேண்டியவர்கள்.’ இதுதான் இந்து மதவெறியர்களின் அடிப்படைக் கொள்கை. சங் பரிவாரத்தின் கோபம் உண்மையில் நடனப் பெண்கள் மீதல்ல; ஒட்டு மொத்தமாக வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதே அவர்களுக்கு உள்ள கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் நடனப் பெண்களைத் தாக்கி எச்சரித்துள்ளனர்.


கலாச்சாரச் சீரழிவுக்கு எதிராக அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் போது வீட்டு வேலைகள் செய்யும் பெண்களின் படங்களை ஏந்தி வந்துள்ளனர். அதாவது பெண் என்பவள் தன்னுடைய பொருளாதாரத்துக்கு தந்தை அல்லது கணவனை நம்பி மட்டுமே இருக்க வேண்டியவள் என்பதே அவர்கள் முன்வைக்கும் சித்தாந்தம். கலாச்சாரத்தின் பெயரால் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களின் மூலமே தங்களுடைய இருப்பையும் வளர்ச்சியையும் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்.நடனப் பெண்கள் மீதான தங்களுடைய தாக்குதலுக்கு மாநில அரசு வக்காலத்து வாங்கியதையடுத்து அடுத்த நடவடிக்கையில் இறங்கியது ஸ்ரீராம சேனை. காதலர் தினம் கொண்டாடுவதைத் தடுக்கப் போவதாகக் கிளம்பினார்கள். பிப்ரவரி 14 அன்று பொது இடங்களில் நடமாடும் காதலர்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப் போவதாக அறிவித்தனர். கல்யாணத்திற்கு வழியின்றி ஏராளமான ஏழைப் பெண்கள் நரைத்த தலையுடன் காத்திருக்கும் நம்நாட்டில் காதலர்களுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைப்பதுதான் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதன் லட்சணமா? காதல் போன்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் இது போன்ற மதவாத அமைப்புகள் தலையிடுவது மிகவும் ஆபத்தானது.காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மட்டுமின்றி, தங்களுக்குப் பிடிக்காத விதத்தில் உடையணியும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதாக ராம சேனை அமைப்பு அறிவித்தது. இத்தகைய மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பது ஒட்டுமொத்த பாசிஸ சமூத்திற்கே இட்டுச்செல்லும். கடும் எதிர்ப்புகளையடுத்து கர்னாடக அரசு வேறு வழியின்றி காதலர் தினத்துக்கு முன் ஸ்ரீராமசேனையின் தலைவர் முதாலிக் உள்ளிட்ட பலரையும் கைது செய்தது. இதையடுத்து அந்த அமைப்பு தன்னுடைய போராட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.


ஸ்ரீராம சேனையின் அடாவடித்தனங்கள் அத்துடன் நிற்கவில்லை. சிறுபான்மையினருக்கு அடுத்தபடியாக அவர்களுடைய முதல் எதிரி கம்யூனிஸ்டுகள் தான். மங்களூர் அருகே கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,வான குன்னம்பு என்பவரின் மகளான சுருதியை அவருடைய நண்பரான ஷபீப் என்பவருடன் கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர். இக்கடத்தலுக்கான காரணம் எளிமையானது. இந்துப் பெண்ணான சுருதி, இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் பழகியதை மதவெறியர்களால் ஜீரணிக்க முடியவில்லை.ஸ்ரீராம் சேனையினரின் இந்த அடாவடித் தனங்களை மாநில அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது. இதற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி கர்னாடகாவில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கடுமையாகச் சாடினார். அங்கு ஆளும் பா.ஜ., ஆட்சி தாலிபான்களின் ஆட்சியைப் போல் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.கர்னாடகாவில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலரின் அடாவடித்தனத்தால் பதினைந்து வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மங்களூர் அருகே ஒரு ஊரில் அப்துல் சலீம் எனும் முஸ்லீம் இளைஞருடன் பேசிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்களை பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களுடைய பெற்றோர் அப்துல் சலீம் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அப்பெண்கள் அந்த இளைஞர் மீது எந்த வித குற்றச்சாட்டும் அளிக்க வில்லை. அவர்களில் ஒரு பெண் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து இறந்து போனார்.


காவிமயமாகும் கர்னாடகா:
இந்து மதப் பேரினவாதம் வடமாநிலங்களைத் தொடர்ந்து தென்மாநிலங்களை நெருங்கத் துடிக்கிறது. குஜராத், ஒரிசாவைத் தொடர்ந்து கர்னாடகாவை இந்து மதப் பேரினவாதப் பரவலுக்கான சோதனைக் களமாக உருவாக்கிக் கொண்டு வருகின்றனர். மங்களூர் சம்பவங்கள் இந்து மதப் பேரினவாத அரசியல் எனும் மிகப் பெரிய பனிப்பாறையின் வெளியே தெரியும் சிறிய முனை மட்டுமே. கர்னாடகாவில் மாநில அரசின் உதவியுடன் அவர்கள் அடையும் வெற்றிகள் அடுத்தடுத்த மாநிலங்களிலும் கால்பதிக்கத் தேவையான உந்துதல்களை அவர்களுக்கு அளிக்கும். இது மிகவும் ஆபத்தானது. தென்மாநிலங்கள் காவிமயமாவதைத் தடுக்க மதச்சார்பற்ற மற்றும் முற்போக்குச் சக்திகள் விழிப்புடன் போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மதவாத பாசிஸ அமைப்புகள் குறித்து மக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.


ஸ்ரீராம் சேனை போன்ற சட்ட விரோத நடவடிக்கைளில் ஈடுபடும் அமைப்புகளை தென் மாநில அரசுகள் உடனடியாகத் தடை செய்ய வேண்டும். கர்னாடகாவில் ஆளும் பா.ஜ., அரசிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதான். ‘அந்த அமைப்பைத் தடை செய்வதில் தங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை’ என்று சங் பரிவாரங்களே கழற்றி விட்டுள்ளன. ஒரு இணைய தளம் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான பொது மக்களும் ஸ்ரீராமசேனை போன்ற அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்து மத அமைப்புகளிடம் மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். இல்லையென்றால் தென்மாநிலங்களையும் குஜராத்தைப் போன்று மாற்றுவதற்கு அவர்கள் புதிய வெறியுடன் களமிறங்குவார்கள். அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது திராவிடர்களின் உண்மைப் பண்பல்ல.-

கணேஷ் எபி
நன்றி.கீற்று.காம்

Related

KARNATAKA 2489173376742732817

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item