லியாகத் அலி ஷாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

பாகிஸ்தானில் இருந்து வந்த செய்தியை ஒட்டுக்கேட்டபோது கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் லியாக் அலி ஷாவின் முன்னிலையில் கைப்பற்றப்படவில்லை என்றும், ஆகையால் இந்த வாதம் நிலைக்காது என்றும் நீதிபதி தெரிவித்தார். லியாகத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வரும் வேளையில் கைதுச் செய்யப்பட்டதாகவும், ஏதேனும் குற்றங்களை புரிந்தார் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும் லியாகத்தின் வழக்கறிஞர் அஸீம் அலி வாதிட்டார். விசாரணையை தொடருவதாகவும், தீவிரவாத தொடர்பு குறித்து இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று என்.ஐ.ஏவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, “என்.ஐ.ஏ விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; நீதிமன்ற அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது. ரூ. 20 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு ஒரு நபர் ஜாமீனும் தாக்கல் செய்து லியாகத் ஷா ஜாமீனில் செல்லலாம்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் மாதம் உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் நேபாள நாட்டு எல்லையில் இருந்து டெல்லி ஸ்பெஷல் பிரிவு போலீஸ் லியாகத் மற்றும் அவரது குடும்பத்தினரை கைதுச் செய்தது. விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதுக்கு அருகே உள்ள கெஸ்ட் ஹவுஸில் சோதனை நடத்தியதில் ஏ.கே.56 உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் ஜம்மு கஷ்மீர் அரசு அறிவித்துள்ள மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சரணடைய வந்துள்ளதாக லியாகத் கூறினார். இதனை ஜம்மு கஷ்மீர் போலீசும் உறுதிச் செய்தது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, ஜம்மு கஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் தலையீட்டால் மத்திய அரசு என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பை உமர் அப்துல்லாஹ் வரவேற்றுள்ளார். என்.ஐ.ஏவின் விசாரணை விரைவில் முடிக்கப்படும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை கஷ்மீர் பீப்பிள்ஸ் டெமோக்ரேடிக் பார்டியும் வரவேற்றுள்ளது. இத்தீர்ப்பு நீதிமன்ற நடவடிக்கைகளின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.