பெங்களுர் குண்டுவெடிப்பு கைது - கோவையில் இஸ்லாமிய இயக்க தலைவர்கள்
http://koothanallurmuslims.blogspot.com/2013/05/blog-post_17.html
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று காலை சென்னையில் இருந்து கோவை வந்தனர். அவர்களை கோவையில் உள்ள இஸ்லாமிய இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
பிறகு காலை சுமார் 11 மணி அளவில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞகர்களின் வீடுகளுக்கு என்ன நடந்தது என்ற விவரங்களை அறிய இயக்க தலைவர்கள் சென்றனர். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து முழுமையாக விவரங்களை அறிந்த பிறகு கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பிறகு கோவை பத்திரிக்கையாளர் சங்கத்தின் (PRESS CLUB) அலுவலகத்தில் வைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டமைப்பின் தலைவர் மவுலானா அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி மற்றும் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது அனீபா, தமுமுக மாநில பொதுச்செயலாளர் காஞ்சி ப. அப்துல் சமது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் A.S. இஸ்மாயில், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, வேல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜைனுலாபுதீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் இனாயத்துல்லா, மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் மாநில தலைவர் அ.ச. உம்மர் பாரூக் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கடந்த ஏப்ரல் 17 இல் பெங்களூர் நகரில் மல்லேஷ்வரம் பா.ஜ.க. அலுவலகம் அருகே வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த கிச்சன் புகாரி உட்பட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட கிச்சன் புகாரி உட்பட அனைவரும் போலியாகவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக நாங்கள் தமிழக காவல்துறை தலைவர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டோம். அவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் இந்த வழக்கில் உள்ள தொடர்பை உறுதிபடுத்த முடியவில்லை.
எங்களது கூட்டமைப்பின் சார்பில் கடந்த 10 ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தினோம். தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் கைது செய்யப்பட இளைஞர்களின் வீட்டில் ரெய்டு நடந்ததாகவும், வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இவ்வாறு தொடர்ச்சியாக இவ்வழக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளின் உண்மை நிலையை நேரடியாக கண்டறியும் வகையில் இன்று இக்கூட்டமைப்பின் தலைவர்கள் நேரடியாக கைது செய்யப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்று நடந்ததை கேட்டறிந்தோம். நாங்கள் விசாரித்தவரை கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கைது செய்யப்பட்டவர்கள் குற்றச்சாட்டை ஒத்து கொள்வதற்காக கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளில் ஏற்கனவே ரெய்டு நடந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நேற்றைய முன்தினம் மீண்டும் ரெய்டு என்ற பெயரில் அவர்களது வீடுகளில் போலிசாரே சில பொருட்களை கொண்டு வைத்து வைத்து பின்னர் எடுத்துச் சென்றுள்ளனர். அதை அவர்களது வீட்டினர் கடுமையாக ஆட்சேபம் செய்துள்ளனர்.
பொதுவாகவே பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஆரம்பம் தொட்டே மிகுந்த சந்தேகங்கள் இருந்து வருகிறது. தேர்தல் சமயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு என்பதால் இதில் ஏதேனும் அரசியல் ஆதாயம் உள்ளதா என்பது புரியாத புதிராகவே உள்ளது. மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட இளைஞர்கள் பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் குண்டு வெடிப்பு காரணம் காட்டி பலியாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழக மற்றும் கர்நாடக உளவுத்துறையினர் இணைந்தே இந்த சதியை அரங்கேற்றியதாக நாங்கள் கருதுகிறோம். குற்றவாளிகள் பயன்படுத்திய சிம்கார்டு ஆர்.எஸ்.எஸ். பிரமுகருடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏன் அவரைப்பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் அவரை ஏன் விசாரிக்கவும் இல்லை.
சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டிற்கு சென்றபின் நேரடியாக அவர்களிடம் கேட்டறிந்ததை கோவை மாநகர போலீஸ் கமிஷனரை உடனடியாக சந்தித்து நாங்கள் விசாரித்ததையும் எங்களது சந்தேகத்தையும் கேட்டோம்.
உள்ளூர் காவல்துறையும் கர்நாடக காவல்துறையும் இவ்விசயத்தில் நடந்து கொண்ட முறைகளையும் கமிஷனரிடம் முறையிட்டோம். குண்டு வெடிப்பு வழக்கில் போலியாக கைது செய்யப்பட்டவர்கள் கோவையை சேர்ந்தவர்கள். அவர்களை கர்நாடக போலீசார் கடுமையாக சித்தரவதை செய்துள்ளதையும் கோவை போலீஸ் கமிஷனருக்கு தெரிவித்தோம்.
மேலும் கமிஷனர் அவர்களுக்கு இதில் பொறுப்பு உண்டு என்பதையும் சுட்டிக் காட்டினோம். என்னால் எனது அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்வதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில நிர்வாகி நசீர், மற்றும் கோவை மாவட்ட அனைத்து இயக்கத்தின் நிர்வாகிகள், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் அஹமது கபீர், கவுன்சிலர் சாதிக் அலி, மமக மாவட்ட செயலாளர் பஷீர், பாப்புலர் பிரண்ட் மாவட்ட நிர்வாகிகள் ராஜா முஹம்மது, இப்ராஹீம், ஜலீல், ஹக்கீம், SDPI இன் மாவட்ட நிர்வாகிகள் முஸ்தபா, அஷ்ரப், ஜமாத்தே இஸ்லாமி மாவட்ட நிர்வாகிகள் இப்ராஹீம் உட்பட அனைத்து இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு 7 மணியளவில் கோவை டவுன் ஹாலில் உள்ள பார்க் இன் ஹோட்டலில் வைத்து கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்களையும் இயக்க நிர்வாகிகள் கலந்துரையாடல் நடத்தினர்.