தடை ஏற்படுத்தினால் ஹோர்முஸ் கடல் வழியை மூடுவோம்-ஈரான் எச்சரிக்கை
http://koothanallurmuslims.blogspot.com/2011/12/blog-post_7759.html
அணுசக்தி திட்டத்தின் பெயரால் மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது தடைகளை திணித்தால் வளைகுடா நாடுகளின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி வழியான ஹோர்முஸ் கடல் பகுதியை மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான் துணை அதிபர் அலி ராஹிமி இந்த எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு விடுத்துள்ளார்.இச்செய்தியை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான இர்னா வெளியிட்டுள்ளது.
கடல்வழியை மூடுவது எளிதானது என ஈரான் கடற்படை தலைமைத்தளபதி அட்மிரல் ஹபீபுல்லாஹ் ஸயரி கூறினார்.ஹோர்முஸ் கடல் வழி அருகே ஈரான் கடற்படை போர் ஒத்திகை நடத்தியபிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா பகுதியில் எண்ணெய் உற்பத்திச்செய்யும் நாடுகளான பஹ்ரைன், குவைத், சவூதி அரேபியா, யு.ஏ.இ, கத்தர் ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதிக்கு ஹோர்முஸ் கடல் வழியை நாடுகின்றன.உலகிலேயே கடல் வழியிலான எண்ணெய் வர்த்தகத்தின் 40 சதவீதமும் ஹோர்முஸ் வழியாகத்தான் நடைபெறுகிறது.ஆகையால் இப்பாதையை மூடினால் பெரும் எண்ணெய் நெருக்கடி உருவாகும்.
அணுஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ஈரானின் எண்ணெய் துறை மீது தடையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள வேளையில் ஈரானும் கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராகியுள்ளது.கடற்படை ஒத்திகை என்பது ஈரான் வழக்கமாக நடத்துவதுதான் என்றாலும், இம்முறை ராணுவத்தின் சக்தியை பிரகடனப்படுத்தும்விதமாக இந்த ஒத்திகை அமைந்தது.