அல் குர்ஆன் ஸுன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…!

இன்று முஸ்லிம் உம்மா தனக்குள் எழுச்சி பெற்றுகொண்டிருகின்றது இந்த இஸ்லாமிய உள்ளக எழுச்சிக்கு கடந்த 80 ஆண்டுகளாக பல இஸ்லாமிய இயக்கங்கள் அடித்தளமாக செயல்பட்டு கொண்டிருகின்றது இந்த எழுச்சிக்கு இரண்டு வகையான சிந்தனை வகுப்புகள் காரணமாக அமைந்துள்ளது ஒன்று ‘அக்கிலியாகள்’ என்று அழைக்கபடுபவர்கள் அல் குர்ஆன், அல் ஹதீஸ் என்ற இஸ்லாத்தின் இரண்டு அடிப்படைகளையும் சிந்தனை கண்கொண்டு நோக்கி அதனை விளங்கி செயல்படும் இஸ்லாமிய அடிப்படிகளை கொண்டுள்ள இயக்கங்கள்.

இவர்கள் இஸ்லாந்தின் அடிப்படையான விடயங்களை சமூகத்தின் முன்னுரிமையுடன் முன்வைத்து மற்ற இஸ்லாத்தின் அடிப்படைகளுடன் மோதாத விடயங்களை அடிப்படையான விடையங்களை முஸ்லிம்கள்  விளங்கி கொள்வதன் ஊடாக தெறித்துகொள்வார்கள் என்ற நிலைப்பாட்டில் செயல்படுபவர்கள் விரிவாக இவர்களில் இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற பாரிய சர்வதேச இயக்கம் , ஜமாஅதே இஸ்லாமி இயக்கம் மற்றும் ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற மேற்கு நாடுகளை தளமாக கொண்டு வேகமாக வளர்ந்து வரும் சர்வதேச இயக்கம் ஆகியவற்றை குறிபிடலாம்

இரண்டாவது வகுப்பினர் ‘நஸ்ஸியாக்கள்’ என்று அழைக்கபடுபவர்கள் இவர்கள் அல் குர்ஆன், அல் ஹதீஸ் என்ற இஸ்லாத்தின் இரண்டு அடிப்படைகளையும் அதன் வசனங்களை கொண்டு அதனை விளங்கி செயல்படும் இஸ்லாமிய அடிப்படைகளை கொண்டுள்ள இயக்கங்கள் இவர்கள் முதல் வகுப்பினர் போன்று பாரிய இயக்க கட்டமைப்புகளை கொண்டவர்கள் அல்லர் இவர்கள் பொதுவாக ஸலபிகள் என்று குறிபிட்டப்பட்டாலும் இவர்களின் மத்தியில் பெரியளவிலான வேறுபாட்டுடன் இரண்டு பிரிவினர் உள்ளனர்.

ஒன்று ஜிஹாதிய ஸலபிகள் இவர்கள் பெரும்பாலும் முதல் வகுப்பு பிரதான விடையமாக கருதும் கிலாபத் கோட்பாட்டுடன் உடன்படுபவர்கள் ஆனால் இவர்களின் பிரதான வழிமுறையாக ஆயுத போராட்டத்தை கடைபிடிப்பவர்கள் இவர்கள் அல்காதா அமைப்பின் போரியல் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டவர்கள் பல ஜிஹாதிய களங்களின் சொந்த காரர்கள் உயர்ந்த தியாகிகள் இந்த ‘நஸ்ஸியாக்களில் மற்ற பிரிவினர் தவ்ஹீத்வாதிகள் இவர்களிடம் பாரிய வலையமைப்பு கிடையாது தம்மை தவ்ஹீத்வாதிகள் என்று அழைத்து கொள்பவர்கள் தமிழ் நாட்டில் இவர்களிடம் வளர்ச்சி கானப்பட்டாலும் அதேவேகத்தில் பல கூறுகளாக உடைந்து வருபவர்கள் இவர்கள் ‘பித்அத்’ என்ற விடையத்துக்கு மிகவும் கூடிய அழுத்தங்களை கொடுத்து செயல்படுபவர்கள்

இந்த இரண்டு வகுப்புகளும் ‘அக்கிலியாகள்’,  ‘நஸ்ஸியாக்கள்’  முஸ்லிம் உம்மாவில் ஏற்பட்டு வரும் சர்வதேச எழுச்சிக்கு பங்களிப்பு ரீதியான பாரிய வித்தியாசங்களுடன்  காரணமாக உள்ளனர் இவர்களில் முதல் வகுப்பினர் நீண்ட கால திட்டங்கள் , படிப்படியான திட்ட நகர்வுகள், பலமான பாரிய நிலையான வேலைத்திட்டங்கள் ஆய்வுகள், அறிக்கைகள், தரவுகள் என்று செயல்படும் அதேவேளை முஸ்லிம் உம்மா குழப்பம் அடையாமல் கட்டம் கட்டமாகவும் படிப்படியாகவும் அடிப்படையான அல் குர்ஆன், அல் ஹதீஸ் சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைப்பவர்கள் இவர்கள் பெரும்பாலும் முஸ்லிம் உம்மா பிளவு படாமல் இலக்கு நோக்கி கவனமாக காய் நகர்த்துபவர்கள் என்று கூறலாம்.

இந்த பின்னியில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் அல் ஹஸனாத் சஞ்சிகையில் எழுதியுள்ள அல் குர்ஆன் ஸுன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…! என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை காத்தான்குடி இன்போ முஹம்மத் சாதிகீன் மற்றும் MBM. பைரூஸ் ஆகியவர்களின் உதவியுடன் பதிவு செய்திருந்தது அந்த கட்டுரையை நாம் இங்கு பதிவு செய்கின்றோம்.


அல் குர்ஆன் ஸுன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…!

-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி-

நேற்றுவரை சிரித்தார், கதைத்தார், அழைக்கும்போது வந்தார், நன்மைகளை வளர்ப்பதற்கு பரஸ்பரம் ஒத்துழைத்தார், செலவு செய்தார், உழைத்தார்.

இன்று அவரைப் பார்த்து பரிதாபப்படுவதா? அல்லது அவருக்கு நடந்ததை எண்ணிக் கவலைப்படுவதா? புரியவில்லை.

இன்று அவர் சிரிப்பதில்லை, கதைப்பதில்லை, அழைத்தால் வருவதில்லை சமூகத்தின் நிலை குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கோபப்படுவதாகவே உணர முடிகிறது. வெறுப்படைந்திருக்கிறார் முகத்தை திருப்பிக் கொள்கிறார் நாம் பேச முற்பட்டால் எரிச்சலடைகிறார். அவர் பேசத் துவங்கினால் விமர்சிக்கிறார் மனிதர்களை அவமதித்துப் பேசும் தொனியை இப்போது அவர் நன்கு கற்றிருக்கிறார். இவை யாவும் இப்போது அவருக்கு மிக உயர்ந்த நன்மைகளாகத் தெரிகின்றன.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

காரணம் இப்போது அவர் இஸ்லாம்(?) படித்திருக்கிறார். யாரோ அவரை அழைத்துக் கொண்டு போய் இஸ்லாம்(?) சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்த மாற்றம்.

நேற்று இவரிடம் இருந்த இஸ்லாம் நல்ல பல குணங்களை அவரிடம் வளர்த்து விட்டிருந்தது. அவர் பிற மனிதர்கள், அறிஞர்கள், இமாம்கள், இயக்கங்கள் மீது வெறுப்படைந்திருக்கவில்லை. மனிதர்களோடு நல்லவராக இருந்தார். இன்று அவருக்கு இஸ்லாம்(?) கிடைத்திருக்கிறது நேர்வழி பெற்றிருக்கிறார். அதனால் சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களையும் உலமாக்கள், அறிஞர் பெருமக்களையும் இவர் வெறுக்கிறார் விமர்சிக்கிறார்.

சகோதரர்களே, சகோதரிகளே! புரிகிறாதா? இன்று போதிக்கப்படும் இஸ்லாம்(?) எத்தகையதென்று?

எந்தக் காரணமும் இல்லாமல் நேற்றைய நற்குணங்களை இன்றைய இழி குணங்களாக மாற்றிவிடுகிறது இன்று பலரால் போதிக்கப்படுகின்ற இஸ்லாம். இது இஸ்லாத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் செய்யும் நன்மை என்று அந்த அழைப்பாளர்கள் நினைக்கிறார்கள்.

உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா?

சீரான நடத்தையும் நேரிய ஒழுக்கமும் உள்ளவர்கள் பிறரைப் பற்றித் தப்பாக நினைப்பதில்லை. ஏதாவது ஒரு நன்மையான காரியத்திற்கு அழைத்தால் உடனே சென்று விடுகிறார்கள். அழைப்பவர்கள் வெறுப்பு, குரோதம் போன்ற விஷங்களை தங்களது உள்ளங்களில் நிறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது இந்தத் தூய்மையான உள்ளம் கொண்டவர்களுக்குத் தெரியாது. நல்லவற்றைக் கேட்போமே என்ற தூய்மையான எண்ணத்தில் இவர்கள் அந்த அழைப்பாளர்களிடம் செல்கிறார்கள்.

அங்கு சென்றவுடன் இவர்களது இஸ்லாமிய ஆர்வத்தை பிழையான வழியில் மெதுவாக திசை திருப்ப ஆரம்பிக்கிறார்கள் அந்த அழைப்பாளர்கள். அவர்கள் கூறுகிறார்கள்:

“இஸ்லாத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது. (யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலுமல்ல) எம்மத்தியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களாலும் அவர்கள் சார்ந்த அறிஞர்களாலும்தான்.”

-என்று கூறி, மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) முதல் கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி வரை இஸ்லாமிய உலகில் செல்வாக்குப் பெற்று விளங்கும் மாண்புமிகு அறிஞர்களையும் உலகளாவிய இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகப் பாடுபடும் அமைப்புக்களையும் இஸ்லாமிய மரபுகள் அனைத்துக்கும் அப்பால் நின்று விமர்சிக்கவும் தூற்றவும் துவங்குகின்றனர்.

இஸ்லாத்தின் பரம வைரிகளாக செயற்படும் யூத, ஸியோனிஸ ஆதரவு சக்திகள் மீதும் குறிப்பாக பலஸ்தீன், கஷ்மீர், ஆப்கானிஸ்தான், ஈராக் முஸ்லிம்களைக் கொன்றொழிக்கும் அரக்கர்கள் மீதும் அரபு, முஸ்லிம் சமூகத்தை மத்திய கிழக்கில் இஸ்லாத்தின் எதிரிகளது நலன்களுக்காக அடகு வைத்திருக்கும் அமெரிக்காவின் அடிதாங்கிகளான பொம்மைத் தலைவர்கள் மீதும் காட்டாத வெறுப்பையும் குரோதத்தையும் இஸ்லாத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட இந்த உத்தமர்கள் மீது கொட்டித் தீர்ப்பதுதான் இந்த அழைப்பாளர்கள் போதிக்கும் இஸ்லாமாகும்.

இவர்கள் இஸ்லாமிய அமைப்புக்களையும் அறிஞர்களையும் விமர்சிப்பதற்கும் தூற்றுவதற்கும் கையாளும் உத்திகள் பண்பாட்டு வீழ்ச்சியின் இறுதி எல்லைக்கே இவர்கள் சென்று விட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன.

இஸ்லாமிய அறிஞர்களின் எழுத்துக்களிலிருந்தும் பேச்சுக்களிலிருந்தும் சிறு சிறு துண்டுகளை வெட்டி எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றை எழுத்துருவிலோ வீடியோ ஓடியோ ‘கிளிப்ஸ்’ களியோ தொகுத்து வைத்துக் கொள்கிறார்கள். அல்லது இவ்வறிஞர்கள் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளின் நிழற்படங்களைத் தேடி வைத்துக் கொள்கிறார்கள்.

இஸ்லாத்துக்காகவே தம்மையும் தமது வாழ்வையும் அர்ப்பணித்த அந்த அறிஞர்களின் வார்த்தையிலிருந்தும் வாழ்விலிருந்தும் சிறு சிறு துண்டுகளை முன் பின் தொடர்புகளற்ற விதமாகவும் பின்னணிகள் மறைக்கப்பட்ட நிலையில் வெட்டி வைத்துக் கொண்டு அவ்வறிஞர்களை மிக மோசமாக விமர்சிக்கிறார்கள். இந்தக் கீழ்த்தரமான குணத்தை பண்பாட்டு வீழ்ச்சியின் எல்லை என்று சொல்லாமல் வேறு எப்படி வர்ணிக்க முடியும்?

இந்தக் கீழ்த்தரமான அணுகுமுறையினூடாகவே இவர்கள் தங்களது உள்ளங்களில் இருக்கின்ற வெறுப்பு, குரோதம் எனும் விஷத்தை அப்பாவி உள்ளங்களுக்கும் பாய்ச்சுகிறார்கள். நாளடைவில் அந்த உள்ளங்களும் வெறுப்பு, குரோதங்களால் நிறைந்து வழிகிறது. முஸ்லிம் சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களை இன்முகத்துடன் பார்க்கவோ சிரிக்கவோ ஸலாம் சொல்லவோ உறவாடவோ முடியாதளவு பாரிய இடைவெளியை உள்ளங்களிடையே ஏற்படுத்தி சாகசம் புரிவதுதான் இவர்கள் வளர்க்கும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்களாகும். பிஞ்சு உள்ளங்களில்கூட இந்த விஷத்தைப் பாய்ச்சி சிறு வயதிலேயே உள்ளங்களை நாசமாக்கும் கைங்கரியத்தில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

விஷம் பாய்ச்சும் இந்த அழைப்பாளர்கள் உண்மையில் அப்பாவிகளா? அல்லது இஸ்லாத்தின் எதிரிகளது ஏஜன்டுகளா? இவர்கள் யூத, ஸியோனிஸ சக்திகளுக்கு எதிராக தங்களது வெறுப்பைக் காட்டாமல் யூத, ஸியோனிஸ சக்திகள் உலகில் யாரை அதிகம் வெறுக்கின்றனவோ அவர்கள் மீதுதான் தமது வெறுப்பை அதிகம் காட்டுகிறார்கள். உண்மையில் யார் இவர்கள்?

இவர்கள் ஏஜன்டுகளுமல்ல, அப்பாவிகளுமல்ல. இவர்கள் நோயாளிகள். இவர்களது நோய் என்னவென்றால், யார் மீதாவது வெஞ்சத்தை வரவழைத்து கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதுதான். வெறுப்புக் காட்டாமல், பகை பாராட்டாமல் இவர்களால் வாழ முடியாது. போதைவஸ்துக்கு ஒரு மனிதன் அடிமையாவது போல பகைக்கும் வெறுப்புணர்வுகளுக்கும் இவர்கள் அடிமையாகி விட்டார்கள். தூரத்தில் இருப்பவர்கள் மீது எப்போதும் வெறுப்புக் காட்டி பகை பாராட்ட முடியாது என்பதால் இவர்கள் பகை பாராட்டுவதற்கு யாரையாவது எப்போதும் தேடிக் கொண்டிருப்பார்கள். சிறிய முரண்பாடுகள் எழுந்தாலே போதும், உடனே இவர்களது உள்ளத்திலிருக்கும் பகையும் குரோதமும் வெகுண்டெழுந்து விடும். நேற்று மிக நெருக்கமாக இருந்தவர்களை இன்று பரம வைரிகளாக இவர்கள் ஆக்கிக் கொள்வார்கள்.

இத்தகையோர் தங்களுக்குள்ளேயே முரண்பட்டு, முரண்பட்டு விலகிச் செல்வதும் அவ்வாறு விலகிச் சென்ற ஒருவர் அடுத்தவரை பரம எதிரியாகப் பார்ப்பதும் வெளிப்படையான உண்மைகள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அணிகளையே உடைத்து தமக்குள் பிரிந்து எங்கனம் பரம வைரிகளாக மாறி இருக்கிறார்கள் என்பதை பெயர், ஊர்களோடு இங்கு சுட்டிக்காட்ட முடியும். எனினும், அதைத் தவிர்த்துக் கொள்கிறேன். காரணம் தஃவாக் களத்தில் உள்ள ஒரு நோயை சுட்டிக்காட்டவே நான் முயற்சித்துள்ளேன். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தாம் என பெயர் குறிப்பிட்டுப் பேசி ஒரு சாரார் மீது வெறுப்பு, குரோதம் எனும் விஷம் ஏற்ற நான் முயற்சிக்கவில்லை.

தஃவாக் களத்தில் நாளாந்தம் பல நல்ல மனிதர்கள் வெறுப்பு, குரோதம் என்ற நோயால் பீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அத்தகையோர் நேற்று வரை மிக அன்பாகவும் அந்நியோன்யமாகவும் இருந்தார்கள். இன்று அவர்கள் நல்லெண்ணத்துடனும் மலர்ந்த முகத்தோடும் மக்களை சந்திக்கத் திராணியற்றவர்களாக திசை மாறியிருக்கிறார்கள்.

இன்னும் சொன்னால், சிலர் தம்மை வளர்த்துக் கொள்வதற்கும் தமது அமைப்பு தொடர்ச்சியாக நிலைத்து நிற்பதற்கும் ஈமானின் அடித்தளமான அன்பை வளர்ப்பதற்குப் பதிலாக ஜாஹிலிய்யத்தின் அடித்தளமான பகையையும் குரோதத்தையும் வளர்க்கிறார்கள். அவர்கள் இந்தப் பகையையும் குரோதத்தையும் தமது வாரிசுச் சொத்தாக அடுத்த பரம்பரைக்கும் புதியவர்களுக்கும் கொடுத்துவிட்டே செல்கிறார்கள்.

மக்களிடம் இருக்கும் இஸ்லாமிய ஆர்வத்தைப் பிழையான வழியில் திசை திருப்புவதன் மூலமே இந்த அக்கிரமத்தை இவர்கள் அரங்கேற்றுகிறார்கள். இத்தகையோரிடம் கற்பதனைத்தும் இஸ்லாம் என நினைக்கிறார்கள் அப்பாவி நன்மக்கள். அவர்கள் தங்களது உள்ளங்களில் இதுவரை காலமில்லாத வெறுப்பும் குரோதத்தீயும் கொழுந்துவிட்டெரிவதைப் பிழையென உணருவதில்லை. மாறாக, அடுத்தவர்கள் மீது குறிப்பாக, இஸ்லாமிய அறிஞர்கள் மீதும் இஸ்லாமிய அமைப்புகள் மீதும் ஏற்பட்டுள்ள பகையும் வெறுப்பும் ஈமானிய வளர்ச்சி என்றே அவர்களுக்கு பாடம் புகட்டப்படுகிறது.

ஆக, ஈமானின் உச்ச கட்டத்துக்குத் தாம் சென்றுவிட்டதாக அவர்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். விஷம் பரப்பும் இந்த அழைப்பாளர்களிடம் இஸ்லாம் கற்கச் சென்றவர்கள் ஓரிரு மாதங்கள் செல்லும்போதே அடுத்தவர்களை கடுமையாக வெறுக்கத் துவங்குகிறார்கள். நாலு விடயங்களைக் கேட்டுப் படித்த தம்மைப் போன்றவர்கள் நேர்வழிக்கு வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நூற்களை எழுதிய பேரறிஞர்களை வழிகேடர்கள் என்றும் நரகவாதிகள் என்றும் இவர்கள் முத்திரை குத்துகிறார்கள்.

இஸ்லாம் கற்கப் போன இடத்தில் வெறுப்பையும் பகையையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்ட இது போன்ற அனுபவம் உங்களுக்குண்டா? சற்று சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறாயின் நீங்கள் கற்றது இஸ்லாம் அல்ல. மனிதர்களது உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி சந்தேகத்தைப் படர விட்டு வெறுப்பு, குரோதத்தை வளர்க்கும் ஷைத்தானின் வழிமுறையையே நீங்கள் கற்றிருக்கிறீர்கள். மனிதர்களிலும் ஜின்களிலும் இருக்கும் இத்தகைய ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு அல்லாஹ் எங்களை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறான்.

இஸ்லாம் கற்கப் போன இந்தக் கசப்பான அனுபவத்தைத் துறந்து ஓர் இனிப்பான அனுபவத்தை நோக்கி நீங்கள் வர விரும்பினால் ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தும் இஸ்லாமியக் கற்கை நெறிகளில் ஒரு முறை வந்து அமர்ந்து பாருங்கள். இஸ்லாத்தின் மகோன்னதங்களை உணரவும் அவற்றிலிருந்து தூரமாகியிருக்கும் சமூகத்தை அன்போடும் அனுதாபத்தோடும் நோக்கவும் அந்த சமூகத்தின்பால் உங்களுக்குள்ள பொறுப்புக்களை விளங்கவும் அந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கும் வழிகாட்டும். உங்களது இஸ்லாமிய ஆர்வத்தைப் பிழையான திசைகளில் திருப்பி உங்களது வளமான உள்ளத்தை வெறுப்பு, குரோதங்களால் நிரப்பும் இழிவான உத்திகளையோ அணுமுறைகளையோ நீங்கள் அங்கு சிறிதளவேனும் காண மாட்டீர்கள், அல்ஹம்துலில்லாஹ்.

அல்லது ஒரு சிலர் செய்வது போல வெளிப்படையாக அன்பையும் சகோதரத்துவத்தையும் பேசிவிட்டு திரைக்குப் பின்னால் பகையையும் குரோதத்தையும் வளர்க்கும் குரூர மனப்பான்மையையும் நீங்கள் அங்கு காண மாட்டீர்கள்.

களத்தில் பகை வளர்க்கிறார்களே விஷம் பரப்பும் அழைப்பாளர்கள், அவர்கள் குர்ஆனையும் ஸுன்னாவையும் பயன்படுத்தி இஸ்லாத்தின் எழுச்சிக்காக தாம் மட்டுமே அயராது உழைப்பதாகக் கூறி இஸ்லாத்தின் பெயராலேயே குரோதத் தீயை மூட்டுகிறார்கள். அந்தத் தீயால் நிச்சயம் எரியப்போவது அவர்களே!

இப்போதும் அவர்கள் அந்தத் தீயில் வெந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தில் தீ மூட்ட வந்தவர்கள் தமக்குள்ளேயே அந்தக் குரோதத் தீ படர்ந்திருப்பதையும் அதனால் தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் தீராத பகை கொண்டவர்களாக மாறியிருப்பதனையும் உணராதவர்களாக இருக்கிறார்கள்.

நாமும் அவர்களுக்கெதிராக குரோதத் தீயை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. அந்த நோய் எம்மைத் தொற்றாமல் பாதுகாத்துக் கொள்வதே எம்மீதுள்ள பொறுப்பும் கடமையுமாகும். அதனைச் சரியாக நிறைவேற்றி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வெறுப்பு, பகை, குரோதம் போன்றன வளராதிருப்பதற்கு ஒத்துழைப்போமாக....

OUR UMMAH

Related

unity 1816947582004926117

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item