பிப்ரவரி 17 இராமநாதபுரத்தில் நடந்தது என்ன?

முஸ்லிம்களின் இரத்தம் இந்திய நாட்டிற்கு மிக அவசிய தேவையாகி போனது. சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு, ஜனநாயக ரீதியில் முஸ்லிம்கள் வாழ்வதை இந்திய ஆளும் வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும், வந்தேறிகளான ஃபாஸிச ஆரிய வர்க்கமும் விரும்பவில்லை என்பது நன்றாக புலப்படுகிறது.

அடக்கி ஒடுக்கப்பட்டு, வஞ்சனைகளுக்கு உள்ளாகி, உரிமைகளையும், உடைமைகளையும், உயிர்களையும் இழந்து அகதிகள் நிலைக்கு தள்ளப்படும் ஒரு சமூகத்திற்குத்தான் அதன் வலியின் வேதனையும், வாழ்க்கையின் ரணங்களும் தெரியும். நிச்சயம் அது எதிர்வினையாற்ற அவர்களது வாழ்க்கைப் பாதையினை மாற்றி அமைத்து விடும் என்ற நியதி தெரியாத அறிவிலிகள் சட்டம் ஒழுங்கு என்ற போர்வையின் மாய தோற்றத்தில் வரம்புகளை மீறி சோதித்து பார்க்கின்றனர்.

நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ஆம் தேதியான திங்கள் கிழமை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் அனுசரிக்கப்பட்டது.

‘மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்’ என்ற முழக்கத்துடன் சீருடை அணிந்த செயல்வீரர்களின் ஒற்றுமை அணிவகுப்பு, மக்கள் பேரணி, பொதுக் கூட்டங்கள், சமூக சேவைகள் ஆகியன இத்தினத்தில் நடத்தபடுவது வழக்கம்.

தமிழகத்தின் இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட “ஒற்றுமை அணிவகுப்பு” (யூனிட்டி மார்ச்) மற்றும் பேரணியில் காவல்துறை அராஜகத்தை அரங்கேற்றியிருக்கிறது.

காவல்துறையிடம் முறையாக முன் அனுமதி பெற்று நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்படிருந்தன. ஆனால் அனுமதியளித்த நிகழ்ச்சிக்கு காவலர்களை ஆயுதங்களுடன் தயார் நிலையில் குவித்திருந்ததன் காரணம் ஒருவருக்கும் அப்போது புலப்படவில்லை. ஆனால் இன்று காக்கிகளின் போர்வையில் காவி கயமைத்தனம் உட்புகுந்திருப்பது நமக்கு தெளிவாகிவிட்டது.

சரியாக மாலை 4 மணி அளவில் ஒற்றுமை அணிவகுப்பு தொடங்க, அணிவகுப்பு வீரர்கள் மிடுக்கான நடையுடன் தங்களது பாதங்களை நகர்த்த ஆரம்பித்தனர். ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் காவல்துறை தாங்கள் திட்டமிட்டு வைத்திருந்த சதிவேலைகளை அரங்கேற்ற தொடங்கியது.

அணிவகுப்பு நடத்த அணுமதி இல்லை, நிறுத்த வேண்டும் என்ற கட்டளை அதிகார மமதையில் அநியாயம் செய்யும் காவிகளின் கட்டளை போல் இருந்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் தமக்கே உரிய கண்ணியத்துடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி இருப்பதை சுட்டிக்காட்ட விழைந்தனர். பேச்சுவார்த்தை என்ற சூழ்நிலையே அவசியம் இல்லை என்பது போல் திடீரென அங்கிருந்த மாடிகளின் மேல் இருந்து கற்கள் கூட்டத்தை நோக்கி வர ஆரம்பித்தன.

இந்தத் தருணத்திற்காக காத்திருந்தது போல் தயார் நிலையில் ஆவலுடன் ஆயுதம் தாங்கி காத்திருந்த மனிதத் தன்மையற்ற காவலர்கள் தாக்க ஆரம்பித்தனர். தங்களது முதல் அடியையே அங்கு நின்று கொண்டிருந்த மாநில மாவட்ட நிர்வாகிகளின் மேல் செலுத்தி, தங்கள் மிருகத் தாக்குதலைத் தொடுத்தனர்.

அதற்கு அடுத்தபடியாக, அவர்களுடன் இருந்த வழக்கறிஞர்கள், செய்தி ஊடகத் துறையை சேர்ந்தவர்கள் என முன்கூட்டியே முடிவு செய்திருந்தது போல் தொடர்ச்சியாக காவலர்கள் தங்கள் மிருகத் தாக்குதலைத் தொடர்ந்தனர்.

அடுத்த குறியாக, வெறி கொண்ட காவல்துறையின் ஒரு பிரிவு கூட்டத்திற்கு வந்திருந்த அப்பாவி பொதுமக்களின் மேல் பாய்ந்தது. அலறி அடித்து ஓடத் தொடங்கிய பொதுமக்களை விரட்டி விரட்டி அடித்து மண்டைகளை உடைத்து, மூச்சு, பேச்சு இல்லாத அளவிற்கு தரையில் விழுந்த நபர்களை தொடர்ச்சியாக தாக்கிய இவர்களது கேடுகெட்ட வீரத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

இந்தக் கலவர சூழலில் தங்களுக்கு இடப்பட்டிருந்த அணிவகுப்பு கட்டளைக்காக தங்களது பாதங்களை முன்னெடுத்து வைத்து நகர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் அணிவகுப்பு வீரர்களின் உறுதிக்கு முன்னால் காசுக்கும், காவிக்கும், பதவிக்கும் மாரடிக்கும் கயவர் கூட்டம் திகைத்துப் போனது.

முன்னேறிய கால்களையும், கம்பீரமாக வீசி நடந்த கைகளையும் முறிக்கும் அளவிற்கு தங்களது தடிகளை கொண்டு காவல்துறை வெறித் தாக்குதல் நடத்தியது.

ஆனால் வீங்கிய கால்களுடன், இரத்தம் சொட்டும் மண்டைகளுடன், தொடர்ச்சியாக இடியாய் விழும் தடியடிகளுக்கு மத்தியில் வீறு கொண்ட வேங்கைகளாய் தாங்கள் எடுத்த இலட்சிய வேட்கைக்காக, முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்திற்காக உறுதிகொண்ட நெஞ்சுரத்தோடு முன்னேறிக் கொண்டிருந்தனர் ஃபாஸிசத்திற்கு சாவுமணி அடிக்க வந்த பாப்புலர் ஃப்ரண்டின் அணிவகுப்பு வீரர்கள்.

அவர்களை பாதுகாப்பதற்காக தங்களது உயிரையும் கொடுப்போம் என்று உறுதிமொழி எடுத்தது போல் அங்கிருந்த பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் அணிவகுப்பு வீரர்களைச் சூழ்ந்து, தாங்கள் அடி வாங்கி காயங்களுடன் சரிந்த தருணத்தை காணும் எந்தக் கண்ணும் கண்ணீரை காணிக்கையாக்க மறுக்காது.

பெண்களையும், குழந்தைகளையும் தாக்க வேண்டும் என்று குறுமதி கொண்டு முன்னேறிய வெறி பிடித்த மிருகங்களிடமிருந்து அவர்களை பாதுகாக்க பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் தங்களது உடல்களை கேடயமாக்கி, தங்களது கரங்களுடன் கரம் கோர்த்து பாதுகாப்பு அரணை உருவாக்கி வாங்கிய அடிகளுக்கும், சிந்திய இரத்தத்திற்கும் சான்றுகளாய் மருத்துவமனைகளை நிரப்பியுள்ளனர்.

தங்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியையும் சமூகத்தின் கண்ணியத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தாங்கிக்கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் சகோதர்களைக் கண்டு தாய்மார்களும், சகோதரிகளும் கலங்கிய கண்களோடு, பதறிய நெஞ்சத்தோடு வல்ல அல்லாஹ்விடம் கையேந்திய அந்தக் காட்சி, எகிப்தில் நடக்கும் அநீதிக்கு எதிரான போராட்டதை நினைவு படுத்தத் தவறவில்லை.

இந்த நேரத்தில் உஹதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. உஹது போர்க்களம். எதிரிகள் முஸ்லிம்களை வெறி கொண்டு தாக்க ஆரம்பித்த தருணம். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்வதற்காக அம்புகளை அன்னாரை நோக்கி ஏவ ஆரம்பித்தனர். அவர்களை பாதுகாக்க 12 சஹாபாக்கள் சுற்றி நின்று பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றனர்.

அம்புகள் மின்னல் வேகத்தில் வர ஆரம்பித்தன. ரஸூல் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்து தூதரை நோக்கி வந்த அம்புகளை தனது கரங்களால் தடுக்க ஆரம்பித்தார் ஒரு மனிதர். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் வராலாற்றில் நீங்காமல் பதிவாகிப் போனது.

இதோ அந்த வார்த்தைகள்: “யாரசூலல்லாஹ்! என் கழுத்துக்கு பின்னால் உங்கள் கழுத்து இருக்கட்டும். என் நெஞ்சுக்கு பின்னால் உங்கள் நெஞ்சு இருக்கட்டும். அதையும் மீறி அம்புகள் வருமானால் அவை என்னையும், என் உடலையும், உயிரையும் துளைத்து கொண்டு உங்களை தொடட்டும்!”

தனது இரு கரங்களும் சிதைந்து, உடல் முழுக்க அம்புக் காயங்களுடன் நிலத்திலே சரிந்து இரத்த சாட்சியாக மாறிப் போன அந்த வீரத் தோழர் அபூ தல்ஹா (ரலி) அவர்களின் வாரிசுகள் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் நீருபித்து இருக்கிறார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (திருக்குர்ஆன் 61:8)

இது போன்ற அடக்குமுறைகளும், அநீதிகளும் உரிமைக்காக போராடும் போராளிகளின் வேகத்தையும், வீரத்தையும் அதிகப்படுத்துமே தவிர அடக்கி ஒடுக்க முடியாது என்பதை ஆளும் வர்க்கமும், ஆதிக்க வர்க்கமும், வந்தேறிகளான ஃபாஸிஸ்டுகளும் மறக்க வேண்டாம்.

வலசை ஃபைஸல்

 
 
 
 
 
 
 
 

Related

முக்கியமானவை 8879970227856006771

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item